கண் சிகிச்சைக்கு மேம்பட்ட மருந்து செலுத்தும் முறை - ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!
ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள், லேசர் மூலம் உருவாக்கப்படும் லேசான வெப்பச்சலனம் வாயிலாக மனிதக் கண்களில் செலுத்தப்படும் மருந்துகளை குறிப்பிட்ட பகுதிக்கு சிறப்பாக அனுப்பி வைக்க முடியும், என நிரூபித்துள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள், லேசர் மூலம் உருவாக்கப்படும் லேசான வெப்பச்சலனம் வாயிலாக மனிதக் கண்களில் செலுத்தப்படும் மருந்துகளை குறிப்பிட்ட பகுதிக்கு சிறப்பாக அனுப்பி வைக்க முடியும், என நிரூபித்துள்ளனர்.
எந்த அளவுக்கு வெப்பம் மற்றும் நிறை பரிமாற்றம் நிகழ்கிறது என்பதைக் கண்டறிய, மனிதக் கண்ணின் பல்வேறு சிகிச்சை முறைகளின் செயல்திறனை கணினித் தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தனர்.
இந்தியாவில் சுமார் 11 மில்லியன் பேர் விழித்திரை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கண் நோய்களுக்கான லேசர் அடிப்படையிலான சிகிச்சையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அமைந்துள்ளன.
விழித்திரை கிழிதல் (retinal tears), நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinography), விழித்திரையில் வீக்கம் (macular oedema), விழித்திரை நரம்பு அடைப்பு (retinal vein occlusion) போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க லேசர் அடிப்படையிலான விழித்திரை சிகிச்சைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகினறன. விழித்திரை என்பது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைக் கொண்ட பகுதி என்பதால், இதுபோன்ற சிகிச்சை முறைகளை கவனமாகவும், துல்லியமாகவும் கையாளுதல் அவசியமாகும்.
ஐஐடி மெட்ராஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அருண் நரசிம்மன், சங்கர நேத்ராலயாவைச் சேர்ந்த டாக்டர் லிங்கம் கோபால் ஆகியோர் இணைந்து, லேசர் கதிர்வீச்சால் விழித்திரையில் ஏற்படும் விளைவுகளைக் கண்டறிய இந்தியாவில் முதன்முறையாக பயோதெர்மல் ஆராய்ச்சியை கடந்த பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, உயிரிவெப்பம் மற்றும் நிறை பரிமாற்றத்தைக் கண்டறிந்து கண் சிகிச்சைக்கான பல்வேறு அம்சங்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக கணினித் தொழில்நுட்பத் தரவுகளை சேகரித்தல் மற்றும் பரிசோதனை செய்தல் போன்ற பணிகளை இக்குழுவினர் மேற்கொண்டனர்.
பேராசிரியர் அருண் நரசிம்மன், ஐஐடி மெட்ராஸ் பட்டதாரி மாணவர் சிரினிவாஸ் விபூத்தே ஆகியோர் கண்ணாடியால் ஆன கண்ணை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர். வெப்பத்தால் தூண்டப்பட்ட வெப்பச்சலனம் காரணமாக, கண்ணாடிப் பகுதியில் செலுத்தப்படும் மருந்து விழித்திரையில் உள்ள இலக்குப் பகுதியை சென்றடைய எடுத்துக் கொள்ளும் கால அளவை எந்த அளவு குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டது.
இதற்கான ஆராய்ச்சி விவரங்கள் ஸ்பிரிங்கர் வெர்லாக் வெளியிட்டுள்ள சிறப்பு ICCHMT மாநாட்டுக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஆய்வின் கண்டுபிடிப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்வரும் இணைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
“பொறியியல், உயிரியல் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் நிபுணத்துவத்தை பல்துறை ஆய்வுகள் ஒன்றிணைக்கின்றன. இதன் மூலம் தொடர்புடைய சமூகப் பிரச்சனைகளுக்கு புதுமையான முறையில் தீர்வு காண முடியும்,” என பேராசிரியர் அருண் நரசிம்மன் குறிப்பிட்டார்.
“இயற்கையான பரவல் மூலம் விழித்திரையின் இலக்குப் பகுதியில் மருந்து திறம்பட செறிவை அடைய 12 மணிநேரம் தேவை. ஆனால், கண்ணாடி திரவத்தை வெறும் 12 நிமிடங்களில் வெப்பமாக்கியது,” என்று ஐஐடி மெட்ராஸ் பட்டதாரி மாணவர் ஷிரின்வாஸ் விபூதே கூறினார்.
Edited by Induja Raghunathan