அன்று சச்சின்; இன்று அமைச்சர் - பவுலிங் திறமையால் பலரின் பாராட்டை பெறும் கூலித் தொழிலாளியின் மகள்!
ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் மாநில இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரை, கிளீன் பவுல்ட் செய்து அமைச்சரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வருங்கால கிரிக்கெட் நம்பிக்கை நட்சிரமாக மாறினார் 12 வயதான இளம்வீராங்கனை.
ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அரசின் இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரை, கிளீன் பவுல்ட் செய்து அமைச்சரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வருங்கால கிரிக்கெட் நம்பிக்கை நட்சிரமாக மாறினார் 12 வயதான இளம்வீராங்கனை.
ஒரு ஆண்டிற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராஜ்யவர்தன் ரத்தோர் போன்ற பழம்பெரும் விளையாட்டு வீரர்களுடன் விளையாடுவதை சுசீலா மீனா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால், சில நேரங்களில் ஒருபோதும் நீங்கள் நினைத்திராத கனவுகளும் நனவாகும்.

ஆம், ராஜஸ்தானைச் சேர்ந்த 12 வயதான சுஷிலா மீனா, அவரது அபாரமான பந்துவீச்சாலும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஜாகீர் கானை நினைவூட்டும் பவுலிங் பாணியாலும், லெஜென்ட்ரி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை ஈர்த்து, அவரது பாராட்டுகளை பெற்று வைரலானார். இம்முறை ராஜஸ்தானின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை, கிளீன் பவுல்ட் செய்து, மீண்டும் வைராகி, மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் பிரதாப்கருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து தேசிய புகழுக்கான சுஷிலாவின் பயணம் அவரது கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் பெரிய கனவுகளுக்கு ஒரு சான்றாகும்.
யார் இந்த சுஷீலா?
சுஷீலாவின் குடும்பம் மிகவும் எளிய பின்புலம் கொண்டது. அவரது தந்தை கூலித் தொழிலாளி. குடும்பத்தின் பொருளாதாரநிலை மோசமாக இருந்தாலும், சுஷீலாவிற்கு கிரிக்கெட்டில் தொடர்ந்து பல உயரங்களை அடையவேண்டும் என்பது கனவு. ஆனால், அக்கனவு அவரது பயிற்சியாளரான ஈஸ்வர்லால் மீனாவின் ஆதரவு இல்லாமல் சாத்தியமற்றது. பிரதாப்கரில் உள்ள ராஜ்கியா பிரத்மிக் வித்யாலயாவில் பயிற்சி அளித்துவரும் அர்ப்பணிப்புமிக்க பயிற்சியாளரான ஈஸ்வர்லால், 2017ம் ஆண்டு முதல் கிரிக்கெட்பயிற்சி அளித்துவருகிறார்.
அந்தாண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் முழு வீச்சில் இருந்தது. போட்டி குறைவாக கருதப்பட்ட பெண்கள் கிரிக்கெட்டில் அவர்களது பள்ளி மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என்று தீவிர நோக்கில் பயிற்சி அளித்தார். ஆனால், களநிலவரமோ கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் அவர்களை பள்ளிக்கு வரவைக்க முடியும் என்றிருந்தது.
ஈஸ்வர்லாலின் இலவச பயிற்சித்திட்டத்தில் சுஷிலா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில், சுஷிலா மற்ற பெண்களைப் போலவே பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். ஆனால், பந்து வீச்சில் அவருக்கிருந்த திறமையை பயிற்சியாளர் அவரை பவுலிங் வீராங்கனையாக்கினார்.
"சுஷிலாவின் பந்துவீச்சு சுமார் 3-4 மாதங்களுக்கு முன்பு நன்றாக மாறியது. கடந்த ஆண்டு அவர் பந்து வீச முடியாது என்று நினைத்தேன், ஆனால் இப்போது அவர் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளார்," என்றார் ஈஸ்வர்லால்.

சுஷிலா மீனா மற்றும் பயிற்சியாளர் ஈஸ்வர்லால்.
ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் விளையாட்டு சங்கத்தில் சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில், அம்மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோரை கிளீன் பவுலிங் செய்து அசத்தினார் சுஷிலா. சுஷீலாவின் திறமையை பாராட்டிய அமைச்சர் அவரது எக்ஸ் பக்கத்தில்,
"இளம் மகளால் கிளீன் பவுல்டு செய்யப்பட்ட பிறகு நாங்கள் அனைவரும் வென்றோம்," என்று அவர் பதிவிட்டார்.
இதற்கு முன்னதாக, கடந்தாண்டு இறுதியில் சுஷீலாவின் பந்து வீசும் வீடியோவை பார்த்த சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் பக்கத்தில், அவ்வீடியோவை பகிர்ந்து,
"மிருதுவாக, சிரமமில்லாமல், பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறது. சுஷீலா மீனாவின் பவுலிங் ஆக்ஷனில் உங்கள் சாயல் ( 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் ஒப்பிட்டு, அவரை டெக் செய்திருந்தார்) தெரிகிறது," என்று பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ வைரலாகவே, சுஷிலாவின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் உதவித்தொகை வழங்கியுள்ளது. மேலும், ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர உள்ளார்.
"எனக்கு உதவித்தொகை கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன். தடைகளை உடைத்து, கிராமப்புறங்களைச் சேர்ந்த மற்ற பெண்கள் விளையாட்டில் இறங்கி சிறந்து விளங்க வழி வகுப்பதே அவரது கனவு," என்று சுஷிலா பெருமையுடன் பகிர்ந்தார்.
கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் குறிப்பிடத்தக்க பிரபலத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக 2017ம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் தேசிய அணியின் அற்புதமான செயல்திறனுக்குப் பிறகும், மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் போன்ற வீராங்கனைகளின் சிறப்பான விளையாட்டால் மகளிர் கிரிக்கெட் பக்கமும் மக்களின் பார்வை திரும்பியது.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டு மக்களை கவர்ந்திழுக்கும் நிலையில், கிரிக்கெட்டில் சிறந்துவிளங்கும் கிராமப்புற குழந்தைகளுக்கான பரந்த வாய்ப்புகளின் அவசியத்தை உணர்ந்து, அவர்களது திறன்களை வளர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும், என்று வலியுறுத்தினார் ஈஸ்வர்லால்.

ஷாக் அடித்து இருதயம் செயலிழந்த சிறுவன்: சாலையிலேயே சிபிஆர் செய்து உயிரைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்!