இங்கிலாந்து பிரதமர் முதல் சினிமா பிரபலங்கள் வரை விரும்பும் குழந்தைகள் ஆடை ப்ராண்ட் - ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் Little Muffet!
குழந்தைக்கான ஸ்டைல், கம்ஃபர்ட்பல்லான ஆடைகள் இல்லாததால் விரக்தியடைந்த தாயால் சிறிய ஸ்டார்ட்அப்பாக தொடங்கப்பட்டு, இன்று பல பிரபலங்கள் வரை கவந்து ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் பிராண்டாக Little Muffet வளர்ந்த கதை இது.
குழந்தைகளுக்கான ஸ்டைலான மற்றும் கம்ஃபர்ட்பல் ஆன ஆடைகள் இல்லாததால் விரக்தியடைந்த ஒரு தாயால் நிறுவப்பட்ட "லிட்டில் மஃபெட்" (Little Muffet) பிராண்ட், ஒரு சிறிய ஸ்டார்ட்அப்பாக தொடங்கப்பட்டு இன்று முன்னாள் இங்கிலாந்து பிரதமர் முதல் பல சினிமா பிரபலங்கள் வரை அவர்களது குழந்தைகளுக்கு விரும்பி தேர்ந்தெடுக்கும் பிராண்ட்டாகவும், உலகளாவிய வணிகமாகவும் உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.100 கோடி வருவாய் ஈட்டத் தயாராக இருப்பதாகவும் அதன் நிறுவனம் அஞ்சல் தனுகா தெரிவித்தார்.
குழந்தையின் தேவையால் கண்டுபிடிப்பாளரான தாய்..!
மும்பையை சேர்ந்த அஞ்சல் தனுகா, பேங்கிங்க் துறையில் நல்ல வருமானத்தில் பணியாற்றி வந்தவர். குடும்பம், குழந்தை என செட்டிலாக எண்ணிய அஞ்சல், அதற்காக அவரது பணியை விட்டு வெளியேறினார். குழந்தையும் பிறந்தது. அப்போது தான், அவரது குழந்தைக்கான, கம்ஃபர்ட்பல்லான ஆடையை தேடியுள்ளார். அதிலும், ஸ்பெஷல் தினத்தன்று அவரது குழந்தைக்கு அவர் மனதில் வைத்திருந்த மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் நன்கு தயாரிக்கப்பட்ட மேற்கத்திய உடைககளை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பரந்து விரிந்த சந்தையில் அவரது இரண்டு வயது மகளுக்கு தனித்துவமான மற்றும் ஸ்டைலான ஆடைகளைக் கண்டுபிடிக்க முடியாமலிருந்த ஒரு பெற்றோராக அஞ்சலின் போராட்டங்களிலிருந்து `லிட்டில் மஃபெட்` பிறந்தது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் எனும் பழமொழிக்கு இணங்க, தேவையை கண்டறிய முடியாத தாயான அஞ்சல், அவரது குழந்தைக்காக கண்டுபிடிப்பாளாராக மாறினார்.
"ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் நல்ல தரமான குழந்தைகளுக்கான ஆடைகளைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டேன். ஆனால், சர்வதேச அளவில் தேடியபோது, நான் விரும்பியதை எளிதாகக் கண்டுபிடித்தேன். இதே சவாலை மற்ற தாய்மார்களும் எதிர்கொள்வார்கள் என்று அப்போதுதான் உணர்ந்தேன். எனவே, சந்தையில் நீடித்த இந்த இடைவெளியைக் குறைக்க முடிவு செய்தேன்," என்றார் அஞ்சல்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கான மேற்கத்திய ஆடைகளை விற்கும் ஆன்லைன் பிராண்டாக லிட்டில் மஃபெட் தொடங்கப்பட்டது. மும்பையை தளமாகக் கொண்டு அஞ்சல், அவரது சேமிப்பிலிருந்து ரூ.10 லட்சத்தை ஆரம்ப முதலீட்டாக நிறுவனத்தைத் தொடங்கினார். ஆண்டுகள் செல்ல இந்த பிராண்ட் இந்திய உடைகளுக்கான தனித்துவம் பெற்ற பிராண்டாக உருவெடுத்தது. பிரபலமான குழந்தைகளுக்கான ரைம்ஸான 'லிட்டில் மிஸ் மஃபெட்' பாடலின் வரியிலிருந்து இந்த பிராண்டிற்கான பெயர் உருவானது.
2013ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து நீண்ட மற்றும் பயனுள்ள பயணத்தைக் கொண்ட இந்நிறுவனம், நியூபார்ன் முதல் 15 வயது குழந்தைகளுக்கான பார்டி, விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற சிறப்பு நாட்களுக்கான பிரீமியம் உடைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது.
5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் தளம், 50% தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள், பிரபலங்கள் ஃபாலோயர்கள் உட்பட 7,46,000 இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது. அதன் வளர்ச்சிக்கு வாய்மொழி சந்தைப்படுத்தல் தான் காரணம் என்று அவர் கூறுகிறார்.
இங்கிலாந்து பிரதமர் முதல் பல பாலிவுட் பிரபலங்களின் விரும்பும் லிட்டில் மஃபெட்..!
லிட்டில் மஃபெட் ஆடைகளின் தரம், நேர்த்தியான வடிவமைப்பு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், நடிகர் அல்லு அர்ஜுன், தொலைக்காட்சி தொகுப்பாளர் கபில் சர்மா மற்றும் தோல் பராமரிப்பு பிராண்டான அகின்டின் இணை நிறுவனரும் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவியுமான மீரா ராஜ்புத் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"இந்த பிரபலங்கள் அவர்களது குழந்தைகளுக்காக இயல்பாகவே லிட்டில் மஃபெட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். பிராண்ட் புரமோஷன்களுக்காக இல்லாமல், அவர்களது குழந்தைகளுக்காக எங்களை தயாரிப்புகளை வாங்கியுள்ளனர். அதனைப் பற்றி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும்போது மட்டுமே நாங்கள் அதைக் கண்டுபிடிப்போம். ரிஷி சுனக், மீரா ராஜ்புத் (ஷாஹித் கபூரின் மனைவி) மற்றும் பல பொது நபர்கள் எங்கள் பிராண்டை இயல்பாகவே தேர்ந்தெடுத்துள்ளனர்," என்று அஞ்சல் கூறுகிறார்.
மேலும், ஷராராஸ், பலாஸ்ஸோஸ், குர்திஸ், லெஹங்காஸ் மற்றும் பெண்களுக்கான சேலை பாணி லெஹங்காக்கள் மற்றும் ஆண்களுக்கான ஷெர்வானிஸ், குர்தாக்கள் மற்றும் நேரு ஜாக்கெட்டுகள் என 3,000க்கும் மேற்பட்ட SKU-கள் உள்ளன. கோடை காலங்களில், வெப்பத்திற்கு ஏற்ப சருமத்திற்கு இதமான பருத்தி ஆடைகளையும் வடிவமைக்கிறது. லிட்டில் மஃபெட் தனித்துவமான வடிவமைப்புகளில் ஆடைகளை வாங்க இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
பொதுவாக, விசேஷ நாட்களில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கிராண்ட் ஆன ஆடைகளை அணியவிரும்புபவர். பெரும்பாலான குழந்தைகள் அதுபோன்ற ஆடைகளை விரும்புவதில்லை. துணியின் தரமும், வடிவமைப்புமே காரணம். அதனை நன்கு அறிந்த அஞ்சல், ஆடைகளின் வடிவமைப்பில் கவனம் செலுத்தும் அளவிற்கு துணியின் தரத்திலும் சமரசம் செய்யாமல், குழந்தைகள் விரும்பும் ஆடைகளை வடிவமைத்து வருவதாக தெரிவித்தார்.

"குழந்தைகளுக்கு ஆடைகளில் தரம் மற்றும் ஸ்டைலில் சமரசம் செய்ய விரும்பாத பெற்றோருக்கு லிட்டில் மஃபெட் இன்று ஒரு பிரபலமான பிராண்டாக மாறியுள்ளது. இந்த பிராண்டின் ஆடைகள் ஸ்டைலானவை மட்டுமல்ல, நீடித்து உழைக்கக்கூடியவை. அவை எளிதான ஜிப்பர்கள் மற்றும் நீட்டிக்கக்கூடிய திறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் நீண்ட நேரம் அணியும் போது அசெளவுகரியத்தை உணராக வகையில் தயாரிக்கப்படுகின்றன. கழுத்து கோடுகள் மற்றும் இடுப்பு கோடுகளில் அரிப்புகள் உண்டாகின்றனவா என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். மேலும் மென்மையான லைனிங்ஸையும் பயன்படுத்துகிறோம். இதற்காக, இந்தியா முழுவதிலிமிருந்து குழந்தைகளின் தேவைகளை நன்கு புரிந்துகொள்ளும் தாய்மார்களே வடிவமைப்பாளர்களாக நியமித்துள்ளோம்," என்றார் அஞ்சல்.
இந்தியாவில் குழந்தைகள் ஆடை சந்தை 2025ம் ஆண்டில் $24.01 பில்லியன் வருவாயை ஈட்டும் என்று கூறப்படுகிறது, மேலும், 2029ம் ஆண்டுக்குள் 2.63% CAGR இல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஸ்டாடிஸ்டாவின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் உலகளவில் டெலிவரி செய்கிறது. லிட்டில் மஃபெட் ஒரு இலாபகரமான முயற்சி என்றும், இந்த ஆண்டு ரூ.100 கோடி வருவாய் ஈட்டத் தயாராக இருப்பதாகவும் அஞ்சல் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் அதன் முதல் ஆஃப்லைன் கடையைத் திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 15-19 வயதுடைய டீனேஜர்களுக்கான ஆடைகளையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிறுவனரின் 13 வயது மகள், டீனேஜர்களை ஈர்க்கும் ஸ்டைல்கள் மற்றும் வடிவமைப்புகள் குறித்த அவரது உள்ளீடுகளுடன் பிராண்டின் அதிகாரப்பூர்வமற்ற 'லிட்டில் சிஇஓ'வாக பணியாற்றுகிறார்.
தமிழில்: ஜெயஸ்ரீ

4 ஆண்டுகளில் 35 விற்பனை நிலையங்கள் - சிறார் ஆடைகள் பிரிவில் வளர்ச்சி கண்ட ப்ராண்ட் கதை!