Stock News: இந்திய பங்குச் சந்தையில் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி - என்ன காரணம்?
இந்தியா மீதும் தனது வரிவிதிப்பு ஆயுதத்தைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிற
இந்தியா மீதும் தனது வரிவிதிப்பு ஆயுதத்தைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.14) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 344.09 புள்ளிகள் உயர்ந்து 76,483.06 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 102.3 புள்ளிகள் உயர்ந்து 23,133.70 ஆக இருந்தது.
வர்த்தகத் தொடக்கத்தில் இருந்த ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எழுச்சி கண்ட பிறகு கடும் வீழ்ச்சியை நோக்கிய பங்கு வர்த்தகம் சென்றுகொண்டிருக்கிறது.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 431.54 புள்ளிகள் (0.57%) சரிந்து 75,707.43 ஆகவும், நிஃப்டி 175.60 புள்ளிகள் (0.76%) சரிந்து 22,855.80 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோவில் மட்டும் இறக்கம் நிலவுகிறது. சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகள் ஏறுமுகம் கண்டுள்ளன. அமெரிக்க அதிபர் தொடங்கிவைத்த வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கம் நீடிக்கிறது. உலக நாடுகளின் கரன்சி மதிப்புகளில் நிலையற்ற தன்மை, பொருளாதார வீழ்ச்சி அபாயம் முதலானவை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அதேவேளையில், இந்திய பொருட்களுக்கும் இறக்குமதி வரியை கூட்டுவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் உறுதியாக இருப்பது குறித்த தகவல் வெளியானதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகள் மளமளவென சரியத் தொடங்கின.
ஏற்றம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎல் டெக்னாலஜிஸ்
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
சன் பார்மா
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
ஆக்சிஸ் பேங்க்
விப்ரோ
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
மாருதி சுசுகி
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா உயர்ந்து ரூ.86.85 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan