இந்திய பிரிவை தனி நிறுவனமாக்கி, சந்தையில் பட்டியலிட அமேசான் திட்டம் என தகவல்!
இந்திய சட்டங்கள், தற்போது உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமே கையிருப்பு மாடலை பின்பற்ற வழி செய்கிறது. இந்த முறை நிறுவனங்கள் வேகமாக டெலிவரி வழங்க மற்றும் பிராண்டிங், தரத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்க மற்றும் செலவை குறைக்க வழி செய்கிறது.
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனம் அமேசான், தனது இந்திய பிரிவை தனி நிறுவனமாக்கி, பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டிருப்பதாக, இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இருவர் யுவர்ஸ்டோரியிடம் கூறினர்.
இந்தியாவில் ஃபிளிப்கார்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள அமேசான், முதலீட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துவங்கியிருப்பதாக தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த நபர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் தனது வங்கியாளரான ஜேபி மோர்கனுடன் இந்த திட்டம் பற்றி விவாதித்த நிலையில், இந்திய முதலீட்டு வங்கிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
“அமேசான் வங்கிகளுடன் பேச்சு வார்த்தை துவங்கி, தனி நிறுவனமாக்கி, சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. தரவுகள் உள்ளூர்மயமாக்கல் முக்கியக் காரணம் என்றால், இங்கு நேரடி கையிருப்பை பராமரிக்கலாம் என்பது மற்றொரு காரணம்,” என விஷயம் அறிந்தவர்களில் ஒருவர் கூறினார்.

“அமேசான் கடந்த வாரம் நிர்வாகத்துடன் பேச 8-10 முதலீட்டு வங்கிகளை அழைத்திருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்,” என்றும் தெரிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமேசான், செய்தி தொடர்பாளர் நிறுவனம் ஊகங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்று கூறினார்.
இந்திய சட்டங்கள், தற்போது உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமே கையிருப்பு மாடலை பின்பற்ற வழி செய்கிறது. இந்த முறை நிறுவனங்கள் வேகமாக டெலிவரி வழங்க மற்றும் பிராண்டிங், தரத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்க மற்றும் செலவை குறைக்க வழி செய்கிறது. மாறாக, வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தை இடமாக, வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையிலான பாலமாக விளங்க மட்டுமே முடியும்.
அமேசானால் உடனடியாக கையிருப்பு மாதிரிக்கு மாற முடியாது என்றாலும், தனி நிறுவனமாகி, சந்தையில் பட்டியலிடுவது உள்ளூர் பங்குதாரர்களை ஈர்க்க வழி செய்யும். காலப்போக்கில் உள்ளூர் பங்குதாரர்கள் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது, என வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
இந்திய செயல்பாடுகளில் தலைமையை மாற்றம் ஏற்பட்ட சில மாதங்களில் அமேசான் தனது இந்திய பிரிவை தனி நிறுவனமாக்கி பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக அமேசான் இந்தியாவில் தடுமாறி வருகிறது. ஃபிளிப்கார்ட்டிடம் சந்தையை இழந்து வருகிறது. ஃபிளிப்கார்ட் பாதிக்கு மேல் சந்தைப்பங்கு கொண்டுள்ளது.
மேலும், அமேசான், மீஷோவின் போட்டியையும் எதிர்கொள்கிறது. சாப்ட்பேங்க் ஆதரவு பெற்ற மீஷோ அண்மையில் 500 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.
அமேசான் குவிக்காமர்ஸ் பிரிவிலும் ஆரம்ப வாய்ப்பை தவறவிட்டது. இந்தியாவில் முன்னோட்ட திட்டத்தை துவக்கியிருந்தாலும், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிளின்கிட் மற்றும் ஜெப்டோவின் கடும் போட்டி இருக்கிறது.
இதனிடையே, அமேசானின் மிகப்பெரிய போட்டியாளரான ஃபிளிப்கார்ட், அடுத்த 12- 15 மாதங்களில் சந்தையில் பட்டியலிடுவதற்கான முயற்சியை துவக்கி வங்கியாளர்களுடன் பேசி வருகிறது. நிறுவன தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றிய பின், பங்கு வெளியீட்டிற்கு தயாராகும் என எகனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இருப்பினும், ஃபிளிப்கார்டின் முக்கிய பங்குதாரரான வால்மார்ட், முதலில் போன்பே வெளியீட்டில் ஆர்வம் காட்டுவதால் ஃபிளிப்கார்ட் பங்கு வெளியீடு தாமதமாகும் என கேப் டேபிள் செய்தி வெளிட்டிருந்தது.
ஆங்கிலத்தில்: நிகில் பட்வர்தன், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan