Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#100Unicorns | 'யுனிக்' கதை 07 | Zomato: மெனு கார்டில் தோன்றிய ஐடியாவை ஆன்லைன் உணவு டெலிவரி யூனிகார்ன் ஆக்கிய தீபிந்தர் கோயல்!

நண்பர்கள் இருவருக்கு ஹோட்டல் மெனுகார்டை ஆன்லைனில் பதிவேற்றி வெற்றி கண்டதை அடுத்து உதித்த ஐடியாவே Zomato. இன்று இந்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் யூனிகார்னாக வளர்ந்ததன் பின்னுள்ள கதையை தெரிந்து கொள்ளுங்கள்.

#100Unicorns | 'யுனிக்' கதை 07 | Zomato: மெனு கார்டில் தோன்றிய ஐடியாவை ஆன்லைன் உணவு டெலிவரி யூனிகார்ன் ஆக்கிய தீபிந்தர் கோயல்!

Wednesday August 10, 2022 , 6 min Read

#100Unicorns | 'யுனிக் கதை 07 | Zomato

ஆன்லைன் உணவு டெலிவரி துறை இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுச் சூழலுக்குப் பிறகு இரவு பகல் என எந்த நேரமானாலும், நகரவாசிகளின் அன்றாடத் தேவையாக உணவு டெலிவரி மாறியுள்ளது.

பல நிறுவனங்கள் இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை செய்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி, இந்திய ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக வளர்ந்துள்ளது Zomato.

கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய நகரத்திலும் டெலிவரி சேவை மொத்தம் 1,69,802 டெலிவரி பார்ட்னர்கள், தினமும் 20 லட்சத்துக்கும் நிகரான உணவு டெலிவரிகள் என இந்திய உணவுத் துறையில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது ஜோமோட்டோ.

கடந்த ஆண்டு பொதுப் பங்கை (ஐபிஓ) வெளியிட்டது இந்த நிறுவனம். இந்தியாவில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஐபிஓ வெளியிட்ட முதல் யூனிகார்ன் ஜோமோட்டோ மட்டுமே. இவ்வளவு பெரிய வளர்ச்சி கண்ட ஜோமோட்டோ, ரெஸ்டாரண்ட் மெனுக்களை ஸ்கேன் செய்வது என்ற ஒரு சிறிய ஐடியாவில் இருந்து உதித்தது என்பது பலருக்கு தெரியாது.

Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் பலருக்கும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. தனது கவனம் ஈர்க்கும் ட்விட்டர் பதிவுகள் மூலம் பரவலாக அறியப்பட்ட இந்த தீபிந்தர் கோயல், பஞ்சாப்பில் பிறந்து வளர்ந்தவர். டெல்லி ஐஐடியில் கணினி பிரிவில் பட்டம் பெற்றவர்.

zomato deepinder goyal

யோசனை உதித்த தருணம்

டெல்லியில் ஓர் அலுவலகத்தில் தீபிந்தர் பணிபுரிந்த சமயம் அது. அலுவலகத்தில் தினமும் மதிய உணவுக்கு அங்குள்ள கேஃபட்டீரியாவுக்கு தனது நண்பர் பங்கஜ் சட்டா உடன் சென்று உணவருந்துவது தீபிந்தரின் வழக்கம். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் இடம் என்பதால், மதிய உணவை பெறுவது அந்த அலுவலகத்தில் சற்று சிரமமான காரியமாகவே இருந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு 20-க்கும் சற்று அதிகமான உணவகங்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளது.

ஒவ்வொரு உணவகத்திலும் 15 மெனு கார்டுகள் வரை இருக்குமாம். இந்த மெனு கார்டுகளை கைப்பற்றி உணவுகளை ஆர்டர் செய்யவே கடும் போராட்டம் நடக்கும். மெனு கார்டுக்கான போராட்டத்தை கண்ட தீபிந்தரும், பங்கஜும் இவற்றுக்கு எல்லாம் ஒரு தீர்வு ஏற்படுத்த முயன்றனர்.

அனைத்து உணவகங்களின் மெனு கார்டுகளை சேகரித்த நண்பர்கள் அவற்றை ஸ்கேன் செய்து தங்கள் அலுவலகத்தின் இன்ட்ராநெட் போர்ட்டலில் அப்போலோடு செய்தார்கள். இன்ட்ராநெட் என்பது தனிப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் பயன்படுத்தும் இணையதளம். இந்த செயலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தினமும் இன்ட்ராநெட் போர்ட்டலில் உள்ள மெனுவை பார்க்க சக ஊழியர்கள் குவிந்தனர். மற்றவர்கள் பிரச்னை தீர்ந்தது என நினைத்துக்கொண்டிருக்க, இந்தத் தீர்வு தீபிந்தருக்கும் பங்கஜுக்கும் புதிய யோசனையை கொடுத்தது.

"அலுவலக கேன்டீனில் செய்ததை நகரத்தில் உள்ள உணவகங்களிலும் செய்வதான்ல் என்ன?" என்பதே அவர்களின் புதிய யோசனை.

இந்த யோசனைக்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினார்கள். அலுவலக வேலையை முடித்துக்கொண்டு மாலை சீக்கிரமாகவே கிளம்பும் இருவரும் டெல்லி நகரில் உள்ள உணவகங்களுக்கு விசிட் அடித்து அங்குள்ள மெனுகார்டுகளை உரிமையாளர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஸ்கேன் செய்துகொண்டவர்கள் Foodiebay என்ற இணையத்தை உருவாக்கி அதில் பதிவேற்றுகிறார்கள்.

Foodiebay-யில் எது இருந்ததோ இல்லையோ, டெல்லி நகர உணவகங்களின் A டு Z தகவல்கள் இடம்பெற்றன. நகரத்தில் வசிக்கும் உணவுப் பிரியர்களுக்கு தேடித்தேடி உணவுகளை ருசிப்பவர்களுக்கு இந்தத் தகவல் முக்கியமானதாக மாற, டெல்லி நகரவாசிகளிடம் சில நாட்களிலேயே பிரபலமானது Foodiebay.

zomato cofounders

Zomato நிறுவனர்கள் தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சட்டா

Zomato உதயம்

Foodiebay விளம்பரங்கள் இவர்களுக்கு பிரபலத்தை பெற்றுக்கொடுக்கத் தொடங்கியது. முக்கிய ஹோட்டல்கள் தீபிந்தரை அணுகி Foodiebay இணையதளத்தில் தங்கள் உணவக விளம்பரத்தை கொடுக்க முன்வந்தனர். அவ்வளவுதான், டெல்லியில் ஒர்க் அவுட் ஆன இந்த ஐடியாவை மற்ற நகரங்களுக்கும் கொண்டுச் சென்றார்கள் தீபிந்தரும் பங்கஜும்.

டெல்லியில் மட்டும் நடத்தியபோது இருவரும் காலையில் அலுவலகத்துக்கு வேலையை பார்த்துவிட்டு, மாலையிலும் வார இறுதி விடுமுறை நாட்களிலும் Foodiebay-க்கான பணிகளை கவனித்தார்கள். ஆனால், அதை மற்ற நகரங்களுக்குச் கொண்டுசென்றபோது அதே பாணியை கடைபிடிக்க முடியவில்லை.

Foodiebay-ஐ தொடர்ந்து நடத்த வேலையைவிட வேண்டிய நிலை உண்டானது. துணிந்து முடிவெடுத்தனர். 6 மாதங்களுக்குத் தேவையான செலவுத் தொகைகளை சேர்த்துக்கொண்டு வேலையை விட்டனர் இருவரும். 

அவர்கள் நினைத்தது நடந்தது. முதலீட்டாளர்கள் Foodiebay-வை தேடி வந்தனர். ஒரு நிறுவனம் 7 கோடி ரூபாயை தீபிந்தரையும் பங்கஜையும் நம்பி முதலீடு செய்தது.

கையில் ஒரு ரூபாய் முதலீடு இல்லாதபோதே ஒரு நகரத்தின் உணவுகளை தங்கள் கைகளில் அடக்கிய இவர்களுக்கு 7 கோடி கொடுத்தால் சும்மா இருப்பார்களா என்ன?

புகுந்து விளையாடத் தொடங்கினார்கள். அவர்கள் செய்த முதல் வேலை, முதலீடு செய்தவரின் யோசனையை ஏற்று Foodiebay பெயரை மாற்றினார்கள். இதன் கடைசி நான்கு எழுத்தில் இருந்த eBay என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு நிறுவனம் இருக்க, பெயர் மாற்றும் முடிவுக்கு வந்தார்கள். இணையதள முகவரிக்கு அவர்களிடம் இரண்டு சாய்ஸ். Zomato, Forkwise. இந்த இரண்டு டொமைனைக்கான விலையை கேட்டபோது அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.

Zomato டொமைனுக்கு 10,000 டாலர் என்றால், Forkwise வெறும் 10 டாலரே விலை. நமக்கு இப்போது என்ன தோன்றுகிறதோ, அதேதான் தீபிந்தருக்கும், பங்கஜுக்கும் தோன்றியது. முதலீடாக கிடைத்த 10 லட்சம் டாலரில் (7 கோடி) 10,000 டாலரை டொமைனுக்கு செலவு செய்ய மனமில்லாத நண்பர்கள் இருவரும் 10 டாலருக்கு கிடைத்த forkwise தளத்தை வாங்கி பணியைத் தொடங்கினார்கள்.

இந்த விஷயத்தை அறிந்த முதலீட்டாளர் முதல்முறையாக நண்பர்கள் மீது கோபம் கொண்டுவிட்டார். ஏனென்றால், Zomato பெயரில் உள்ள ஈர்ப்பு. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு பிரபலமான ஒரு பெயர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்த அந்த முதலீட்டாளர், 

''எனது சொந்த செலவிலேயே Zomato டொமைனை வாங்கித் தரவா?'' என சற்று காட்டமாகவே கேட்க ஒருவழியாக தீபிந்தரும், பங்கஜூம் அதையே வாங்கினார். இப்படியே, ஜோமோட்டோ உதயமானது.

இனி நடந்தவை எல்லாம் சூர்யவம்சத்தில் சரத்குமாரும் தேவயானியும் ஒரே பாடலில் முன்னேறிய ரகமே ஜோமோட்டோவுக்கும் நடந்தது.

“ரூல் எதுவுமே இல்லை என்பதுதான் ஒரு தொழில்முனைவோருக்கான முதல் ரூல்!” - என்பார் தீபிந்தர் கோயல்.

நாட்கள் நகர, நகர ஜோமோட்டோவை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை லட்சங்களை தொட்டது. தொடர் முதலீடுகளும் கிடைத்தன. இந்திய தலைநகர் தொடங்கிய டெலிவரி சேவை நாட்டின் மற்ற நகரங்களிலும் விரிவடைந்தது. ஜோமோட்டோ மொபைல் செயலியும் செயலுக்கு வந்தது. மெனு கார்டு ஐடியாவில் தொடங்கி ஜோமோட்டோவாக உருவெடுத்து டெலிவரி சேவையை கடந்து, உணவக ரேட்டிங், உணவக புக்கிங் என சேவைகள் விரிவடைந்தது.

yourstory-zomato

2015ல் இந்தியாவில் டெலிவரி சேவையை எளிதாக்கி வரும் ஜோமோட்டோ தனது சக போட்டியாளரான ஸ்விகியை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இந்தியாவை தாண்டியும் ஜோமோட்டோ-விற்கு சேவை உண்டு. இவர்கள் முதலில் அரபுநாடுகளில் தான் சேவையை தொடங்கினார்கள். ஜோமோட்டோவுக்கு இந்தியா தான் தொழில்நுட்ப அடித்தளம். இங்கே இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் சேவைகளை வழங்கும் போது செலவுகள் மிச்சமாகி வருமானம் இரட்டிப்பாகும். இந்த பாணியை கொண்டு ஜோமோட்டோ புதிய உச்சம் தொட்டது. பணம் கொழித்தது. இந்தியாவின் ஏழாவது யுனிகார்ன் நிறுவனம் என்ற பெருமையும் வசமானது.

ஜோமாட்டோ-வுக்கு இப்போதும் பெரிய போட்டியாக உள்ளது ஸ்விக்கி மட்டுமே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல அமெரிக்க கால் டாக்சி நிறுவனம் ‘உபெர்’ தொடங்கிய ‘உபெர் ஈட்ஸ்’ இந்த இரு ஜாம்பவன்களுடன் போட்டிபோட முடியாமல் தவித்த நிலையில், உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை 350 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது ஜோமாட்டோ.

சிக்கல் இல்லாத ஸ்டார்ட்-அப் ஏது?

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக ஜொமோட்டோ வளர்ந்திருந்தாலும், 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ஜொமாட்டோ ஐபிஓ-விற்கு (IPO) பங்குச் சந்தை ஒழுங்கு ஆணையமான செபி ஒப்புதல் அளித்தது.

இதன் மூலமாக 8,250 கோடி ரூபாய் மூலதனம் திரட்ட ஜொமாட்டோ நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஓராண்டில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் நல்ல லாபம் ஈட்டும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

அதேபோல், இந்த ஆண்டு தொடக்கத்தில், ’10 நிமிட டெலிவரி சேவை’யை அறிமுகம் செய்ய இருப்பதாகக் Zomato அறிவித்தது. இத்திட்டத்திற்கும் பலமுனைகளில் இருந்து எதிர்ப்பும், இது போக்குவரத்து சட்ட ஒழுங்கை பாதிக்கும் எனவும், டெலிவரி செய்பவர்களுக்கு அழுத்தத்தை தரும் என எதிர் கருத்துகள் வந்தன. ஒரு சில மாநில அரசுகள் இந்த 10 நிமிட டெலிவரி சேவையை அனுமதிக்க மறுத்தும் விட்டன.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது டெலிவரியில் பிரச்சனை, வாடிக்கையளர்களுடன் பிரச்சனை என பல சர்ச்சைகளில் ஜோமாட்டோ சிக்கி சோஷியல் மீடியாவாசிகளிடம் சின்னாபின்னமாகி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

பிரிவோம் சாதிப்போம்...

ஒரு நிறுவனத்தை கட்டமைப்பது தனிநபர்கள்தான் என்றாலும், அந்த நிறுவனம் உருவெடுத்த பிறகு, அங்கே ‘நிறுவனம்’ என்பது தனித்துவம் பெறுவதை பிசினஸ்வாசிகள் அறிவர்.

அந்த வகையில், ஜோமாட்டோ மற்றும் தீபிந்தரின் ஆரம்பக்கட்ட நண்பனும் தொழில்முனைவு முயற்சிகளின் தோழனாகவும் இருந்த பங்கஜ் சட்டா, 2018-ல் ஜோமாட்டோவில் இருந்த ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருக்கு பிரியாவிடை கொடுத்த தீபிந்தர்,

“இன்று அவருக்கான நேரம் வந்துள்ளது. அன்று என் கனவை அடைய அவர் என்னுடன் பயணித்தது போல், இன்று பங்கஜ் அவரது கனவை நோக்கி பயணிக்க நம்மைவிட்டு பிரிந்து செல்கிறார்,” என்று தனது ஊழியர்களுக்கு தெரிவித்தார்.
Deepinder with Gaurav gupta

தீபிந்தர் கோயல் மற்றும் கெளரவ் குப்தா

அதேபோல், ஜோமோட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கௌரவ் குப்தா 2021ல் ராஜினாமா செய்தபோது, அவர் ஜொமோட்டோ ஊழியர்களுடன் பகிர்ந்து அனுப்பியுள்ள மெயில் கவனிக்கத்தக்கது. அந்த மெயில் அவர் கூறியது:

“நான் ஜோமாட்டோவை மிகவும் விரும்புகிறேன், எப்போதும் விரும்புவேன். 6 ஆண்டுகளுக்கும் முன் இங்கு வந்தேன். ஓர் அற்புதமான பயணத்தை கடந்து வந்துள்ளேன். இப்போது நாம் இருக்கும் இடத்தைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். இதை அடைய நாம் எத்தனை விஷயங்களைக் கடக்க வேண்டியிருந்தது என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. வருங்காலத்தில் இன்னும் பலவற்றை சாதிப்போம்.”

கௌரவ் குப்தா வெளியேற்றம் குறித்து ஜோமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் குறிப்பிட்டதும் இங்கே மிக முக்கியமானது. அது:

“கௌரவ் வெளியேறிய பின் ஜோமோட்டோ புதிய பாதையில் பயணிக்க இருக்கிறது. நானும் இதேபோல் வெளியேறினாலும் ஜோமோட்டோ தனது வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தவும், அதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் எங்களிடம் சிறப்பான அணி இருக்கிறது."

அலுவலக கேன்டீனில் சாப்பிடும்போது தோன்றிய ஒரு சிறிய ஸ்பார்க் பத்தே ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கு நிகரான மதிப்புகொண்ட சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது என்றால் நம்ப முடியாமல் தோன்றலாம். ஆனால், நமக்கு கண்முன் சாட்சியாக உள்ளது Zomato.

“மக்களிடம் கனிவாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்...”

என்ற இந்த தாரக மந்திரம்தான் தீபிந்தர் கோயலை கோலோச்ச வைத்திருக்கிறது.

கட்டுரை உதவி: ஜெய்

யுனிக் கதைகள் தொடரும்...