தோல்வியில் தொடங்கி ரூ.2,500 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமான ‘சோலார் இண்டஸ்ட்ரீஸ்’ வெற்றிக் கதை!
வெடிபொருட்கள் வர்த்தகத்தில் தொடங்கப்பட்டு தொழிற்சாலை அமைத்து தயாரிப்புப் பணிகளை தொடங்கிய சத்யநாராயன் நந்த்லால் நுவல் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவி முன்னணி வெடிபொருட்கள் தயாரிப்பாளராக வளர்ச்சியடைந்துள்ளார்.
இன்று உச்சத்தை தொட்டிருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சிக்கலின்றி, எளிதாக ஒரு வணிகத்தைக் கட்டமைத்துவிடுவதில்லை. எத்தனையோ சவால்களையும் தடங்கல்களையும் கடந்தே வெற்றியை வசப்படுத்துகின்றன.
1970-களில் தொழில் முயற்சியைத் தொடங்கிய சத்யநாராயன் நந்த்லால் நுவல் அப்படிப்பட்ட ஒரு சவாலான பயணத்தைக் கடந்து வந்துள்ளார். வருங்காலத்தில் ஒரு முன்னணி வெடிபொருட்கள் தயாரிப்பாளராக அங்கீகாரம் பெறுவார் என ஆரம்ப நாட்களில் அவர் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்திய அரசாங்கத்தின் உரிமம் பெற்று இந்திய ஆயுதப் படைக்கு வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தைக் கட்டமைத்துள்ளார்.

சத்யநாராயன் நந்த்லால் நுவல், நிறுவனர், சோலார் இண்டஸ்ட்ரீஸ்
”நான் ராஜஸ்தானில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே தொழில் செய்வதில் ஆர்வம் பிறந்தது. படிப்பை பாதியில் விட்டுவிட்டேன். தொழில் முயற்சியில் இறங்கினேன். தொழில் நுணுக்கங்கள் புரியாமல் களமிறங்கியதில் முதல் ஒன்றிரண்டு தொழில் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன,” என்கிறார் சத்யநாராயன்.
சத்யநாரயன் உறவினர் ஒருவருடன் சேர்ந்து வேலை செய்ய நாக்பூர் சென்றார். வாடகைக்கு அறை எடுத்து தங்கக் கையில் பணமில்லை. ரயில் நிலையத்தில் இரவு நேரத்தைக் கழித்துள்ளார்.
ஒருமாத கால கடின போராட்டத்திற்குப் பிறகு வெடிபொருட்களை வர்த்தகம் செய்ய உரிமம் கிடைத்தது. அவற்றை சேமிக்கக் கிடங்கும் கிடைத்தது. இதற்கான உரிமம் வைத்திருந்தவருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது.
மாநிலத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கங்களுக்குப் பல ஆண்டுகள் வெடிபொருட்கள் விநியோகித்து வந்தார். இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரிக்கு கன்சைன்மெண்ட் ஏஜெண்டாகவும் இருந்தார். இருப்பினும் போதிய வருவாய் கிடைக்கவில்லை.
1990-களில் கன்சைன்மெண்ட் ஏஜெண்டாகப் பலர் செயல்பட ஆரம்பித்ததும் போட்டி அதிகரித்துள்ளது. தொழிலைத் தக்கவைத்துக்கொள்ள சத்யநாராயன் தன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணத்தைப் புரட்டினார்.
ஒரு கட்டத்தில் வர்த்தகத்தை விட்டுவிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பைக் கையிலெடுக்க முடிவு செய்தார்.
1995-ம் ஆண்டு சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவினார். ஓராண்டு வரை வெடிபொருட்களை ட்ரேட் செய்தார். அதன் பிறகு, ஒரு சிறிய தொழிற்சாலை அமைத்து வெடிபொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இந்தத் தொழிற்சாலையை அமைக்க 1 கோடி ரூபாய் முதலீடு செய்தார்.
முதல் தலைமுறை தொழில்முனைவரான சத்யநாராயன் தன்னுடைய நீண்ட வணிக பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
அவருடனான நேர்காணலின் தொகுப்பு:
எஸ்எம்பிஸ்டோரி: சோலார் இண்டஸ்ட்ரீஸ் செயல்பாடுகள் என்ன?
சத்யநாராயன்: சோலார் இண்டஸ்ட்ரீஸ் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனம். இந்நிறுவனம் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் வெடிபொருட்கள், அவற்றை வெடிக்கச் செய்யும் சிஸ்டம் போன்றவற்றைத் தயாரித்து, விநியோகித்து, ஏற்றுமதி செய்கிறது. ஸ்லர்ரி மற்றும் எமல்ஷன் பேஸ் வெடிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வெடிபொருட்களை சோலார் இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்கிறது.
மொத்த வெடிபொருட்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட வெடிபொருட்கள், பெண்டெரித்ரிடைல் டெட்ரானைட்ரேட் (PETN) போன்றவற்றுடன் கேஸ்ட் பூஸ்டர், டெடனேட்டர், டெடனேட்டிங் ஃப்யூஸ் உள்ளிட்ட ஆக்சசரீஸ் இதில் அடங்கும். சுரங்கங்கள் மற்றும் கட்டமைப்புத் துறைகளில் இந்தத் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் எட்டு மாநிலங்கள், வெளிநாடுகளில் நான்கு இடங்கள் என மொத்தம் 25 தயாரிப்புத் தொழிற்சாலைகள் இந்நிறுவனத்திற்கு உள்ளன. உலகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இதன் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.
பாதுகாப்புத் துறைக்கு சேவையளித்து வரும் இந்நிறுவனம் விண்வெளித் துறையின் பயன்பாடுகளுக்கும் சேவையளிக்கத் தொடங்கியுள்ளது.
சோலார் இண்டஸ்ட்ரீல் தொழிற்சாலைகளுக்கான வெடிபொருட்களின் உள்நாட்டு சந்தையில் இன்று முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. மொத்த சந்தை அளவில் 25% பங்களிக்கிறது. உள்நாட்டு சந்தை மூலம் 65 சதவீதமும் ஏற்றுமதி மூலம் 35 சதவீதமும் வருவாய் ஈட்டப்படுகின்றன.
சோலார் இண்டஸ்ட்ரீஸ் 2006-ம் ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்தது. 2019ம் ஆண்டு இந்நிறுவனத்தின் வருவாய் 2,461.6 கோடி ரூபாய்.
எஸ்எம்பிஸ்டோரி: நிறுவனத்தின் சானல் உத்திகள் என்ன?
சத்யநாராயன்: இருபதாண்டு கால அனுபங்களைக் கொண்டு தொழிற்சாலைகளுக்கான வெடிபொருட்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட வெடிபொருட்கள், வெடிப்பதற்கான சிஸ்டம், பாதுகாப்புத் துறைக்கான வெடிபொருட்கள் என பல வகையான வெடிபொருட்களைத் தயாரிக்கிறோம்.
சமீபத்தில் விண்வெளிப் பயன்பாடுகளுக்காக புரொபெல்ஷன் சிஸ்டம் வணிகத்தில் களமிறங்கியிருக்கிறோம். செயற்கைக்கோள் ஏவும் வணிகத்தில் நுழைந்துள்ள Sky Root என்கிற ஸ்டார்ட் அப்பில் ஈக்விட்டி முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்தது. இஸ்ரோவிடமிருந்தும் சப்ளை ஆர்டர் பெற்றுள்ளது.
உள்நாட்டு சந்தைகளில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள எங்கள் தயாரிப்புகளை மேலும் விரிவுபடுத்தி வளர்ச்சியடைய இருக்கிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் துறையின் சந்தை அளவு என்ன? இதுபோன்ற வணிகத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?
சத்யநாராயன்: 2018-ம் ஆண்டில் உலகளவில் சுரங்கங்களுக்கான வெடிபொருட்கள் சந்தை 13,900 மில்லியன் டாலராக இருந்தது. 2019ம் ஆண்டில் இது 14,250 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2025-ம் ஆண்டில் சந்தை அளவு 16,800 மில்லியன் டாலராக வளர்ச்சியடையும் என துறைசார் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவில் வருங்காலத்தில் வெடிபொருட்கள் துறையில் வாய்ப்புகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் அரசு கொள்கைகள், சுற்றுச்சூழல் அனுமதி, உரிமத்திற்கான தேவை, மிகப்பெரிய நிலம் என எத்தனையோ காரணிகள் இதில் நுழைவதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றன. மூலதன செலவும் அதிகம். இவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் துறையில் நுழைவது நல்லது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிகத்தின் முக்கிய மைல்கற்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?
சத்யநாராயன்: சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆர்&டி பிரிவைப் பொருத்தவரைக் கடந்த சில ஆண்டுகளை மைல்கல் ஆண்டுகள் என்றே குறிப்பிடலாம். அந்த அளவிற்கு புதிய தயாரிப்புகளை உருவாக்கி தரத்தையும் திறனையும் மேம்படுத்தியிருக்கிறோம்.
ஆயுதப்படைக்காக கையெறி குண்டுகள் உருவாக்கப்பட்டதை முக்கிய மைல்கல்லாகக் கருதுகிறோம்.
2013-ம் ஆண்டு மூன்று லேயர் ஷாக் ட்யூப்ஸ் தயாரிப்பைத் தொடங்கினோம். மேலும் எலக்ட்ரானிக் டெடனேட்டர்களை வணிக ரீதியாக தயாரிக்கத் தொடங்கினோம்.
2018-19-ம் ஆண்டுகளில் 4,50,000 மில்லியன் டன்னுக்கும் மேல் வெடிபொருட்களை தயாரித்துள்ள முதல் இந்திய நிறுவனம் என்கிற பெருமை சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வருங்கால திட்டங்கள் என்ன?
சத்யநாராயன்: சுரங்கங்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் வெடிபொருட்களுக்கான தேவை அதிகம் இருக்கும். வரும் ஆண்டுகளில் ஐந்து நாடுகளில் செயல்படத் தொடங்கவேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்திருக்கிறோம்.
வரும் ஆண்டுகளில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதால் ஹவுசிங் துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பாதுகாப்புப் பிரிவில் தயாரிப்பு வகைகளை அதிகப்படுத்தியிருப்பதால் உள்நாட்டு சந்தைகளிலும் வெளிநாட்டு சந்தைகளிலும் ஆர்டர் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன.
பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புகளில் முதலீடுகளை அதிகப்படுத்த இந்திய அரசாங்கள் கொள்கைகள் வகுத்துள்ளன. நீண்ட கால அடிப்படையில் வெடிபொருட்கள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படவேண்டும் என்றும் ஏற்றுமதி அளவு இரட்டிப்பாக்கப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா