இந்தியாவில் ஊழியர்களை நியமிக்கும் Tesla - மோடி, எலான் மஸ்க் சந்திப்பு எதிரொலி!
இந்திய சந்தையில் நுழைவது தொடர்பாக டெஸ்லா மற்றும் இந்திய அரசு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொடர்பு நிகழ்ந்து வரும் நிலையில், இந்திய பணிகளுக்கான விளம்பரத்தை டெஸ்லா வெளியிட்டுள்ளது.
எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைய இருப்பதையும், இந்தியாவில் பல்வேறு பணிகளுக்காக நியமனம் செய்ய இருப்பதையும் லின்க்டுஇன் விளம்பரம் மூலம் அறிய முடிகிறது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைய இருக்கும் திட்டம் தொடர்பாக முதலில் 2021ல் தகவல் வெளியானது. பெங்களூருவில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி லிட் எனும் பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக மத்திய வர்த்தக விவகாரங்கள் அமைச்சக பதிவுகளில் இருந்து தெரிய வந்தது.

2020 டிசம்பரில் நிறுவனம் தனது மாடல் 3 காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்ததாக பல செய்திகள் தெரிவித்தாலும், இறக்குமதி வரி மற்றும் உள்ளூர் உற்பத்தி நிபந்தனைகளால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இருப்பினும், டெஸ்லா நிறுவனம் தற்போது இந்திய செயல்பாட்டிற்கான நியமன பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர், ஆலோசகர்கள், வர்த்தக செயல்பாடு அனலிஸ்ட், சேவை மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்காக லிங்க்டுஇன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் இந்த பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க அந்நாடு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்கை சந்தித்த பின் 17ம் தேதி இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு சலுகைகள் மற்றும் அதிகரிக்கும் தேவை காரணமாக இந்திய மின்வாகன சந்தை சூடு பிடித்து வருகிறது. டாடா மற்றும் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பரப்பில் நுழைந்துள்ளன. மேலும், நுகர்வோர் மற்றும் வர்த்தகப் பிரிவில் மின்சார இருசக்கர வாகனங்கள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
மின் கார்கள் விற்பனையில் டெஸ்லாவை சீனாவின் பிஒய்டி பின்னுக்கு தள்ளியுள்ள நிலையில், டெஸ்லா இந்தியாவில் நுழைய திட்டமிட்டுள்ளது. நான்காம் காலாண்டில் பிஒய்டி 5,95,000 வாகனங்கள் விற்பனை செய்த நிலையில், டெஸ்லா 4,96,000 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.
பிஒய்டி ஏற்கனவே இந்திய சந்தையில் நுழைந்து தற்போது நான்காவது இடத்தில் உளது. 2024ல் 2,819 கார்கள் விற்பனை செய்துள்ளது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan