’மந்தமான தீபாவளி’- நலிவு அடைந்து வரும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள்!
சிறுவயது முதல் ஸ்டாண்டர்ட் பயர்வொர்க்ஸ் பெயரிட்ட பட்டாசுகளை தீபாவளி சமயத்தில் வெடித்து மகிழ்ந்துள்ளோம். கம்பி மத்தாப்பு, சாட்டை, பென்சில், புஸ்வானம், ராக்கெட், வெடிகள் என்று பெட்டி பெட்டியாக வாங்கி அதிகாலை எழுந்து புத்தாடை உடுத்தி வெடிக்க தொடங்கிவிடுவோம். ஊரே அந்த காலைப்பொழுதில் வெளிச்சமாக பளிச்சிடும்.
என்.ஆர்.கே.ராஜரத்தினம் என்பவரால் 1942 ஆம் ஆண்டு ஸ்டாண்டர்ட் பயர்வொர்க்ஸ் தொடங்கப்பட்டது. சிவகாசி அப்போதிலிருந்து பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஏற்ற இடமாக மாறியது. பல பட்டாசு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, வருடத்திற்கு சுமார் 2,500 கோடி ரூபாய் வருமான ஈட்டிவந்தது சிவகாசி பட்டாசுத்தொழிற்சாலைகள்.

இந்தியா முழுவதுக்குமான பட்டாசு உற்பத்தி சிவகாசியில் தான் செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு துறை வீழ்ச்சியை சந்தித்ததால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. Assocham வெளியிட்டுள்ள ஆய்வின் படி, சீன பட்டாசுகளின் வருகையே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக எழுப்பப்படும் பிரச்சாரங்களின் விளைவாகவும் பட்டாசு துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
”சத்தமில்லா, மாசில்லா தீபாவளி என்ற பெயரிலான பிரச்சாரங்கள் சிவகாசியின் பட்டாசு தொழிலை பெரிதும் பாதித்துள்ளது. எங்களுக்கு இம்முறை மந்தமான தீபாவளி,”
என்றார் தமிழக பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆசைத்தம்பி.
”சீன பட்டாசுகளின் வருகையை தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிலில் நலிவு அடைந்துவருகிறோம். எங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் பட்டாசின் விலையை குறைக்கவும் முடிவதில்லை. வருடாவருடம் பட்டாசுகளுக்கு வரவேற்பு குறைந்து வருவதால் பல தொழிற்சாலைகள் மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், என்கிறார் மேலும்.
சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு சுமார் 2,500 கோடி ரூபாய் வருமான ஈட்டி இருந்தாலும், நஷ்டம் அதிகரித்துள்ளது. சீன பட்டாசுகள் மீது தடை இருந்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல பட்டாசு யூனிட்கள் தாக்குபிடிக்கமுடியாமலும், பட்டாசு விபத்துகளாலும் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றனர். 2012 இல் நடந்த பட்டாசு விபத்தில் 54 தொழிலாளர்களும், இந்த ஆண்டு விபத்தில், 9 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொருபுறம், பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என்று வட்டார தகவல் தெரிவிக்கின்றன. அதே போல் சீன பட்டாசுகளை டெல்லி அரசு உட்பட பல இடங்களில் தடை செய்தும், அவை 50,000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது. இந்திய அரசு கடுமையாக தடை விதித்தும், சுங்கத்துறை ஆங்காங்கே சீன பட்டாசுகளை பறிமுதல் செய்தும் இது நடந்துள்ளது அதிர்ச்சியை தருகிறது.
டெல்லி மற்றும் பிற மாநிலங்களில், சீன பட்டாசுகள் ‘மேட் இன் இந்தியா’ என்ற மேல் அட்டைக்குள் மறைத்து விற்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால் இருப்பினும் மக்கள் மத்தியில் சீன பொருட்களை வாங்காதீர் என்று உருவாகியுள்ள பிரச்சாரம் ஓரளவு இந்த பட்டாசுகளை நிராகரிக்க வழி செய்துள்ளது.
இந்திய பட்டாசுகளை ஒப்பிடும் போது சீன பட்டாசுகள் வண்ணமயமானவை, பார்க்க குதூகலமாக இருக்கக்கூடியவை, ஆனால் அவை நச்சுத்தன்மை கொண்டவை என்றும் அதில் தடைசெய்யப்பட்ட ரசாயன கலப்புகள் இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நம்மூர் பட்டாசு உற்பத்தியாளர்கள்.
”சீன பட்டாசுகள் உராய்வின் அடிப்படையில் அல்லது இரு பேட்டரிகள் இணைத்து வெடிக்கக்கூடியவை. இது ஆபத்தானது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட ரசாயனங்களான க்ளோரேட் பொட்டாசுடன் சல்பர் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதை சுவாசித்தால் மிக கெடுதலானது. அதேபோல் பேட்டரி பட்டாசுகள் வானத்துக்கு பதில் தவறி நிலத்தில் வெடித்தால் அந்த பகுதியே வெடித்து சிதற வாய்ப்புள்ளது,” என்றார் ஆசைத்தம்பி.
Assocham செயலாளர் ராவத், 10 நகரங்களில் நடத்திய ஆய்வின்படி, ஒலி, காற்று மாசு, செல்லப்பிராணிகளுக்கு தொந்தரவு என்கின்ற அடிப்படைகளில் மக்கள் பட்டாசு வெடிப்பதை குறைத்துள்ளது அதன் விற்பனையை பாதித்துள்ளது என்று தெரியவந்ததாக கூறினார்.

சீன பட்டாசுகளை தடை செய்தது வரவேற்கத்தகுந்தது. உள்நாட்டு உற்பத்திக்கு ஏதுவாக அது பார்க்கப்பட்டது, ஆனால் பட்டாசு வெடிப்பதற்கு எதிரான பிரச்சாரங்கள், கூடிவரும் மாசு இவை இத்தொழிலின் எதிர்காலத்தையே புரட்டிப்போட்டு வருகிறது என்றார் ராவத்.
இந்த காரணங்களை தவிர, விலைவாசி உயர்வு, பணம் சேமிப்பதற்கான விழிப்புணர்வு, அதிகரிக்கும் பட்டாசு விலை, ஆன்லைன் ஷாப்பிங் என்று வேறு சில காரணங்களும் பட்டாசு தொழில் நலிவடைய வழி செய்துள்ளது என்கிறார்.
சிவகாசி பட்டாசை வழக்கமாக வாங்கும் முத்து கிருஷ்ணன் தன் அனுபவத்தை பகிர்கையில்,
“பட்டாசு விற்பனை என்பது திட்டமிட்டதாக இல்லை, அட்டையில் ஒரு விலை குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் கடைக்காரர் குறைந்த விலைக்கு அதை விற்பார். அது எப்படி சாத்தியம் என்று புரியாது. இது போன்ற குழப்பங்களை பட்டாசுத்துறையில் மட்டுமே பார்க்கமுடிகின்றது,” என்கிறார்.
சீன பட்டாசுகளின் போட்டி, உற்பத்தி விலை அதிகரிப்பு, விற்பனையில் மந்த நிலை என்று பலதரப்பட்ட சவால்களை சந்தித்து வரும் சிவகாசி பட்டாசு தொழில், உலகின் பட்டாசு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால் சீனாவை போல் அல்லாமல் நஷ்டத்தில் வாடி நலிவடைந்த தொழிலாக இன்று வலம்வருகின்றது என்பதே உண்மை.
ஆங்கில கட்டுரையாளர்: அனில் புதூர் லுல்லா