'டெலிவரி ஊழியர்கள் மாதம் ரூ.28,000 சம்பாதிக்கிறார்கள்' - Zomato தீபேந்தர் கோயல் தகவல்!
எரிபொருள் செலவுக்கான ரூ.5,000 கணக்கில் கொண்டாலும், இது மற்ற வாய்ப்புகளை விட மேம்பட்டது, என தீபேந்தர் கோயல் கூறியுள்ளார்.
கடந்த 2024 ம் ஆண்டில், 15 லட்சம் டெலிவரி பார்ட்னர்கள் ஜோமேட்டோவுடன் பணியாற்ற முன்வந்ததாக நிறுவன சி.இ.ஓ. தீபேந்தர் கோயல் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் தேவையை உணர்த்துவதோடு, டெலிவரி பணி தொடர்பான நிறுவனத்தின் அணுகுமுறையையும் இது உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 மணி நேரம் வேலை பார்ப்பவர்கள் மாதம் சராசரியாக் ரூ.28,000 சம்பாதிப்பதாக கோயல் தெரிவித்துள்ளார். எரிபொருள் செலவுக்கான ரூ.5,000 கணக்கில் கொண்டாலும், இது மற்ற வாய்ப்புகளை விட மேம்பட்டது, என கூறியுள்ளார்.
வருமானம் தவிர, நிறுவனம், காப்பீடு மற்றும் மருத்து செலவுகளை தொடர்பான பலன்களை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
2024ல், டெலிவரி பார்ட்னர்களுக்கான காப்பீடு கோரிக்கை தொகை ரூ.53 கோடிக்கும் அதிகம் என்று கூறியவர், விபத்து அல்லாத மருத்துவ செலவுகள் இதில் 55 சதவீதம், என்று கூறினார்.
நிறுவன மேடை பார்ட்னர்கள் தங்கள் விருப்பம் போல பணியாற்ற வழி செய்வதாகவும் தெரிவித்தார். ஒரு சிலர் பகுதி நேர வருமானம் நாடும் நிலையில், மற்றவர்கள் பருவ காலம் அல்லது குறிப்பிட்ட காலம் சார்ந்த ஷிப்டில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் அறிவிப்பு
2025 மத்திய பட்ஜெட்டில், டெலிவரி ஊழியர்களுக்கான ஆதரவான நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சுமார் ஒரு கோடி டெலிவரி ஊழியர்களை முறைப்படி அங்கீகரித்து சமூக பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அடையாள அட்டை வழங்குவது, இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்வது, PMJAY கீழ் சுகாதார பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் டெலிவரி ஊழியர்கள் சுகாதார சேவை மற்றும் சமூகநல பாதுகாப்புகளை அணுக வழி செய்கின்றன.
ஊழியர் சேவை அளிக்கும் டீம்லீஸ் டிஜிட்டல் தகவல், 2025ல், ஆன்லைன் விற்பனைக்கான கடைகள் ஊழியர்கள் வருமானம் 9.15 சதவீதம் அதிகரித்து ரூ.20,167 ஆக இருக்கும் என தெரிவிக்கிறது. ஆன்லைன் விற்பனைக்கான கடைகள் ஊழியர்கள் மற்றும் குவிக் காமர்ஸ் டெலிவரி பார்ட்னர்கள் மத்தியிலான, 2023-24 வருமான வளர்ச்சி, சற்று மிதமான வேகத்தில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: அனுஜ் சுவர்னா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan