Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கொரோனா பாதிப்பு: ‘சமூகத் தொலைவு’ கடைப்பிடிப்பது ஏன் அவசியம்?

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக முன்வைக்கப்படும் சமூகத் தொலைவின் அவசியத்தை சுகாதாரத்துறை வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனா பாதிப்பு: ‘சமூகத் தொலைவு’ கடைப்பிடிப்பது ஏன் அவசியம்?

Wednesday March 18, 2020 , 2 min Read

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ எனக் குறிப்பிடப்படும் சமூகத் தொலைவை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா

கொரோனா போன்ற வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படும் சமூகத் தொலைவு உத்தியின் முக்கியத்துவத்தை சுகாதாரத் துறை வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர்.


சமூகத் தொலைவு என்றால் என்ன? இதை எப்படி கடைப்பிடிப்பது, இதன் அவசியம் என்ன? போன்ற அடிப்படையான கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்:

சமூகத் தொலைவு என்றால் என்ன?

தொற்று நோய் பரவாமல் தடுக்க, பின்பற்றப்படும் சமூக பழக்க வழிமுறையே சமூகத் தொலைவு எனக் குறிப்பிடப்படுகிறது. சமூக சூழலில், விலகி நிற்பது என இதை புரிந்து கொள்ளலாம். நோய்க்கிருமிகள் மேலும் பரவாமல் தடுக்க இது அவசியமாகிறது.


பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, கூட்டங்களை தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத சூழல் தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருப்பது நல்லது. வெளியே சென்றாலும், மற்றவர்களிடம் இருந்து போதுமான தொலைவு (ஒரு மீட்டர்) தள்ளியிருக்க வேண்டும். கைக்குலுக்குவது போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும்.


நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பைக் குறைத்து, அதன் தீவிரத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.

சமூகத் தொலைவை கடைப்பிடிக்கும் வழிகள்...

மற்றவர்களுடன், நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்ப்பதன் மூலம் நோய்க்கிருமி தொற்றிக்கொள்ளும் வாய்ப்பைக் குறைக்கலாம். தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வது மற்றும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்ப்பதன் மூலம் இதை செய்யலாம்.

வாய்ப்புள்ளவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். தகவல் தொடர்புக்கு வீடியோ அழைப்பு போன்ற வசதியை நாடலாம். பொது போக்குவரத்தை தவிர்ப்பதும் உகந்தது.

வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால், இருமல் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தொலைவாவது விலகி இருக்க வேண்டும். இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது.

என்ன பயன்?

சமூகத் தொலைவு மூலம், கொரோனா கிருமி பரவுவதை கட்டுப்படுத்த முடியும். ஏற்கனவே, 1918 ஸ்பானிஷ் காய்ச்சல், 2014 எபோலா காய்ச்சல் போன்ற தொற்றுநோய் நிகழ்வுகளில், இந்த உத்தி பலன் அளித்துள்ளது.

கோரோனா

ஏன் அவசியம்?

சமூகத் தொலைவின் அவசியம், ‘வளைவை தட்டையாக்குவது’ ( ) எனும் உத்தியுடன் சேர்த்து வலியுறுத்தப்படுகிறது. தொற்றுநோய் பரவும் போது அதன் பாதிப்பு திடிரென உயரும் போது, பொது சுகாதாரத்துறையால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படலாம். அதாவது, மருத்துவமனைகள் கையாளக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிக அளவில் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டால், மிகவும் சிக்கலாகிவிடும். இது போன்ற நிலை பெரும் சுகாதார நெருக்கடியை உண்டாக்கலாம்.


இதை தவிர்க்கவே, தொற்றுநோய் பாதிப்பு, திடிரென உயரும் நிலையை தடுக்க வேண்டும் என்கின்றனர். இதை வரைபடமாக குறிப்பிடும் போது, தொற்று நோய் பாதிப்பு அதிகரிப்பதை, ஒரு வளைவாக புரிந்து கொள்ளலாம். இந்த வளைவு பெரிதாகமல் தட்டையாக இருப்பதை தான், நோய்க்கிருமிகள் பரவும் வேகத்தை குறைப்பது என கருதப்படுகிறது.


இப்படி தொற்று நோய் பரவலை குறைத்து அதன் வளர்ச்சிப் போக்கை தட்டையாக்க முடிந்தால், சிகிச்சை அளிப்பதும் எளிதாகும். இதை சாத்தியமாக்குவதற்கான வழிகளில் ஒன்றாக தான் சமூகத் தொலைவு வலியுறுத்தப்படுகிறது.


கொரோனா பாதித்த பல நாடுகளில் இந்த உத்தி பின்பற்றப்படுகிறது. கொரோனா பாதிப்பை குறைக்கவும், இந்த உத்தியே சரியான முன்னெச்சரிக்கையாக அமைகிறது.


தகவல் மூலம்: https://www.newscientist.com/article/2237664-coronavirus-what-is-social-distancing-and-how-do-you-do-it/

https://www.livescience.com/coronavirus-flatten-the-curve.html