ஆரோக்கிய ஊட்டச்சத்து கலவைகளை தாய் அன்புடன் வழங்கும் திருப்பூர் தீபா முத்துகுமாரசாமி!
குழந்தைகள் உணவு முதல் ஆரோக்கிய மிக்ஸ்கள் வரை தமிழ்நாட்டில் உள்ளோர்க்கு வழங்கும் திருப்பூரைச் சேர்ந்த ஆர்கானிக் உணவு ப்ராண்ட் ‘Some More Foods’
போதுமான ஊட்டச்சத்தும் பராமரிப்பும் இல்லாத காரணத்தால் 62 மில்லியன் வளர்ச்சி குன்றிய (உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி) குழந்தைகள் இந்தியாவில் இருப்பதாக UNICEF தெரிவிக்கிறது. உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர்.

தீபா முத்துகுமாரசாமி
தொழில்முனைவில் ஈடுபட்டிருக்கும் தீபா முத்துகுமாரசாமி தனது நண்பர்களும் உறவினர்களும் தயார்நிலையில் உடனடியாக உண்ணும் விதத்தில் இருக்கும் கூடுதல் உணவு வகைகளை தங்களது குழந்தைகளுக்குக் கொடுப்பதைப் பார்த்து கவலைப்பட்டார். முழுமையாக ஆர்கானிக்காக இல்லாமலும் அம்மாவின் கைப்படாமலும் கிடைக்கும் உடனடி உணவுகளை, பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுப்பதாக குறிப்பிடுகிறார் தீபா.
37 வயதான இவர் தனது மகனுக்காக ஆர்கானிக் மூலப்பொருட்களைக் கொண்டு ஹெல்த் மிக்ஸ்களை தயாரித்தார். அவரது ரகசிய ரெசிபி விரைவில் மற்ற தாய்மார்களை சென்றடைந்தது. அப்போதுதான் குழந்தைகளுக்கு கூடுதல் உணவுவகைகளை அறிமுகப்படுத்த உள்ள தாய்மார்களுக்கு சந்தையில் இப்படிப்பட்ட நம்பகமான தயாரிப்புகள் இல்லாததை உணர்ந்தார். இவ்வாறு உருவானதுதான் ‘சம் மோர் ஃபுட்ஸ்’.
”ஒரு முறை அருகில் வசிப்பவர் ஒருவர் தனது குழந்தைக்கு இதைக் கொடுத்து முயற்சித்தார். பிறகு என்னிடம் திரும்ப வந்து இன்னும் சிறிதளவு வேண்டும் என்று கேட்டார். ஒவ்வொரு மாதமும் ஃப்ரெஷ்ஷாக தயாரித்துக் கொடுக்கமுடியுமா என்று என்னிடம் கேட்டார். பரிசோதித்துப் பார்ப்பதற்காக கொடுக்கப்பட்ட தயாரிப்பை முயற்சித்த பிறகு அவரது இரண்டு நண்பர்களும் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தங்களுக்கும் இந்த தயாரிப்பைத் தருமாறு கேட்டனர். அதுதான் வெற்றிக்கான தருணமாக அமைந்தது,”
என்றார் ’சம் மோர் ஃபுட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ தீபா முத்துக்குமாரசாமி. தீபா தனது உறவினரான விஜயலஷ்மி ஸ்ரீநிவாசனுடன் இணைந்து 2013-ம் ஆண்டு ’சம் மோர் ஃபுட்ஸ்’ நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் முழுமையான ஹெல்த் மிக்ஸ், மல்டிக்ரெயின் ஆட்டா, சிறுதானிய நூடுல்ஸ், சிறுதானிய சேவை, புட்டு மிக்ஸ், குழந்தை உணவு (ஃபர்ஸ்ட் ஸ்பூன்) உள்ளிட்ட ஆர்கானிக் உணவுப் பொருட்களை தயாரித்தது. எனினும் சில மாதங்களுக்குப் பின்னர் உறவினர் வென்சரை விட்டு வெளியேறினார். பின்னர் சம் மோர் ஃபுட்ஸ் நிறுவனத்தை தீபா மட்டும் தனியாக நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்று சம் மோர் ஃபுட்ஸின் தயாரிப்புகள் பதினைந்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளிலும், திருப்பூரின் பேபிஸ் வேர்ல்டிலும் தமிழகம் முழுவதுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்கானிக் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.
பெண் தொழில்முனைவோராக இருந்து எதிர்கொண்ட சவால்கள்
உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர் தீபா. உணவுப் பிரிவில் தனது வென்சரை துவங்கவேண்டும் என்பதே அவரது ஆர்வமாக இருந்தது. அவர் தாயான பிறகு ஆர்கானிக் ஆரோக்கிய உணவிற்கான தேவை அதிகரித்து வருவதைக் கண்ட தீபா தனது தொழில்முனைவுக் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கத் துவங்கினார்.
”எங்களது குடும்பம் பழமைவாதம் நிறைந்தது என்பதால் பெண்கள் சுயமாக செயல்பட்டு தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு தொழில்முனைவோராக உருவெடுப்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. மேலும் என்னுடைய கணவரும் என்னுடைய அப்பாவும் உணவுத் துறையில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத அவரவர் குடும்பத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர்,” என்று சுட்டிக்காட்டினார்.

உணவுத் துறையில் முதல் தலைமுறை தொழில்முனைவராக செயல்பட்டதால் தீபாவிற்கு மார்கெட்டிங் குறித்தும் சொந்த ஃபுட் ப்ராண்டை உருவாக்குவது குறித்தும் போதுமான தகவல்கள் தெரியவில்லை. அவருக்கு வழிகாட்டியின் துணை பெரிதும் தேவைப்பட்டது. இந்த வருடம் தீபா The Indus Entrepreneurs’ (TiE) பெண்கள் தொழில்முனைவு ரோட்ஷோவில் (AIRSWEEE) பதிவு செய்திருந்தார். இது ப்ராண்டின் மார்க்கெட்டிங் உத்திகளை மெருகேற்ற உதவியதுடன் தொழில் வளர்ச்சிக்காக ஒரு வழிகாட்டியையும் வழங்கியது. TiE-யுடன் இணைந்த பிறகு சிறுதானிய நூடுல்ஸ் (8 வகைகள்), சிறுதானிய சேவை (9 வகைகள்), சிறுதானிய புட்டு மிக்ஸ் (2 வகைகள்) என இவரது ப்ராண்ட் மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. அத்துடன் அதிகம் பேரை சென்றடையும் நோக்கத்துடன் மறுப்ராண்டிங் செயல்களிலும் ஈடுபட்டது.
’Some More Foods’ வேறுபடுத்திக் காட்டும் விதம்
வெயிலில் காயவைப்பது, வறுப்பது, பொடியாக்குவது உள்ளிட்ட பாரம்பரிய முறைகளை ’சம் மோர் ஃபுட்ஸ்’ பின்பற்றுகிறது. இந்த ப்ராண்டின் கீழுள்ள தயாரிப்புகளில் சர்க்கரை, உப்பு உள்ளிட்ட கூடுதல் பொருட்களோ பதப்படுத்தப்படும் பொருட்களோ சேர்க்கப்படுவதில்லை. மேலும் நுண்ணூட்டப்பொருட்களை அதிகரிப்பதும் ஃபைடேட் போன்ற ஊட்டச்சத்துக்களுக்கு எதிரான பொருட்களை குறைப்பதுமே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
”அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை வழங்கவேண்டும் என்பதற்காக நமது அம்மாக்களும் பாட்டிகளும் பின்பற்றிய சிறந்த முறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். குழந்தை உணவுகளை ஆய்வு செய்கிறோம். தயாரிப்பு உருவான பிறகு அதை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுகிறோம். எங்களது தயாரிப்புகளுக்கு பதிவுசெய்யப்பட்ட உணவுமுறை வல்லுநர்களால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்புகள் FSSAI தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.”
’சம் மோர் ஃபுட்ஸ்’ முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதால் போட்டியாளர்கள் குறித்து கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை என்கிறார் தீபா. தற்சமயம் இந்தியா முழுவதும் சென்றடைவதில் இந்த ப்ராண்ட் கவனம் செலுத்தி வருகிறது.
அடுத்தகட்ட செயல்பாடுகள்
சுயநிதியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இந்த ஆண்டு 16 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், மற்ற மாநிலங்களுக்கு விரிவடைதல், புதிய விநியோகஸ்தர்களை நியமித்தல், ஆன்லைன் செயல்பாடுகளை வலுவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் 2.5 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள், பேறுகாலத்திற்குப் பிறகான காலகட்டத்தில் இருக்கும் பெண்கள், வயது முதிர்ந்தோர் போன்ற ஊட்டச்சத்து அதிகம் தேவைப்படும் பிரிவினருக்கான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இந்த ப்ராண்ட் நிதியை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
”பச்சிளம் குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த ஆர்கானிக் உணவுகளை வழங்கும் ஒரு ப்ராண்டாக உருவாக விரும்புகிறோம்,” என்றார் தீபா.
ஆங்கில கட்டுரையாளர் : லிப்சா மன்னன்