Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘வலிமை குன்றியவர்களை வலிமையாக்குவதே எனது பணி’ - சிறப்பு குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தும் கல்வியாளர் ஜெயபாரதி!

சமூக வாழ்க்கையை கற்றுத் தருவது தான் கல்வி. ஆனால், இன்றைக்கு நாம் தருகிற கல்வி, சமூகத்துக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாததாக இருக்கிறது. இப்பிரச்சனையைக் கருத்தில் கொண்டு 30 வருடத்திற்கும் மேல் மாற்றுக் கல்வியில் செயலாற்றி வருகிறார் சித்தார்த்தா பள்ளியின் தாளாளர் ஜெயபாரதி.

‘வலிமை குன்றியவர்களை வலிமையாக்குவதே  எனது பணி’ - சிறப்பு குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தும் கல்வியாளர் ஜெயபாரதி!

Wednesday January 17, 2024 , 6 min Read

கல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் விலங்குத் தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைத்திற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத்திறனை அவனுக்குள் உருவாக்குவதாகும். 

ஆனால், இன்றைய சமூகம், குழந்தைகளின் கரங்களில் கத்தை கத்தையாக பாடப்புத்தகங்களைத் திணித்து பள்ளி என்னும் நாலு சுவருக்குள் அடைப்பதால், குழந்தைகள் தனது தனித்துவத்தன்மையைத் இழந்து, வெறும் பொருளீட்டும் கருவியாக மட்டுமே இன்றைய கல்வியை அணுகுகின்றனர். இதன் விளைவு, ஒழுங்கின்றி இச்சைக்கும், அகந்தைக்கும் ஆட்பட்டு சாதனையாளராக வேண்டியவர்கள் சமூக குற்றவாளிகளாக மாறுகின்றனர். 

எது கல்வி?

2019-ஆம் ஆண்டின் நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 3,305 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 2,470 'படித்த' சிறார் குற்றவாளிகள்..!

பள்ளி மாணவர்களிடையே நடந்த ஜாதி கலவரத்தில் கத்தி குத்து..! 

சினிமா நடிகரை பார்க்கும் ஆசையில் சைக்கிள்களைத் திருடி விற்று சென்னைக்கு 'கிளம்பிய' பள்ளி மாணவர்கள்..! 

15 வயது சிறுவன் வீடு புகுந்து, பெண்ணை பாலியல் பலாத்காரம்!

இப்படி பல குற்றங்கள் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இன்றைய காலகட்டத்தில், சிறார் குற்றங்கள் சமூகத்தில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, தொடர்ந்து பரவியும் வருகிறது. இக்குற்றத்திற்கான காரணங்களாக குடும்ப சுழல், வறுமை, சமூகம் எனப் பல காரணங்களைக் கூறினாலும் முக்கிய காரணமாய் இருப்பது ஆரோக்கியமான கல்வி கிடைக்காமல் இருப்பதே! 

சமூக வாழ்க்கையை கற்றுத் தருவது தான் கல்வி. ஆனால், இன்றைக்கு நாம் தருகிற கல்வி, சமூகத்துக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாததாக இருக்கிறது. இச்சமூக பிரச்சனையைக் கருத்தில் கொண்டு கடந்த 30 வருடத்திற்கும் மேல் மாற்றுக் கல்வி குறித்து பேசியும் செயலாற்றியும் வருகிற சித்தார்த்தா பள்ளியின் தாளாளர் ஜெயபாரதி அம்மாவை பற்றியதே இக்கட்டுரை!

ஜெயபாரதி அம்மா!

ஜெயபாரதி அம்மா!

சித்தார்த்தா பள்ளியின் தொடக்க காலம்: 

மறைந்த சூழலியலாளரும் மருத்துவருமான ஜீவா அவர்களின் சகோதரி தான் ஜெயபாரதி. ஈரோட்டில் இவர் நடத்தும் சித்தார்த்தா பள்ளி வழக்கமான கல்விமுறைகளிலிருந்து விலகி பல முன் முயற்சிகளுக்குத் தொடக்கமாகியிருக்கிறது. 

“நாம தான் படிக்கல நம்ம புள்ளையாது நல்லா படிக்கணு” என்ற எண்ணத்தோடு, அல்லும் பகலுமா அயராது இரத்தம் சிந்தி உழைக்கும் ஏழை தாய்தந்தையரின் துயர் துடைக்க, “என்றோ ஓரு நாள் நம் நிலை மாறும்” என்ற நம்பிக்கையில், படிக்கும் வயதில் வேலைக்கு போற குழந்தையின் ஏக்கத்தினைப் போக்க, ஒரு பெரும் கனவோடு 1984-ம் ஆண்டு டாக்டர் ஜீவானந்தம் அவர்களால் தொடங்கப்பட்டது தான் ’சித்தார்த்தா பள்ளி’.

இவரது நோக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பின்னாளில் தனது சகோதரியான ஜெயபாரதி அவர்களும் பள்ளியோட பொறுப்புகள்ல இணைஞ்சுகிட்டாங்க… 

டாக்டர் ஜீவானந்தம் & ஜெயபாரதி அம்மா

டாக்டர் ஜீவானந்தம் & ஜெயபாரதி அம்மா

இந்த பள்ளியில் படிக்கிற மாணாக்கர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி சமூகத்தையும் படிக்கவைக்க இருவரும் ஆசப்பட்டாங்க, அதிலும் குறிப்பாக அறம் சார்ந்த கல்வியாக இருக்கனும்-னு நினைத்தார்கள். ஏனெனில், அறம் சார்ந்த மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளாமல் வெறுமனே ஏட்டுச்சுரைக்காய் கல்வியை மட்டுமே பெறுவது ஆபத்தானது என்றும், அது மனிதனை புத்திசாலியான பிசாசுகளாக மட்டுமே மாற்றும் என்று எண்ணினர். எனவே, சித்தார்த்தா பள்ளிக்கென சில தனித்துவ கல்வித்திட்டத்தினை வகுத்தனர். 

சித்தார்த்தா பள்ளியின் தனித்துவ கல்வித்திட்டம்: 

1. சமூக கல்வி : 

“நம் நாட்டிற்கு தற்போது நல்ல பொறியாளரை காட்டிலும், நல்ல மருத்துவரை காட்டிலும் அவசியமானது நல்ல மனிதர்களை உருவாக்குவது தான்...”

அதன் முதற்கட்டமாக இங்கு பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணாக்கர்கள் அரசு வழங்கும் பாடத்திட்டத்தோடு சேர்த்து சமூக கல்வியையும் வழங்குகின்றனர். அதாவது, சமூக பிரச்சனையை கள ஆய்வு செய்து, பிரச்சனைக்கான மூலத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறார்கள் மாணவர்கள். பவானி ஆற்றின் சாயநீர் கழிவு பிரச்சினையில் தொடங்கி மரண தண்டனைகள் குறித்த ஆய்வுகள் என இதுவரைக்கும் 43-க்கும் மேற்பட்ட சமூகப் பிரச்சினை சார்ந்த கள ஆய்வுகளை செய்து முடித்துள்ளனர். கள ஆய்விற்காக மாணாக்கர்கள் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தின் போது கிடைக்கின்ற தகவலும், அனுபவமும் இயல்பாகவே குழந்தைகளை தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும், தெளிவுமிக்கவர்களாகவும் மாற்றிவிடுகிறது.  

அதிலும் குறிப்பாக இவர்கள் கள ஆய்வு செய்த ‘பவானி ஆற்றின் சாய நீர்கழிவு’ பிரச்சனையில் மாணவர்கள் தொடங்கி வைத்த மிதிவண்டி பிரச்சாரம் மக்களின் போராட்டமாக மாறி இறுதியில் பவானி ஆற்றில் சாயநீர்கழிவு கலந்த அந்த தொழிற்சாலையை மூடவைத்தனர். 

‘பவானி ஆற்றின் சாயநீர்கழிவு’ பிரச்சனையில் மாணாக்கர்களின் முன்னெடுப்பு பிரச்சாரம்!

‘பவானி ஆற்றின் சாயநீர்கழிவு’ பிரச்சனையில் மாணவர்களின் முன்னெடுப்பு பிரச்சாரம்!

இதில் சுவாரசியமான நிகழ்வு என்னவெனில், போராட்டத்தின் வெற்றியை குறித்து பாராட்டு விழாவில் பல பெரியவர்கள் பத்திரிகையாளர்கள் முன் பேசி கொண்டிருக்க, கூட்டத்தில் இருந்து ஒரு பாட்டியின் குரல் மட்டும் ஒலித்தது, சும்மா நிறுத்துங்கயா, “இன்னைக்கு நீ, நானு எல்லாம் பேச வந்துட்டிங்க… இந்த பிரச்சனய நம்ம கவனத்துக்கு கொண்டு வந்ததே இந்த பிஞ்சு குழந்தைங்க தான், இந்த போராட்டத்துக்கு இவ்ளோ உழச்சுருக்க, இவங்கள பத்தி பேசுங்கயா” என்று போராட்டத்தில் கலந்து கொண்ட‌ பாட்டியின் நெகிழ்வான பேச்சு அனைவரின் இதயத்திலும் இன்பமாய் தங்கியது என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஜெயபாரதி அம்மா. 

2. சிறப்பு குழந்தைகளும், மனிதமும்: 

இவரது பள்ளியில் பெரும்பாலும் முதல் தலைமுறை மற்றும் எளிய குடும்பத்து பிள்ளைகளை தான் சேக்குறாங்க… சிலம்பம், யோகா, நடனம், கராத்தே, ஆங்கில மொழி திறன் பயிற்சி என எல்லாம் இவங்க பாடத்தில் இருந்தாலும். இன்னொரு புதுமையான விசயம் என்னவெனில் ஆட்டிசம், பார்வை சவால் கொண்டவங்க, டவுன் சிண்ட்ரோம், போன்ற சிறப்பு தேவையுள்ள 40 குழந்தைங்க இப்பள்ளியில் சராசரி மாணாவர்களுடன் சேர்ந்து படிக்கிறார்கள் என்பது ஆச்சரியத்துடன் கூடிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. 

இதைப்பற்றி ஜெயபாரதி அவர்களிடம் கேட்டபோது,

“சிறப்பு குழந்தைகளுக்கு 8-ம் வகுப்பு படிக்கிற வயது இருந்தாலும் 2-ம் வகுப்பு படிக்கிற திறன் மட்டுமே இருக்கும். ஆனாலும் அவங்கள 8-ம் வகுப்புல உக்காரவச்சு சக பிள்ளையோட பழகவச்சு, அவங்களால புரிஞ்சுக்க முடிஞ்ச விசயத்த சொல்லிக் கொடுப்போம். ஒவ்வொரு வகுப்பிலும் 3 குழந்தைகளுக்கு ஒரு சிறப்பாசிரியர் இருக்காங்க,” என்றார்.
சிறப்பு குழந்தைகளின் திறன் மேம்பாடு

சிறப்பு குழந்தைகள்னா வன்முறையா இருப்பாங்கனு நினைக்கிறாங்க. இங்க மத்த குழந்தைங்க காட்டுற அன்பால அவங்க அவ்வளவு மகிழ்ச்சியா இருக்காங்க. இதுமாதிரிக் குழந்தைகள் பொதுவெளியில பழகவிடாததுதான் நாம செய்ற தப்பு. அது மட்டும் இல்லாம “சிறப்புக் குழந்தைகளோட பிரச்சினைகள மத்த குழந்தைகளும் பாத்து கத்துக்க இது ஒரு நல்ல வாய்ப்பா இருக்கு” என்று மன நிறைவுடன் விவரித்தார் ஜெயபாரதி அம்மா. 

3. பூரணம் கூட்டமைப்பு: 

சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் நிலை இன்னும் ரொம்பவே துயரமானது. மற்ற பெற்றோர்கள் கூட பழக அஞ்சுவாங்க, “மத்த புள்ளைகள போல நம்ம பிள்ள இல்லனு” கவலைல துவண்டு போவாங்க, இவங்களோட துயர் உணர்ந்து எதாவது செய்யணுங்கிற எண்ணத்துல தொடங்குனது தான் 'பூரணம்' என்னும் சிறப்பு கூட்டமைப்பு. 

 

இக்கூட்டமைப்பில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் அமர்ந்து தங்களுடைய அனுபவத்தையும் சிக்கல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதோடு சிறப்பு குழந்தைகள் பிரிவில் நீண்ட காலமாக செயல்புரியக்கூடிய வல்லுனர்களை வரவழைத்து அவர்களுடைய அனுபவத்தையும் பகிரும் தளமாக உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று ‘பூரணம்’ என்னும் சிறப்பு கூட்டமைப்பை நடத்தி வருகின்றனர். 

பூரணம் கூட்டமைப்பு

பூரணம் கூட்டமைப்பு

இதன் மூலம் பெற்றோர்கள் தனது சிறப்பு குழந்தைகளை எப்படி கையாள்வது, எப்படி நல்விதமாக ஆரோக்கியமாக வளர்ப்பது பற்றிய புரிதல் கிடைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. 

மேலும், இக்கூட்டமைப்பில் கிடைத்த உத்வேகமே, தற்போது சிறப்பு தேவையுள்ள 2 குழந்தைகள் 12-ம் வகுப்பையும், 3 குழந்தைகள் 10-ம் வகுப்பையும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

4. ஆளுமைகளை அறிமுகப்படுத்துதல்: 

“ஆயிரம் நல்மனிதர்களின் தொகுப்பே ஒரு ஆகச்சிறந்த மனிதன்” என்பதை கருத்தில் கொண்டு மாதம் மாதம் வெவ்வேறு துறைகளை சேர்ந்த ஆகச் சிறந்த ஆளுமைகளை சிறப்பு விருந்தினராக வரவழைத்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர். 

இதன்மூலம் அவர்கள் தன் வாழ்வுக்கான தனித்துவ பாதையையும், அதற்கான குருவையும் அடையாளம் காண்கின்றனர். மேலும் அவர்கள் விரும்பும் துறைகளில் திறனை மேம்படுத்த வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 

ஆளுமைகள் அறிமுகம்!

ஆளுமைகள் அறிமுகம்!

ஜெயபாரதி அம்மாவின் குடும்பமும், படிப்பும்:

‘இப்படியொரு பெற்றோரிடம் வளர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம்’ என்று தான் கூற வேண்டும். மேலும், நான் ஆற்றும் சமூகப் பணிகள் அனைத்தும் எனது குடும்பத்தாரிடம் இருந்து கற்றது தான், என்கிறார் ஜெயபாரதி அம்மா. 

தந்தை வெங்கடாசலம் சுதந்திரப் போராட்டத் தியாகி. இடதுசாரி இயக்கத்தில் தீவிர பிடிப்புள்ளவர். ஈரோடு நகராட்சியில் 6 முறை கவுன்சிலராக இருந்திருக்கிறார். தாய் லூர்துமேரி. அவரது வீடும் பெரியாரின் வீடும் அருகருகே…. பெரியாரின் தலைமையில் தான் தாய் - தந்தை இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. லூர்துமேரியின் அண்ணன் (மாமா) லூர்துசாமி பெரியாரின் பெருந்தொண்டர். அண்ணன்கள்- ஜீவாண்ணா, ரமணியண்ணா இருவரும் மருத்துவர்கள். 

டாக்டர் ஜீவானந்தம் எளிய மக்களுக்கான மருத்துவராகவும், நல்சூழலியலாளராகவும், இலக்கியவாதியாகவும் பன்முகத் தன்மையுடன் திகழ்ந்தவர். தரமான மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்கணுங்கிற எண்ணத்துல இவர் தொடங்கின கூட்டுறவு மருத்துவம் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதேபோல், குடிபோதையால் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு ஈரோட்டில் மது அடிமைகள் மீட்பு மையம் ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார். 

Dr Jeevanandam

Dr Jeevanandam

டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் மறைவுக்குப் பிறகு இன்றளவும் அவரது சமூக செயல்பாடுகளை அதே உயிர்ப்புடன் சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருப்பவர் ஜெயபாரதி அம்மா தான்.

எம். ஏ உளவியல் மற்றும் பொது நிர்வாகம் முடித்திருக்கும் ஜெயபாரதி அம்மா, சென்னை பல்கலைகழகத்தில் நூலகராக பணியாற்றி வந்த ஜெயவேல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் காலம் அவர்களின் உறவை பிரித்தது எனலாம், தனது உடல் நலக்குறைவால் 34 வயதிலேயே காலமாகிவிட்டார் ஜெயவேல். இரண்டு ஆண் குழந்தைகளுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது குழப்பத்தில் இருந்த தருணத்தில் இவரது குடும்பத்தினரே உறுதுணையாக இருந்தனர். பிறகு அண்ணன் ஜீவானந்தம் நடத்தி வந்த சித்தார்த்தா பள்ளியின் பொறுப்புகளில் தம்மை இணைத்து கொண்டார் ஜெயபாரதி அம்மா. 

ஜெயபாரதி அம்மாவின் வாழ்வியல்: 

உயர்ந்த உள்ளம் கொண்டோர், அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வர் என்பதற்குச் சான்றாய் திகழும் ஜெயபாரதி அம்மா-வைப் பற்றிக் சுருக்கமாகக் கூறினால்…


எளிமையே அழகு என்ற கொள்கையை சுமந்து திரிபவர்!


சாதிமல்லி வாங்கச் சென்றால், மல்லி மட்டும் போதும் என்பவர்! 


பெரியாரின் பகுத்தறிவையும், காந்தியத்துவத்தையும் அணிகலனாய் அணிந்தவர்!


பூக்கள் காணாத கூந்தல், புன்னகையே பூக்கள் என்பவர்! 

வலியதே வெல்லும் என்றால், வலிமை குன்றியவர்களை வலிமையாக்குவதே  எனதுப் பணி என்பவர்!

கல்வியாளர் ஜெயபாரதி அம்மா!

கல்வியாளர் ஜெயபாரதி அம்மா!

ஜெயபாரதி அம்மா மாணாக்கர்களிடம் உரையாடும் போது அடிக்கடி ஒரு கூற்றை குறிப்பிடுவார்..! 

உலகத்திற்கான ஓர் உன்னத ஒளி ஏன் உங்களிடமிருந்து புறப்படக்கூடாது..?!

குழந்தைகளே! நீங்கள் பள்ளிகளில் கல்வி கற்கிறீர்கள், அதாவது கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் மற்றும் பலவற்றைக் கற்கிறீர்கள். இவையெல்லாம் எதற்கு? நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இக்கல்வி பொருளீட்டுவதற்காக மட்டும்தானா? அதுதான் கல்வியின் நோக்கமா? கல்வி என்பது வெறும் தேர்வில் தேர்ச்சி பெற்று உங்கள் பெயருக்குப் பின்னால் சில எழுத்துக்களை வைப்பதா அல்லது முற்றிலும் வேறுபட்டதா?

நீங்கள் சுற்றிப் பார்த்தால், உலகம் எத்தகையதொரு மோசமான குழப்பத்தில் உள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஏழை, பணக்காரர், நோய்வாய்ப்பட்டவர்கள், ஆரோக்கியமானவர்கள் உள்ளனர். மேலும், உலகம் முழுவதும் போர்கள் உள்ளன, அங்கே துன்பங்கள் உள்ளன, எல்லா வகையான பிரச்சனைகளும் உள்ளன. இளமையாக இருக்கும்போதே நீங்கள் இவைகளைப் பற்றி யோசிக்கக் கூடாதா? என்பார். 

இவ்வாறு கல்வி குறித்தும், குழந்தைகள் குறித்தும், மனிதர்கள் குறித்தும், இயற்கை குறித்தும் இவர் பேசுகிற வார்த்தைகளில் அவ்வளவு அன்பு அக்கறை, தெளிவு இருக்கும். இவரது சமூகப்பணி மேன்மேலும் சிறக்க யுவர்ஸ்டோரியின் வாழ்த்துக்கள்!