Budget 2025: ஸ்டார்ட் அப்'களுக்கு ரூ.10,000 கோடி கூடுதல் நிதி; எஸ்சி/எஸ்டி பெண் தொழில்முனைவர்களுக்கு புதிய திட்டம்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அரசின் சார்பாக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு, புதிய தொழில் தொடங்கும் 5 லட்சம் எஸ்.சி, எஸ்.டி பெண் தொழில்முனைவோர்களுக்கு புதிய திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 ஆட்சியின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் கூறியதாவது,
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் விதமாக இந்த பட்ஜெட் இருக்கும். வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் உள்ளிட்டோரை மேம்படுத்துவதற்கான முக்கியத் திட்டங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது என்றார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
- 7.7 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள்.
- கிசான் கடன் அட்டைகளுக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்வு.
- குறைந்த உற்பத்தி திறன்கொண்ட 100 மாவட்டங்களை முக்கிய இலக்காக கொண்டு தன் தன்யா கிருஷி புதிய திட்டம்.
- பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்நிறைவு அடைய இலக்கு.
- பீகாரில் தாமரை விதையில் இருந்து தயாரிக்கப்படும் மகானாவுக்கு புதிய வாரியம்.
- ஸ்டார்ட் அர் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு கூடுதல் நிதி (Fund of funds) ஒதுக்கீடு.
- 5 லட்சம் எஸ்சி, எஸ்.டி புதிய பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த திட்டம்.
- காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் திட்டம். இதனால் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட முறை சாரா தொழிலளார்கள் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம்.
- அடுத்த கல்வியாண்டில் கூடுதலாக 10,000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள்.
- தனியார் பொதுத்துறை பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை.
- செயற்கை நுண்ணறிவு மூலம் விவசாயத் துறையில் உற்பத்தியை பெருக்க திட்டம்.
- அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம்.
- சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளுக்கு கடன் உத்திரவாத வரம்பு அதிகரிப்பு.
- தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும்.
- சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.
- தாய்மொழியிலேயே மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்கள் வழங்க திட்டம்.
- இந்தியாவை பொம்மை தயாரிப்பு மையமாக்க சிறப்பு திட்டம் உருவாக்கம்.
- டெலிவரி ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை, காப்பீட்டு திட்டம்.
- காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீடு 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
- லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட முக்கியமான 12 தாதுக்களுக்கான அடிப்படை சுங்க வரி நீக்கம்.
- எலக்ட்ரானிக் வாகன உற்பத்திக்கு உதவும் 35 பொருட்கள் மற்றும் மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கான 28 பொருட்களுக்கு வரி விலக்கு.
- உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்க வரி நீக்கம்.
- அடுத்த தலைமுறை ஸ்டார்ட் அப்களை ஊக்கப்படுத்த Deeptech நிதி அறிமுகம் செய்யப்படும்.
- ஐஐடி மற்றும் ஐஐஎஸ்-ல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு நிதி.
- நகர வளர்ச்சிக்காக ரூ.1.1 லட்சம் கோடி நகர மாற்ற திட்ட நிதி ஒதுக்கீடு.
- மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க 50,000 அரசுப் பள்ளிகளில் அடல் இணைப்பு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!