தமிழகக் கடலோர விவசாயிகள் உப்புத் தன்மையை சமாளிக்க புதுமையான இயற்கை நடைமுறை!
கொடிகளில் காய்கறிகளை வளர்ப்பது, நிலங்களில் கால்நடைகளை கட்டிவைப்பது என வறட்சி மற்றும் நிலத்தடி நீர் வற்றிப்போவதால் ஏற்பட்ட உப்புத்தன்மை பிரச்சனைக்குத் தீர்வுகண்டுள்ளனர் கடலோர விவசாயிகள்.
முத்துகிருஷ்ணன் சிறு வயதில் கும்பகோணத்தில் இருக்கும் அவர்களது நர்சரியில் இருந்து நெல் நாற்றுகளை எடுத்துச் சென்று தரகம்பாடியின் கடலோர நகரத்தில் வசித்து வந்த அவரது பாட்டியிடம் கொடுத்தது அவரது நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. கடலுக்கு அரை கிலோமீட்டர் தொலையில் வங்காள விரிகுடாவின் கரையில் இருந்த அவர்களது நிலத்தில் அவற்றை நடுவதற்கு அவர் தனது பாட்டிக்கு உதவுவார்.
தற்போது 56 வயதாகும் இவர் கடலோரத்திலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் தனது விவசாய நிலத்தில் நிலத்தடி நீர் மற்றும் மண் உப்புத்தன்மையுடன் இருப்பதை கவனித்தார். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுகாவில் உள்ள கடகம் கிராமத்தில் முத்துகிருஷ்ணனுக்கும் அவரது நண்பர்களுக்கும் சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது.
போதுமான மழைப்பொழிவு இல்லாததாலும் வறட்சியாலும் தமிழகத்தின் பல்வேறு கடலோர கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடுகிறது. இதனால் கடல் நீர் குறைந்து நீரிலும் மண்ணிலும் உப்புத்தன்மையின் அளவும் அதிகரிக்கிறது. ஆனால் விவசாயிகள் ஆர்கானிக் விவசாய முறைகள் மற்றும் சில புதுமையான நடவடிக்கைகள் போன்றவற்றை கையில் எடுத்து இத்தகைய மோசமான சூழலையும் சிறப்பாகவே கையாள்கின்றனர்.
மண் ஆரோக்கியம் காத்தல்
கடகம் பகுதி மற்றும் முத்துகிருஷ்ணனின் நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மண் களிமண்ணாக இருக்கும். உப்புத்தன்மை விவசாயத்தை பாதிக்கும் என்பதை க்ரிஷி விக்யான் கேந்திரா (KVK) அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
"மண்ணின் உப்புத்தன்மையை மின் கடத்துத்திறனை (EC) சுட்டிக்காட்டும் என்பதால் அதன் ஆரோக்கியத்தையும் உணர்த்தும். அது நான்கு dS/m-க்கு அதிகமாக இருந்தால் அங்கு பயிர்களை வளர்ப்பது கடினம்,” என்றார் KVK அதிகாரி.
தற்போது மண் ஆரோக்கியம் குறித்த புள்ளிவிவரங்கள் இல்லாததால் அதிகாரிகள் மின் கடத்துத்திறன் சுமார் 7 dS/m இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர். ஆர்கானிக் நடைமுறைகள் மூலம் வெற்றிகரமாக பயிர்களை வளர்ப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கால்நடைகளை பராமரிக்கும் இடம்
மின் கடத்துத்திறன் அதிகமாக இருக்கும் நிலத்தை தயார் செய்ய அந்த நிலத்தை கால்நடைகளை பராமரிக்கும் இடமாக மாற்றலாம் என விவசாயிகள் அறிவுறுத்துகின்றனர். இது பாரம்பரியமாக பின்பற்றப்பட்ட நடைமுறை என்றும் விவசாய நிலங்கள் அறுவடைக்குப் பின்னர் கால்நடைகள் பராமரிக்கப்படும் இடமாக பயன்படுத்தப்படும் என்பதையும் ராஜேந்திரன் என்கிற விவசாயி நினைவுகூர்ந்தார்.
”நிலத்தின் ஒரு பகுதியில் ஆடுகளை சில நாட்கள் கட்டிவைப்போம். பின்னர் மற்றொரு பகுதிக்கு மாற்றுவோம். நிலம் முழுவதும் விலங்குகளின் கழிவுகள் நிறையும் வரை இப்படியே தொடர்ந்து செய்துவருவோம்,”
என்றார் முத்துகிருஷ்ணன். ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் யாரும் வராத நிலையில் விவசாயிகள் தங்களது மாடுகளை கட்டுவார்கள்.
சுனாமியில் இருந்து கற்ற படிப்பினைகள்
2004-ம் ஆண்டு கிழக்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியபோது நிலங்கள் சேறுகளாலும் உப்பு கட்டிகளாலும் நிரம்பியிருந்தன. ஆர்கானிக் விவசாயத்தை ஆதரிப்பவரான மறைந்த நம்மாழ்வார் வழிகாட்டலுடன் சில விவசாயிகள் ஆர்கானிக் நடைமுறைகளை பின்பற்றி வெற்றிகரமாக தங்களது நிலங்களை மீட்டெடுத்தனர்.
சுனாமிக்குப் பிறகே விவசாயிகள் பசுமை உரங்களை பயன்படுத்தத் துவங்கினர். ஆர்கானிக் விவசாயிகள் வழக்கமாக செஸ்பேனியா, சன் ஹெம்ப் போன்றவற்றை வளர்த்து அவை பூக்கும்போது மண்ணை உழுவார்கள். ஆனால் முத்துகிருஷ்ணன் கொழிஞ்சி அதிக பலனளிப்பதைக் கண்டார். “மற்றவை நைட்ரஜனை சரிசெய்து மண் வளத்தை மேம்படுத்தும் ஆனால் கொழிஞ்சி உப்புத்தன்மையை நீக்கும்,” என்றார்.
”சுனாமிக்குப் பிறகு சூழ்நிலை வெற்றிகரமான மீட்டெடுக்கப்பட்டதைக் கண்டு ஆர்கானிக் விவசாயத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தேன். தாவரங்களின் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளே நிலங்களை மீட்டெடுக்க சிறந்தது என்பதை அறிந்தேன். நான் அதையே பின்பற்றுகிறேன்,” என்றார் காரைக்காலைச் சேர்ந்த விவசாயியான தமிழ்ச்செல்வன்.
தமிழ்ச்செல்வன் வரப்பிற்கு அருகே குழிகளை வெட்டி இலை குப்பைகளையும் வெட்டியெடுக்கப்பட்ட மரக்கிளைகளையும் நிரப்பினார். ”சுனாமிக்குப் பிறகு நாங்கள் குழிகளை வெட்டி கீழே விழுந்த மரங்களின் கிளைகளை நிரப்பினோம். அப்போதுதான் மண்ணை வளர்த்தெடுக்க பனை ஓலைகள் போன்ற பொருட்களை இவ்வாறு பயன்படுத்துவது பாரம்பரிய நடைமுறைகளில் இருந்ததை தெரிந்துகொண்டேன்,” என்றார்.
கொடிகளில் காய்கறிகள்
முத்துகிருஷ்ணன் தனது நிலத்திலும் சற்றே மாறுபட்ட விதத்தில் குழிகளை வெட்டினார். ஒரு ஏக்கர் நிலத்தை நெல் வளர்ப்பதற்கும் கொடியில் வளரும் காய்கறிகளை வளர்ப்பதற்கும் ஒதுக்கினார். நிலத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இந்த ஒரு ஏக்கர் இடம் மூன்று அடி அளவிற்கு தாழ்வாக அமைக்கப்பட்டது.
”இது கிட்டத்தட்ட ஒரு குளம் போன்று காட்சியளிக்கிறது. ஆனால் தோண்டப்பட்ட பகுதியில் 12 அடிக்கு இடைவெளி விட்டு மூன்றடி உயரத்திற்கு வரப்பு அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் பிரேம் ஆனந்த்.
இவர் மாற்று மருத்துவமுறை பயிற்சியாளராக இருந்து சமீபத்தில் ஆர்கானிக் விவசாயியாக மாறியுள்ளார்.
காரைக்கால் பகுதியில் பருவமழை ஆகஸ்ட் மாத மத்தியில் துவங்கி டிசம்பர் மாத மத்தியில் முடிவடையும். அதாவது சுமார் 120 நாட்கள் நீடிக்கும். மழைநீர் நிரம்பும் குழிகளில் முத்துக்கிருஷ்ணன் 100 நாட்கள் பாரம்பரிய நெல் வகையை வளர்த்தார். குழிகளில் நிரம்பியுள்ள தண்ணீர் நெல் சாகுபடிக்கு உதவுவதுடன் உப்புத்தன்மை பிரச்சனையைக் கையாளவும் உதவுகிறது.
நெல் அறுவடை செய்யப்பட்ட பிறகு வரப்புகளில் வளரும் களைகள் மீண்டும் மண்ணில் உழப்படும்.
நெல் விளையும் இடம் முழுவதும் குறுக்கும் நெடுக்கமாக அமைக்கப்பட்ட கொடிகளில் முத்துகிருஷ்ணன் பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய் போன்ற காய்களை வளர்க்கிறார்.
”கொடியில் வளரும் காய்கறியின் நீளத்தைப் பொருத்து வரப்பு அமைக்கப்படுகிறது,” என்றார்.
வடிந்துவிடுவதைத் தடுத்தல்
மழைநீர் எங்கு விழுகிறதோ அங்கேயே அதை சேமித்து வைப்பது உப்புத்தன்மை பிரச்சனையை சமாளிக்க உதவும் என விவசாயிகள் நம்புகின்றனர். முத்துகிருஷ்ணனின் 20 ஏக்கர் நிலத்தில் ஐந்து குளங்களில் மழைநீரை சேமிக்கிறார். நிலத்தைச் சுற்றியும் நிலத்தின் உட்பகுதியிலும் வரப்பு கட்டினார். பயிர்களுக்கும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீரின் அளவைப் பொருத்தும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
”கருப்பு உளுந்து பச்சைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளையும் மஞ்சளையும் வரப்பு பயிர்களாக வளர்த்தோம். இந்த வரப்புகள் நிலத்தின் மேற்பரப்பில் நீர் வடிந்து விடுவதைத் தடுப்பதுடன் அருகாமையில் உள்ள விவசாயிகள் ஆர்கானிக் விவசாயத்தைப் பின்பற்றாமல் போனாலும் அங்குள்ள உப்புக் கசிவையும் தடுக்கும்,” என்றார் ப்ரேம் ஆனந்த்.
பாரம்பரிய வகைகளை வளர்த்தல்
நெல் களிமண்ணிற்கு ஏற்றது என்பதால் மண்ணிலும் நீரிலும் உப்பு கலந்திருக்கும் பட்சத்தில் பாரம்பரிய நெல் வகைகள் பொருத்தமானதாக இருக்கும். முத்துகிருஷ்ணன் கிச்சிலி சம்பா, சீரக சம்பா, பூங்கார், தூயமல்லி, கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய நெல் வகைகளை வளர்த்தார்.
மண்ணின் பண்புகள் மாறக்கூடியது என்றும் ஆர்கானிக் விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் மழைநீரை சேமிப்பதன் மூலமும் விவசாயத்தை நிலைப்படுத்தமுடியும் என்றும் வலியுறுத்துகிறார் முத்துகிருஷ்ணன்.
”கடல் மட்டம் அதிகரிப்பதாலும் பருவநிலை அச்சுறுத்தல்களாலும் மண் உப்புத்தன்மையுடன் இருப்பதாலும் கடலோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எப்போதும் பிரச்சனையை சந்திப்பார்கள். ஆர்கானிக் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளே இதற்குத் தீர்வாகும்,” என்றார் ராஜேந்திரன்.
ஆங்கில கட்டுரையாளர் : ஜென்சி சாமுவேல் | தமிழில் : ஸ்ரீவித்யா
(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரை முதலில் VillageSquare.in தளத்தில் வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர்ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை.)