டீ விற்பனையாளார் டு பேராசிரியர்: கேரள இளைஞர்களின் ‘நம்பிக்கை' ரபீக்!
உழைப்பால் முன்னேறிய இளைஞர்!
ரபீக் இப்ராகிம் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர். 34 வயதான அவர் இப்போது பல இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார். கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் ரபீக்.
இந்தப் பணிக்கு வருவதற்கு ரபீக் செய்தவை ஏராளம். ஆம், வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டே இந்த நிலைக்கு வந்துள்ளார். மலையக மாவட்டமான வயநாட்டின் ஓரத்தில் உள்ள எக்கோம் என்னும் கிராமம் தான் இவருக்கு சொந்த ஊர். இவரின் தந்தை இந்த ஊரில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.
ரஃபிக்கின் குழந்தை பருவம் மிகவும் வறுமையை கொண்டிருந்தது. ஆனால், வறுமையை வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும், விடா முயற்சியும் இருந்தது. வறுமையில் ஒருகட்டத்தில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை இருந்தது. தளராமல் தந்தையுடன் சேர்ந்து டீ விற்றார். ஜீப்பில் கிளீனராக, ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்தார். அந்தப் பணத்தில் விட்ட படிப்பை தொடர்ந்தார்.
முனைவர் பட்டம் பெறும்வரை தொடர்ந்து படித்தார். இப்படியாக விடா முயற்சியுடன் போராடி கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் ரபீக்.
”நான் ஒரு ஹீரோ இல்லை. ஆனால், என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதால், யதார்த்தம் கவனிக்கப்படாமல் இருக்கக்கூடாது," என்று தனது கதையை சொல்கிறார் ரபீக்.
எனது தந்தை இப்ராஹிம் மற்றும் தாயார் நபீசாவும் பள்ளிக்குச் சென்றது கிடையாது. என்றாலும் என்னையும் எனது சகோதரியையும் படிக்க வைத்தனர். பத்தாம் வகுப்பு வரை நாங்கள் படித்திருந்தோம். பத்தாம் வகுப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றபோதிலும் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. வசதியின்மையை உணர்ந்த நான் சிறு வேலைகளை செய்துகொண்டு படிப்பை தொடர வேண்டி இருந்தது.
ஒருகட்டத்தில் கடனில் சிக்கி தேநீர் கடையை விற்றார் எனது தந்தை. இதனால் குடும்ப வருமானம் என்பது இல்லாமல் போனது. 19 வயதில் மைசூருவில் உள்ள நண்பரின் மூலமாக தேநீர் விற்கும் வேலைக்குச் சென்றேன். பின்னர், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்தது.
கிடைத்த வேலையைச் செய்துகொண்டே ஓய்வு நேரத்தில் அங்குள்ள புத்தகக் கடைகளில் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிக்க ஆரம்பித்தேன். இந்த வாசிப்பு என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை உணர ஆரம்பித்தேன்.
இந்த சமயத்தில் பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்ததையடுத்து, ஹோட்டலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதால் மீண்டும் வேலையை இழந்தேன். வேலையை இழந்த நிலையில் வீடு திரும்பினேன். இந்தப் பயணத்தின் போது அடையாளம் மற்றும் வர்க்க அரசியல் பற்றி சுனில் பி இளையோமின் என்பவர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அது என்னுள் ஒரு தீப்பொறியை உண்டாக்கியது.
“எதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு மேலோங்கியது. இந்தத் தருணத்தில் எனது சகோதரிக்கு கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைக்க எங்கள் வாழ்க்கை மேம்படத் தொடங்கியது. நண்பர்களின் ஊக்கத்தால், காலிகட் பல்கலைக் கழகத்தின் கீழ் பி.ஏ பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தேன். பின்னர், காலடியில் உள்ள ஸ்ரீ சங்கர சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மலையாளப் படிப்பில் இணைந்தேன்.”
”அங்கு படிக்கும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்தேன், ஒரு மாணவனாகவும் மனிதனாகவும் எனது பார்வையை மாற்ற அந்தச் சூழல் எனக்கு உதவியது. இதன் பின் விஷயங்கள் மிகவும் எளிதாகின. இதனால் இதோ இப்போது பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது உழைப்பே எனது வெற்றிக்கான மந்திரம் எனக் கூறுவேன், என்று நம்பிக்கையாக பேசியுள்ளார் ரபீக்.
தகவல் உதவி: newindianexpress | தமிழில்: மலையரசு