1,25,000 டாலர் ப்ரீ-சீட் நிதி திரட்டியது தமிழக டீ ஸ்டார்ட்அப் Croft Beverages!
தேயிலை விவசாயிகளை மையமாகக் கொண்ட கோவை ஸ்டார்ட்அப் நிறுவனமான கிராஃப்ட் பெவரேஜஸ், ஈக்விட்டி மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் விதை நிதிக்கு முந்தைய நிதிச் சுற்றில் 125 ஆயிரம் டாலர் நிதி திரட்டியுள்ளது.
ஐஐஎம்பி (IIMB) முன்னாள் மாணவரும், ஓலம் காபியின் முன்னாள் வணிகத் தலைவருமான ஹரீஷ் கண்ணனால் நிறுவப்பட்டது 'கிராஃப்ட் பெவரேஜஸ்' (Croft Beverages) நிறுவனம். சிறிய தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஒரு நிலையான மாதிரியை உருவாக்கும் நோக்கத்துடனும் இந்த ஸ்டார்ட் அப்பை அவர் உருவாக்கியுள்ளார்.
தேயிலையை அதன் வேர்களில் இருந்து கண்டறிந்து, அதன் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கி, தேயிலை விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டு கிராஃப்ட் பெவரேஜஸ் நிறுவனத்தை ஹரீஷ் செயல்படுத்தி வருகிறார்.
தற்போது, கிராஃப்ட் பெவரேஜஸ் நிறுவனமானது, ஈக்விட்டி மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் விதை நிதிக்கு முந்தைய நிதிச் சுற்றில் 1,25,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.8 கோடி ரூபாய்) நிதி திரட்டியுள்ளது.
தேயிலை, நிலைத்தன்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் தொழில்களில் இருந்து குறிப்பிடத்தக்க ஏஞ்சல் முதலீட்டாளர்களால் இந்த முதலீட்டுச் சுற்று வழிநடத்தப்பட்டுள்ளது.

கிராஃப்ட் பெவரேஜஸ்-ன் நோக்கம்
"2030க்குள் நீலகிரி மண்டலத்தில் 100க்கும் மேற்பட்ட குறு தேயிலை விவசாயிகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளை ஆரம்பித்து, புதிய நெட்வொர்க்கை உருவாக்கி 3000க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம்," என்கிறார் ஹரீஷ்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கிராஃப்ட் பெவரேஜஸ் நிறுவனம் அதன் விவசாயிக்கு சொந்தமான FPC மாடலுடன், கோத்தகிரிக்கு அருகிலுள்ள பில்லிகோம்பையில் அதன் முதல் மினி தொழிற்சாலையை நிறுவி, தனது வெற்றியை இந்த நிதி திரட்டல் மூலம் உடனடியாக நிரூபிக்க பயன்படுத்தியுள்ளது.
இது போன்ற ஒவ்வொரு சிறு தொழிற்சாலையும் நேரடியாக 25 சிறு விவசாயிகளில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கி அவர்களின் வருமானத்தை 3 மடங்கு பெருக்கச் செய்கிறது. 2030ம் ஆண்டுக்குள் இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளுக்கு சொந்தமான சிறு தொழிற்சாலைகளை உருவாக்குவதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
‘உற்பத்தியிலிருந்து நேரடியாக...’ (direct from origin) என்ற மாதிரியின் கீழ் நாட்டின் சில முன்னணி பிராண்டுகளுடன் கூட்டணி சேர்ந்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தேயிலையை பண்ணையிலிருந்து கோப்பைக்கு (farm to cup) கொண்டு வரும் வரை அதன் வேளாண்மை, தரம் போன்றவற்றை ஆராய்ந்து செயல்படுவதை அதன் மூலோபாய முயற்சியாக (strategic initiatives ) கொண்டுள்ளது.

MK Jokai's tea estates
விவசாயிகளின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கட்ட தேயிலை முழுமையாக விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், அடுத்தகட்டமாக 2025ம் ஆண்டில் அடுத்த மூன்று விவசாயிகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளை அமைக்கும் பணியில் கிராஃப்ட் பீவரேஜஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் தேநீர் கோப்பையின் ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு கதையைச் சொல்லும். கிராஃப்டில், விவசாயிகள் வெறும் விவசாயிகள் மட்டுமல்ல- அவர்கள் சொந்தமாக சிறு தொழிற்சாலைகளை நடத்தும் உரிமையாளர்கள். அவர்களின் தேயிலைத் தோட்டத்தில் இருந்து உங்கள் கோப்பைக்கு, நாங்கள் கொண்டு வரும் தேநீர் நேர்மையானதும், தூய்மையானதும் ஆகும்.“
சந்தையில் உள்ள மற்ற பிராண்டுகளுக்கும், வாங்குபவர்களுக்கும் இது ஒப்பிடமுடியாத வெளிப்படைத்தன்மை. ஆனால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இது செழிப்பு. நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புதிய தேயிலை புரட்சியை உருவாக்குகிறோம்,” என கிராஃப்ட் பெவரேஜஸ் நிறுவனர் ஹரிஷ் கண்ணன் கூறுகிறார்.