சிறிய ஊர்களில் உள்ள வர்த்தகர்களுக்கு யுபிஐ சேவை அளிக்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியுடன் கைகோர்த்தது IPPOPAY!
டயர் 2 ஊர்களில் உள்ள சிறு வர்த்தகங்களுக்கு உதவும் விதமாக யுபிஐ அடிப்படை டிஜிட்டல் பேமண்ட் வசதிகளை வழங்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியுடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது Ippopay.
சென்னையைச் சேர்ந்த முன்னணி நிதித் தொழில்நுட்ப நிறுவனமான IPPOPAY நிறுவனம் சிறு வர்த்தகங்களுக்கு உதவும் விதமாக யுபிஐ அடிப்படை டிஜிட்டல் பேமண்ட் வசதிகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியுடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Techfini என்பது ஒரு நிதி தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனமாகும். இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, டெக்ஃபினியின் UPI பேமெண்ட் வழிமுறை அனைத்து UPI பேமெண்ட்டுகளையும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் கைப்பிடியைப் பயன்படுத்தி செயலாக்கும்.
டெக்ஃபினியின் UPI சுவிட்ச் NPCI-யின் சான்றிதழ் பெற்றதென்பது குறிப்பித்தக்கது. இது வினாடிக்கு 10,000 பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் திறன் கொண்டது. மேலும் தொழில்நுட்பக் கோளாறுகள், அளவிடுதல் சிக்கல்கள் மற்றும் வேலையில்லா நேரத்தை நீக்கி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் தனிப்பயனாக்கக்கூடிய தீர்வுகளைக் கொண்டுள்ளது.
Techfini-யின் ஒரு தனித்துவமான பயன் என்னவெனில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் மையமான வங்கிப் பரிவர்த்தனைகள், நடவடிக்கைகளுடன் இந்தச் சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதே. இதனால்தான் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் விருப்பத் தெரிவாக டெக்ஃபினியின் இப்போபே உள்ளது.
இந்தக் கூட்டுறவு தொடர்பாக IppoPay நிறுவனர் கே.மோகன் கூறும்போது,
“வங்கித் தீர்வுகளை வழங்குவதில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கவனம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தீர்வை வழங்குவதில் IppoPay இன் கவனம் இந்த கூட்டாண்மையை வெற்றிக் கூட்டணியாக மாற்றும். தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 75% க்கும் அதிகமானவை இரண்டாம் அடுக்கு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளன. IppoPay-வின் விநியோகம் TMB-இன் நூற்றாண்டுகால வங்கி அனுபவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையுடன் இணைந்து, இந்த வணிகர்களின் குறிப்பிடத்தக்க தளத்திற்கு டிஜிட்டல் நிதிச் சேர்க்கையைக் கொண்டுவர உதவும்,” என்றார்.
கூட்டுறவு குறித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பொது மேலாளர் அசோக் குமார் கூறும்போது,
“எங்கள் வணிக வாடிக்கையாளர்களுக்கு அருமையான டிஜிட்டல் முறை பணம் செலுத்தும் தீர்வுகளை வழங்க இப்போபே உடனானக் கூட்டணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் அவர்களது வணிகம் வளர்ச்சி பெறும் என்று நம்புகிறோம்,” என்றார்.