மத்திய பட்ஜெட் 2025: விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தாக்கல்!
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியை மையப்படுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் அதற்கு அடுத்தாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் தற்போதைய நிதியமைச்சர்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையப்படுத்தி அரசு முக்கிய திட்டங்களை வகுத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
“பட்ஜெட்டானது தனியார் துறை முதலீடுகளை ஊக்கப்படுத்துவது, நடுத்தர மக்களின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக கொள்கைகளைக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
“தேசம் என்பது மண் அல்ல, இந்த மண்ணில் வாழும் மக்கள்...” என்கிற தெலுங்கு கவிஞரின் கதையை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கினார்.

2021ல் பத்மஸ்ரீவிருது பெற்ற துலாரி தேவி நிதியமைச்சருக்காக பிரத்யேகமாக வெள்ளை நிறத்தில் மதுபானி கலையை கொண்டு உருவாக்கிய சேலையை கொடுத்து பட்ஜெட் உரையின் போது உடுத்திக் கொள்ள கேட்டு கொண்டதன் அடிப்படையில் அதே புடவையை மத்திய அமைச்சர் அணிந்து வந்தார். நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை அவருக்கு விளக்கினார்.
வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை 3வது பெரிய நாடாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.
நடுத்தர வர்க்க மக்கள் என்கிற வார்த்தையை தன்னுடைய உரையில் ஏழு முறை குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர்,
“இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் இருக்கின்றனர், அவர்களின் சுமைகளை குறைக்கும் விதமாக எனது அரசு முதன்முறையாக எல்லா திட்டங்களிலும் அவர்களின் நலனை அக்கறையாகக் கொண்டு செயல்படுகிறது,“ என்றார்.
நாரி சக்தி வந்தன் அதிநியம், பீமா சகி, லக்பதி துதி, க்ரிஷி சகி மற்றும் த்ரோன் திதி யோஜனா உள்ளிட்ட பெண்களை மையப்பத்திய திட்டங்களை அவர்களுக்கு அர்பணிப்பாக இந்த அரசு அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த போது “லட்சுமிதேவியின் அருளால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வளம் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
வெள்ளிக்கிழமையன்று பொருளாதார ஆய்வறிக்கையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2025-26 நிதியாண்டில் இந்தியா 6.3% முதல் 6.8% வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் 8 சதவிகித வளர்ச்சி என்கிற இலக்கோட பயணித்தால் 2047ல் நிச்சயமா இந்தியா வளர்ச்சி நிலையை அடையும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.