Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பாலிவுட் படங்களின் மீட்பர் ஆனதா ‘பிரம்மாஸ்திரா’ - ஒரு பான் இந்தியா பார்வை...!

ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் தான். பாலிவுட்தான் இந்திய சினிமா என்றெல்லாம் உலக அரங்கில் தம்பட்டம் அடித்து வந்த நிலை இப்போது மாறி, “தயவுசெய்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் பிரிக்காதீர்கள். நாமெல்லாம் இந்திய திரைத் துறை...” என்று கதறத் தொடங்கும் அளவிற்கு ஆன காரணங்கள் என்ன?

பாலிவுட் படங்களின் மீட்பர் ஆனதா ‘பிரம்மாஸ்திரா’ - ஒரு பான் இந்தியா பார்வை...!

Wednesday September 14, 2022 , 4 min Read

தொடர் தோல்விகள், ‘திட்டமிட்ட’ புறக்கணிப்புகள், தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கம் என துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகை மீட்கும் பேராயுதமாக வந்திருக்கிறதா ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் என்பதை சற்றே அலசுவோம்.

பாலிவுட் ஸ்டார் படங்கள் என்றாலே ப்ரொமோஷனே இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது.

“தயவு செய்து எங்கள் படங்களைத் தியேட்டருக்கு வந்து பாருங்கள்.”

“எங்கள் படங்களை தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்”

- பாலிவுட் நட்சத்திரங்கள் இப்படிக் கூவிக் கூவி அழைத்தும், ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ஆடியன்ஸ்களே வந்ததால் ரத்து செய்யப்பட்ட திரையரங்க காட்சிகள் ஏராளம்.

ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் தான். பாலிவுட்தான் இந்திய சினிமா என்றெல்லாம் உலக அரங்கில் தம்பட்டம் அடித்து வந்த நிலை இப்போது மாறி, “தயவுசெய்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் பிரிக்காதீர்கள். நாமெல்லாம் இந்திய திரைத் துறை...” என்று கதறத் தொடங்கியிருக்கிறது பாலிவுட்.

பாலிவுட்டின் இந்த நிலைக்கு இரண்டு முதன்மைக் காரணங்களை முன்வைக்கலாம்.

Brahmastra

1. கன்டென்ட் தரம்:

வழக்கமான வண்ணமயமான காட்சி அமைப்புகள், மசாலா மிக்ஸ், பாடல்கள் என இலகுவான டெம்ப்ளெட் மேக்கிங்கை இந்தி சினிமா ரசிகர்களே வெறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

கொரோனா காலக்கட்டத்தில் ஓடிடியின் ஆதிக்கம் மிகுந்திருந்த சூழலில் மாநில மொழித் திரைப்படங்கள் தொடங்கி உலக சினிமா, வெப் சீரிஸ் வரை ரசித்துப் பழகிய இந்தி ரசிகர்கள் உருப்படியான கன்டென்ட் எது என்பதை கண்டுகொண்டனர். இதனால்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களின் இந்தி டப்பிங் வெர்ஷனுக்கும் அமோக வரவேற்பு கிட்டியது.

'ரன்வே 34', 'ஹீரோபண்டி 2', 'பச்சன் பாண்டே', 'சாம்ராட் பிருத்விராஜ்', 'தாகத்', 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்', 'ஷம்ஷேரா எஃப்' என பாலிவுட்டில் தோல்விப் படங்கள் வரிசை கட்டியதற்கு முக்கியக் காரணமே ‘கன்டென்ட்’ இல்லாததுதான்.

குறிப்பாக, பான் இந்தியா நோக்குடன் எடுக்கப்பட்ட மூன்று படங்கள் மண்ணைக் கவ்வின. கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் இரட்டை வேடங்களில் நடித்த ‘ஷம்ஷேரா’ ரூ.150 கோடியில் எடுக்கப்பட்டு வெறும் ரூ.60 கோடி வசூலில் முடங்கியது.

சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அக்‌ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ வசூல் போரில் பொசுங்கிப் போனது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.100 கோடியை ஈட்டவே திணறித் தவித்தது.

akshay kumar

இந்த தோல்விப் புயலில் சிக்கி சின்னாபின்னமானது 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ மறு உருவாக்கமான ஆமீர்கானின் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படம் கன்டென்ட் ரீதியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் தோல்வியையே தழுவியது.

ரூ.180 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.120 கோடி அளவில்தான் வசூலித்தது. இங்குதான் இரண்டாவது காரணம் வேலை செய்கிறது. அதுதான் ‘பாய்காட்’ கலாசாரம்.

2. ‘புறக்கணிப்பு’ போராட்டம்

அசால்டாக 100 கோடி க்ளப் படங்களை உற்பத்தி செய்து வந்த பாலிவுட், முதல் நாள் முதல் ஷோ ஓடும்போதே ரசிகர்களின் ட்விட்டர் ட்ரெண்டிங் மூலம் படத்துக்கு ஆடியன்ஸ் அழைத்துவரப்படுவதை வெகுவாக ரசித்தது. ஆனால், அதே ரசிகர்கள் தங்களது படங்களை புறக்கணிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு ட்ரெண்ட் செய்தபோது ரொம்பவே டரியல் ஆகிப் போனது பாலிவுட்.

சமீபத்திய உதாரணம் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’. 2015-ல் 'நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது' என ஆமீர்கான் பேசியதற்காக, அந்தப் படத்தை புறக்கணிக்க வலியுறுத்தி #BoycottLalSinghChaddha என்ற இயக்கத்தையே ஆரம்பித்தனர். அதன் விளைவை அப்படத்தின் வசூல் அனுபவித்தது. ஆமீர் கான் மன்றாடியும் மனமிறங்கவில்லை என்பது சோகத்தின் உச்சம்.

laal singh chaddha

ட்விட்டரில் நெட்டிசன்கள் இரண்டாகப் பிரிந்தனர். ஆமீர்கான் படங்களைப் புறக்கணிக்கக் கோரும் கோஷ்டி ஒருபக்கம் என்றால், வேறொரு தரப்போ கங்கனா படங்களைக் குறிவைக்கிறது. இப்படி பல தரப்புகள் தனித்தனியாக ஒன்று திரண்டு வெவ்வேறு காரணங்களுக்காக புறக்கணிப்பில் ஈடுபட்டத்தில் பரிதவித்துப் போனது பாலிவுட்.

"‘பாய்காட்’ இயக்கத்தால் பெருவலியை அனுபவித்த அக்‌ஷய் குமார், “ஒரு சினிமா தயாரிக்க நிறைய பணமும் உழைப்பும் தேவை. அது இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. உண்மையில் மறைமுகமாக நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். இதை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்,” என்று புலம்பித் தள்ளினார்.

ஆமிர்கானோ மன்னிப்பே கேட்டார். இப்போது இந்த பாய்காட் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியிருக்கிறது என்று நம்புவோம்.

இந்த இரண்டு காரணங்களை உற்று கவனிக்கும்போது இன்னொரு விஷயம் தோன்றுகிறது. புறக்கணிப்பு என்ற செயற்கையான போக்கினை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை வலுவான சினிமாவுக்கு உண்டு என்பதே அது. ஆம், கன்டென்ட் தரமானதாக இருந்தால், நிச்சயம் அதை நடுநிலை மக்கள் காப்பாற்றுவார்கள் என்பது தெளிவு.

இதை உணர்ந்துதான் அக்‌ஷய் குமார் இன்னொரு இடத்தில் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்: “இது எங்கள் தவறுதான். குறிப்பாக என் தவறு. சிறந்த படங்களைத் தர முயற்சிக்கிறேன்,” என்றார்.

இங்கேதான் நடிகர் அனுபம் கேரின் கருத்தும் கவனம் பெறுகிறது. பாலிவுட்டின் அலட்சியமான சினிமா தயாரிப்புப் போக்கை அவர் பிரித்து மேய்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

“தென்னிந்திய திரைப்படங்கள் வசூலில் சாதனை படைக்கிறது. ஏனெனில், அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பாலிவுட் படங்களிலோ பெரும்பாலும் ஸ்டார்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர்கள் தங்கள் சினிமாவில் கதையைச் சொல்கிறார்கள். ஆனால், நீங்களோ நட்சத்திரங்களை விற்பனை செய்கிறீர்கள்,” என்று பாலிவுட்டை பொளந்துகட்டினார் அனுபம் கேர்.

மீட்டதா பிரம்மாஸ்திரா?

அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்துள்ள ‘பிரம்மாஸ்திரா பாகம் 1 - சிவா’ சுமார் ரூ.410 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம். 5 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு, 4 ஆண்டுகளாக உருவாகி வந்த ‘Brahmastra’ ட்ரயாலஜியின் முதல் பாகம்தான் இப்போது வெளிவந்திருக்கிறது.

படத்தின் கதையும், திரைக்கதையும் சொதப்பல்தான். ஆனால், உருவாக்கிய விதத்தில் தப்பிப் பிழைத்திருக்கிறது பிரம்மாஸ்திரா. ஆம், இந்திய சினிமாவில் விஷுவல் எஃபெக்ட்ஸை மிகச் சிறப்பாக பயன்படுத்திய படங்களின் பட்டியலில் இதுவும் இணைந்துள்ளது. 3டி-யில் அட்டகாசமான திரை அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக, ஃபேன்டஸி படங்களில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவதில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவேதான், படத்தின் மொத்த செலவையும் ஈட்டும் வகையில் வசூலைக் குவித்து வருகிறது.

brahmastra

லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, போட்டதை எடுத்தாலே மகத்தான வெற்றிதான் என்று சொல்லும் பாலிவுட்டுக்கு பிரம்மாஸ்திரா உண்மையிலேயே பேராறுதல்தான். ஆம், தற்போதைய நிலவரப்படி வசூல் ரூ.250 கோடியை நெருங்குகிறது; ஓடிடி-க்கு ஏற்கெனவே ரூ.150 கோடிக்கு விற்கபட்டதாக சொல்லப்படுகிறது.

என்னதான் அழுத்தமான கன்டென்ட் இல்லை என்றாலும், வழக்கமான டெம்ப்ளேட் பாலிவுட் படமாக இல்லாமல் காட்சி அமைப்புகளில் மிரட்டியதால் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. முந்தைய சில படங்கள் போல் ‘Nothing is better than nonsense’ என்றில்லாமல் ‘Something is better than nothing’ என்ற அளவில் இருந்ததே இந்த மீட்சிக்கு வழிவகுத்துள்ளது.

ஆக, பாதி கிணற்றைத் தாண்டி பாலிவுட்டை மீட்டிருக்கிறது பிரம்மாஸ்திரா. மீதி கிணற்றையும் தாண்டி, பாலிவுட் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால் முற்றிலும் திருந்த வேண்டும். அதாவது, உருப்படியான சினிமாவை எடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும். செய்யுமா பாலிவுட்?

காத்திருப்போம்!


Edited by Induja Raghunathan