செஸ் மூலம் குடிப்பழக்கத்துக்கு ‘செக்’ வைத்த உன்னிகிருஷ்ணன்!
உன்னிகிருஷ்ணன் என்ற தனிமனிதரின் முயற்சியால், செஸ் விளையாட்டின் மூலம் ஒரு கிராமமே மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு, இந்தியாவையே ஆச்சர்யத்தில் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
பார்க்க எளிமையாக தோன்றினாலும் செஸ் விளையாட்டு, நம் வாழ்க்கையோடு மிகவும் சம்பந்தப்பட்டது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 64 கட்டங்களில் ஒவ்வொன்றிலும் கவனத்தை சிதறவிடாமல் காய்களை நகர்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். தன் பக்க நகர்தல் ஒருபுறம் இருந்தாலும், எதிர் தரப்பிலும் எப்படி காய் நகர்த்தல்கள் இருக்கும் என்பதையும் மனதில் கொண்டு விளையாட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்த விளையாட்டில் வெற்றி நம் வசமாகும்.
இப்படிப்பட்ட மகத்துவமான ஒரு விளையாட்டைக் கற்று, ஒரு கிராமமே குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு சாதனை புரிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறது?
ஆம், நீங்கள் நிச்சயம் நம்பித்தான் ஆகவேண்டும். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தூர் பஞ்சாயத்தின் கீழ் இருக்கிற மரோட்டிச்சல் தான் அந்த சாதனை புரிந்துள்ள கிராமம்.
கடந்த வருடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செஸ் விளையாட்டு வீரர் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரின் மொத்த ஜனத்தொகையில் 90%க்கும் அதிகமானவர்களுக்கு செஸ் தெரிந்திருக்கிறது. இந்த ஊரில் மூன்று வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை செஸ் வீரர்களாக இருக்கின்றனர். இந்தியாவின் செஸ் கிராமம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது மரோட்டிச்சல்.

பட உதவி: தி ஹிந்து
கடந்த 2016ம் ஆண்டு இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரே நேரத்தில் செஸ் விளையாடி, ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இதைவிட பெரிய சாதனையை இவர்கள் புரிந்துள்ளனர். அது, ஒரு காலத்தில் மதுவுக்கு அடிமையாகிக் கிடந்த இந்த கிராமத்து ஆண்கள், இன்று செஸ் விளையாட்டு மூலம் அதில் இருந்து மீண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகியுள்ளனர்.
என்னது மதுப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க செஸ் விளையாட்டா...?
இந்த மாற்றங்களுக்கு விதை போட்டவர் உன்னிகிருஷ்ணன் (59). தன்னுடைய விளையாட்டு ஆர்வம் ஒரு கிராமத்தின் வரலாற்றையே மாற்றிப் போடப் போடுகிறது என்பது தெரியாமல், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் செஸ் கற்றுக் கொள்ள விரும்பினார் உன்னிகிருஷ்ணன். யுனைடட் செஸ் கிராண்ட் மாஸ்டர் பாபி ஃபிஷரின் சாதனைகளைப் பார்த்து, அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பியுள்ளார் உன்னி கிருஷ்ணன். அதன் தொடர்ச்சியாக செஸ் விளையாட்டின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.
மரோட்டிச்சல் கிராமம் ரப்பர் மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால், அங்கு சிறுவர்களால் ஓடி விளையாட இடமில்லை. இதுவே தனக்கு செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் என்கிறார் உன்னிகிருஷ்ணன்.
தினமும் சுமார் 5 கிமீ தூரம் நடந்து சென்று பக்கத்து நகரத்தில் செஸ் கற்றுக் கொண்டார் இவர். செஸ் விளையாட மைதானம் தேவையில்லை, உடன் விளையாட மற்றொரு போட்டியாளர் மட்டுமே போதும் என்பதால், தன் வீட்டிலிருந்த மற்றவர்களுக்கும் செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்து தானும் பயிற்சி பெற்றார் உன்னிகிருஷ்ணன். பின்னர், தான் அறிந்த செஸ் விளையாட்டை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார் அவர். இப்படித்தான் உன்னிகிருஷ்ணன் மூலமாக மரோட்டிச்சல் கிராம மக்களுக்கு செஸ் அறிமுகமானது.

வலது ஓரத்தில் உன்னிகிருஷ்ணன்
ஆனால், அப்போது மரோட்டிச்சல் கிராமத்தின் பெரும்பான்மையான ஆண்கள் மதுவுக்கு அடிமையாக இருந்தார்கள். அரசு தடை செய்த போதும், திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் அளவிற்கு அவர்களது மது மோகம் இருந்தது. அதன் காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறுகள், வன்முறை சம்பவங்கள் அங்கு சர்வசாதாரணமாக நடந்தது. இதனால் அவ்வூரில் எப்போதும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த அசாதாரணமாக சூழ்நிலையை அப்பகுதி பெண்கள் விரும்பவில்லை. மது எனும் அரக்கனிடம் இருந்து தங்களது குடும்பத்தை காப்பாற்ற அவர்கள் விரும்பினர்.
அப்போது தான் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் உன்னிகிருஷ்ணன். தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் மத்ய நிரோதனா சமிதி என்ற அமைப்பை உருவாக்கினார்.
இதன் மூலம் தனது கிராமத்தை மதுவில் இருந்து காப்பாற்ற முடியும் என அவர் நம்பினார். உன்னிகிருஷ்ணனின் இந்த அமைப்பிற்கு அப்பகுதி பெண்களும் பெரும் ஆதரவு அளித்தனர். தங்கள் வீட்டு ஆண்கள் ரகசியமாக எங்கே சாராயம் காய்ச்சுகிறார்கள் என அவர்கள் உன்னிகிருஷ்ணன் குழுவிடம் தகவல் தெரிவித்தனர்.

Image Courtesy : Kochipost
அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் துணையோடு அந்த சாராயத்தை மீட்டுள்ளனர். அப்போது விசாரணைக்காக செல்லும் இடங்களில் காத்திருக்கும் பொழுதுகளில் மதுவிற்கு அடிமையானவர்களுக்கும் செஸ் விளையாட கற்றுக் கொடுத்துள்ளார் உன்னிகிருஷ்ணன். மற்ற விளையாட்டுகளில் இல்லாத ஏதோ ஒரு சுவாரஸ்யத்தை செஸ் விளையாட்டில் உணர்ந்த அவர்கள் அதனை ஆர்வமாக விளையாடத் தொடங்கினர்.
இதனால் அந்த ஊர் முழுவதும் செஸ் விளையாட்டு காட்டுத்தீ போல பரவியது. செஸ் விளையாட்டின் மீது ஏற்பட்ட ஆர்வம் மற்றும் ஈடுபாட்டால் மதுவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதி ஆண்கள் விலகினர்.
உன்னிகிருஷ்ணன் அன்று விதைத்த சிறிய விதை இன்று ஆலமரமாக வளர்ந்து, மரோட்டிச்சல் கிராமத்தை 100 சதவீதம் செஸ் ஆடும் கிராமம் என்ற சான்றிதழ் பெற வைத்திருக்கிறது. மூன்று தலைமுறைகளைத் தாண்டி இங்குள்ள மக்கள் செஸ் விளையாடி வருகின்றனர். மது அடிமைகள் இல்லாத கிராமமாக மரோட்டிச்சல் இன்று மாறியுள்ளது.

Image Courtesy : Outlookindia
மூளைக்கு மட்டும் உணவு கொடுக்காமல் பசியென்று வருபவர்களுக்கும் இவரது மாமன் உணவகம் எப்போது வந்தாலும் வயிறாற உணவு தருகிறது. அதோடு அங்கு வைத்தே செஸ்சும் விளையாடலாம். இதற்கென ஒரு கிளப்பும் அந்த உணவகத்தில் உள்ளது.
‘தனது இந்த வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்தவர்கள் பெண்கள் தான் என்கிறார் உன்னிகிருஷ்ணன். பெண்கள் தீவிர பங்கேற்பாளர்களாக இருந்து, வீட்டில் ஆண்களுடன் இணைந்து விளையாடினர். அதனால் மது சிந்தனையில் இருந்து மீண்டனர் ஆண்கள். பெண்களின் பங்களிப்பினால் மட்டுமே தனது போராட்டம் பெரும் வெற்றி பெற்றதாக’ அவர் கூறுகிறார்.
மரோட்டிச்சல் கிராமத்தை பற்றி மலையாளத்தில் ஒரு திரைப்படம்கூட வெளியாகி இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு முரளி கோபி, ரீமா கல்லிங்கல் நடிப்பில் கே.பி.வேணு இயக்கியிருந்த, ‘ஆகஸ்ட் கிளப்’ என்ற செஸ் விளையாட்டைப் பற்றிய படத்தில் செஸ் கிராமமான மரோட்டிச்சலும் முக்கிய அம்சமாக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
செஸ் விளையாட்டில் பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் புரிந்துள்ள, 'இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்' என அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த், இந்தக் கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, உன்னிகிருஷ்ணன் உட்பட கிராமத்தார் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

Image Courtesy : Lifedaily உன்னிகிருஷ்ணன்
போதையை ஒழிக்க இது போன்ற ஆக்கப்பூர்வமான விளையாட்டுகள் பெரிதும் உதவும் என்பதற்கு வாழும் சாட்சியாக இருக்கிறது மரோட்டிச்சல் கிராமம். மதுவை ஒழிக்க வேண்டும் எனப் போராடுபவர்கள் இது போன்ற வித்தியாசமான முறையையும் முயற்சித்துப் பார்க்கலாம்.