கொங்கு மண்ணில் பிறந்த அசைவ ஓட்டல் - 500 கிளைகள் விரிவாக்கத்தில் ‘ஜூனியர் குப்பண்ணா’
அசைவ உணவகம் என்றாலே பிரியாணிதான் பேமஸ். பல பிரியாணி கடைகள் உள்ளன. ஆனால் ஜூனியர் குப்பண்ணாவில் பிரியாணி அதிகம் சாப்பிடுகிறார்களா? எனும் கேள்விக்கு மூர்த்தி பதில் அளித்தார். எங்களுடைய விற்பனையில் 35 சதவீதம் அளவுக்கு பிரியாணிதான் பங்கு வகிக்கிறது.
அசைவப் பிரியர்களுக்கு தற்போது பல ஓட்டல்கள் உள்ளன. ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவாக ஓட்டல்கள் கிடையாது. 1960கள் முதல் செயல்பட்டுவரும் ‘ஜூனியர் குப்பண்ணா’ அசைவ ஓட்டல்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
கோவிட்டுக்கு பிறகு சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் தற்போது வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது இந்த ஓட்டல். தமிழகத்தில் விரிவாக்கப் பணிகளில் ஜூனியர் குப்பண்ணா கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது ரீடெய்ல் துறையில் பல ஆண்டுகள் அனுபவமிக்க பாலசந்தர் பங்குதாரராகவும் இயக்குநர் குழுவிலும் இணைந்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது 50 கிளைகளுடன் இயங்கி வரும் ஜூனியர் குப்பண்ணா அடுத்த 5 ஆண்டுகளில் 500 கிளைகளை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டுவருகிறது.
நிறுவனத்தின் தலைவர்களும், குப்பண்ணாவின் மகன் மூர்த்தி மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் ஆறுமுகம் அவர்களை சந்தித்து நிறுவனம் தோன்றிய வரலாறு தற்போதைய சூழல் என பல விஷயங்கள் பற்றி பேசினோம்.
ஜூனியர் குப்பண்ணா தொடக்கம்
ஜூனியர் குப்பண்ணாவின் தலைவர்களுள் ஒருவரான மூர்த்தி பேசத் தொடங்கினார்.
என்னுடைய அப்பா 1944-ம் ஆண்டு ஈரோடு ரயில் நிலையத்தில் வேலை செய்தார். அப்பாவின் திருமணத்துக்குப் பிறகு 1960-ம் ஆண்டு அம்மாவும் அப்பாவும் இணைந்து சிறிய ஓட்டல் தொழிலை தொடங்கினர்.
அப்போதெல்லாம் ஓட்டலுக்கு பெயரெல்லாம் கிடையாது. கடை யாருடையதோ அவருடைய பெயர்தான். கருப்பண்ணன் கடை, சின்னப்பன் கடை என பெயரில்தான் கடை அடையாளப்படுத்தப்படும்.
”அப்பா பெயர் குப்புசாமி. அதனால் குப்பண்ணன் கடை என்றே அடையாளம் காணப்பட்டது,” என்றார் மூர்த்தி.
1983-ம் ஆண்டு நானும் தொழிலுக்கு வந்தேன். ஈரோடு முழுவதும் குப்பண்ணா என்றால் நன்றாக தெரியும். அந்த சமயத்தில் ஈரோட்டில் இரண்டாம் கடை தொடங்க திட்டமிட்டோம். அப்போது என்ன பெயர் வைக்கலாம் என விவாதித்தபோதுதான் ’சின்ன குப்பண்ணா’ என்னும் பெயர் பரிசீலனையில் இருந்தது. ஆனால், சின்ன என்றால் சிறியது என்னும் அர்த்தம் வரும். அதனால், ’ஜூனியர் குப்பண்ணா’ என்னும் பெயரை வைத்தோம். இந்த இரு கடைகள் மட்டுமே செயல்பட்டுவந்தது, என பழைய வரலாறை சுவாரசியமாக பகிர்ந்தார்.
அதன் பிறகு, அண்ணன் ஆறுமுகம் எங்களுடன் இணைந்தார். அவரும் பேக்கரி தொழிலில் இருந்ததால் நாங்கள் உணவுகுறித்து அதிகம் உரையாடுவோம். அதனால், விரிவாக்கத்தில் கவனம் செலுத்தினோம்.
2009-ம் ஆண்டு அடுத்த கிளையை கோவையில் தொடங்கினோம். அப்போது முதல் பிரான்ஸைசி முறையில் தொடர்ந்து விரிவாக்கம் செய்தோம். சொந்தமான சில கடைகள் இருந்தாலும் பிரான்ஸைசியில் அதிக கடைகள் இருந்தன.
பிரான்ஸைசி சிக்கல்
நாங்கள் பிரான்ஸைசி முறையில் செயல்பட்டுவந்ததால் ஒவ்வொரு நிர்வாகமும் வெவ்வேறாக இருந்தன. தவிர ஒவ்வொரு பிரான்ஸைசி எடுத்தவர்களுக்கும் ஒவ்வொரு முன்னுரிமைகள் இருந்தன. அதனால், ஓட்டல்களின் தரத்தில் வேறுபாடு இருந்தது. இந்த சமயத்தில் 11 பிரான்ஸைசிகள் காலியானது.
”இந்த சமயத்தில்தான் ரீடெய்ல் துறையில் அனுபவம் பெற்ற பாலசந்தர் எங்களுடன் இணைந்தார். அந்த சமயத்தில்தான் கோவிட்-ம் வந்தது. பிரான்ஸசிகள் குறைந்தன. கோவிட் வேறு என்பதால் சிக்கலான காலகட்டம். கணிசமான அளவுக்கு நிதி திரட்டினோம். பாலசந்தரும் இயக்குநர் குழுவில் இணைந்தார். அதன்பிறகு யுத்தியை மாற்றினோம்.”
வேறு வகையான பிரான்ஸை முறைக்கு மாறினோம். ஆரம்பத்தில் எங்களுடைய பிராண்டை கொடுத்தோம், பிரான்ஸைசி எடுத்தவர்கள் கடையை நடத்தினார்கள். ஆனால், தற்போது பிரான்ஸைசி எடுத்தவர்கள் பணம் மட்டுமே கொடுத்தால் போதும், நிறுவனத்தை நாங்கள் நடத்திகொள்வோம். அப்போதுதான் அனைத்து இடங்களில் சுவை ஒன்றாக இருக்கும்.
நாங்கள் கடைகளில் பயன்படுத்தும் மசாலாவை நாங்கள்தான் தயாரித்து அனைத்து இடங்களிலும் அனுப்புகிறோம். அதேபோல, ஒரு உணவை எப்படி சமைப்பது என ஒரு standard operating procedure அமைத்திருக்கிறோம்.
ஒரு பிரான்ஸைசி முதலீடுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை தேவைப்படும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை கிடைத்துவிடும் என மூர்த்தி கூறினார்.
பிரான்ஸைசி நிறுவனங்களிடம் முதலீடு மட்டும் வாங்குவதை விட நீங்கள் முதலீடு செய்தால் இன்னும் எளிதுதானே என்னும் கேள்விக்கு, ஆறுமுகம் பதில் அளித்தார்.
“நாமே முதலீடு செய்யலாம். ஆனால், நாங்கள் வைத்திருக்கும் இலக்குக்கு நாங்கள் மட்டுமே முதலீடு செய்தால் போதாது. பலரையும் ஒருங்கிணைத்தால் மட்டுமே அந்த இலக்கை அடைய முடியும் எனத் தெரிவித்தார். மேலும் தற்போது மாதம் இரு கடைகள் என விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இருக்கிறோம். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்கிறோம். இலங்கை, சிங்கப்பூர், ஆம்ஸ்டர்டாம், துபை, இங்கிலாந்து உள்ளிட்ட பகுதிகள் கிளை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்,” என்றார்.
உலகில் எங்கு சாப்பிட்டாலும் எங்கள் உணவகங்களில் ஒரே சுவையை உறுதி செய்கிறோம், என்றார்.
அசைவ உணவகம் என்றாலே பிரியாணிதான் பேமஸ். பல பிரியாணி கடைகள் உள்ளன. ஆனால் ஜூனியர் குப்பண்ணாவில் பிரியாணி அதிகம் சாப்பிடுகிறார்களா? எனும் கேள்விக்கு,
”எங்களுடைய விற்பனையில் 35 சதவீதம் அளவுக்கு பிரியாணிதான் பங்கு வகிக்கிறது. மற்ற கடைகளின் பெயர்களிலே பிரியாணி இருப்பதால் ஃபேமஸ் எனும் தோற்றம் இருக்கிறது. இங்கு அதுமறைமுகமாக இருக்கிறது,” என்றார் மூர்த்தி.
இதைவிட வெஜ் மீல்ஸ் சாப்பிடுவதற்காகவும் அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். மற்ற ஓட்டல்களில் 120 ரூபாய் என்னும் அளவில் வெஜ் மீல்ஸ் இருக்கிறது. இங்கு கொஞ்சம் அதிகம் என்றாலும் வெஜ் மீல்ஸும் இங்கு அதிகம் விற்பனையாகிறது.
அடுத்ததாக சோதனை அடிப்படையில் சில கடைகளில் மட்டுமே காலை உணவு அறிமுகம் செய்திருக்கிறோம். நாங்கள் அறிமுகம் செய்த கடைகளில் விற்பனை சிறப்பாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு காலையில் அசைவம் சாப்பிடுபவர்கள் அதிகம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அசைவம் என்றாலே மதியம் என்றாகிவிட்டது. தற்போது மீண்டும் காலையில் சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும், கிண்டி கத்திப்பாராவில் 24 மணி நேரம் செயல்படும் உணவகத்தை தொடங்கி இருக்கிறோம். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நிதி நிலைமை
தற்போது மொத்தமாக எங்களிடம் 1500 பணியாளர்கள் உள்ளனர். நிறுவனத்தின் மாத விற்பனை 15 கோடி ரூபாய் அளவில் இருக்கிறது. தற்போது மாதம் இரு கடைகள் என்னும் அளவில் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இருப்பதால் நிறுவனத்தின் வருமானம் சீராக உயரும். மேலும், நிறுவனத்தில் மூன்றாம் தலைமுறையும் தொழிலை கவனித்துக்கொள்ள தொடங்கிவிட்டனர்.
நாங்கள் ஆரம்பகட்டத்தில் கடை திறக்கும்போது நாளிதழ்களில் ஒரு வாரத்துக்கு விளம்பரம் கொடுத்திருந்தோம். ஆனால், முதல் நாளே பெரிய கூட்டம் வந்தது. அதன் பிறகு, அடுத்த நாள் விளம்பர வேண்டாம் என நிறுத்திவிட்டோம்.
அதாவது, மக்கள் மனதில் இந்த பெயர் பதிந்திருக்கிறது என்று எங்களுக்குப் புரிந்தது. அதனை மேற்கொண்டு செல்லும் பணியில் நாங்கள் இருக்கிறோம் என சகோதரர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.