Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சி.இ.ஓ டு முதன்மை விஞ்ஞானி - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் 30 ஆண்டுகால தொழில் பயணம்!

கிராமப்புற வேர்கள் மற்றும் எளிமையான வாழ்க்கை முறைக்காக அறியப்படும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகி, நிறுவன ஆய்வுப் பணிகள் மற்றும் தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முதன்மை விஞ்ஞானியாக செயல்பட இருக்கிறார்.

சி.இ.ஓ டு முதன்மை விஞ்ஞானி - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் 30 ஆண்டுகால தொழில் பயணம்!

Thursday January 30, 2025 , 5 min Read

தமிழ்நாட்டின் சிறிய நகரில் வேட்டி கட்டி அமர்ந்தபடி, சர்வதேச சாஸ் யூனிகார்ன் நிறுவனத்திற்கான இலட்சிய திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கும் கோடீஸ்வரரை காண்பது அரிது. கோட் சூட் அணிந்த தொழில்முனைவோர்கள் மத்தியில், தனது ஆடை அணியும் விதத்தினால் மட்டும் ஸ்ரீதர் வேம்பு தனித்து நிற்கவில்லை.

பெரும்பாலான தொழில்நுட்ப அதிபர்கள் போல, நகரங்களில் இருந்து வர்த்தகத்தை வளர்த்தெடுக்க நினைக்காமல், ஸ்ரீதர் வேம்பு சிறிய நகரங்களில் அலுவலகங்கள் அமைத்து, எளிய பின்னணியை கொண்டவர்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இதை எல்லாம், வெளி மூலதனம் இல்லாமலே செய்திருக்கிறார், என்பது தான் ஆச்சர்யம்.

zoho

சுய நிதியில் தொழில்முனைவு மேற்கொள்ளும் துணிச்சலான பாணிக்காக மற்றும் சமூக வளர்ச்சி மீதான ஈடுபாட்டிற்காக தொழில்நுட்ப உலகில் மிகவும் மதிக்கப்படும் ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தை இயக்கும் சக்தியாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நிறுவனங்களுக்கான மென்பொருளை மாற்றியமைத்து வருவதோடு, கிராமப்புற சமூகங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

நன்கறியப்பட்ட பெங்களூருவைவிட அதிக பரபரப்பில்லாத அருகாமை நகரான சென்னையை சாஸ் மையமாக உருவாக்கியதில் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் ஒரு குடியிருப்பில் இருந்து செயல்படத்துவங்கிய நிறுவனத்தில் இருந்து ஜோஹோவை தற்போதைய உயரத்திற்கு கொண்டு வந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப்பிறகு, தலைமை பதவியில் இருந்து விலகி, பின்னணியில் இருந்து செயல்பட தீர்மானித்திருக்கிறார்.

சி.இ.ஓ பதவியில் இருந்து விலகியவர், முதன்மை விஞ்ஞானி எனும் பொறுப்புடன், ஆய்வு மற்றும் வளர்ச்சி முயற்சிகளில் கவனம் செலுத்த இருக்கிறார். ஸ்ரீதர் வேம்புவின் தொழில்முறை பயணத்தை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கும், சமூக தாக்கம் ஏற்படுத்துவதில் அவருக்கு உள்ள ஈடுபாட்டையும் அறிந்தவர்களுக்கு இந்த முடிவு எந்த வியப்பையும் அளிக்காது.

உண்மையில் ஜோஹோவில் ஐந்தாண்டுகளுக்குப்பிறகே (அப்போது அட்வெண்ட்நெட்) அவர் சி.இ.ஓ பொறுப்பேற்க முன்வந்தார். அதுவரை விற்பனையை வழிநடத்திக்கொண்டிருந்தார்.

எளிய ஆரம்பம்

ஸ்ரீதர் வேம்பு, சென்னை புறநகரில் பத்தாவது வரை அரசுப் பள்ளியில் படித்தார். 1989ல் ஐஐடி மெட்ராசில் பட்டம் பெற்றவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் மேல் படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பெற்று, எம்.எஸ் மற்றும் பிஎச்டி பட்டம் பெற்றார். டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஆஸ்திரேலியா தேசிய பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்தார். எனினும், இரண்டு வாரங்களில் ராஜினாமா செய்துவிட்டார்.

பின்னர், அமெரிக்காவின் சாண்டியகோவில் குவால்கம் நிறுவனத்தில் பொறியாளராக சேர்ந்தார். இதனிடையே, 1996ல் அவரது சகோதரர் குமார் வேம்பு மற்றும் சேகர் வேம்பு ஐஐடி மெட்ராஸ் சகா டோனி தாமஸ் இணைந்து வலைப்பின்னல் கருவிகள் நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை அளிக்கும் அட்வெண்ட்நெட் நிறுவனம் துவக்கினர். இதுவே பின்னர் 'Zoho' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையில் வீட்டில் இருந்து சகோதரர்கள் பணியாற்றிய நிலையில், தாமஸ் அமெரிக்காவில் நிறுவன செயல்பாடுகளை கவனித்துக்கொண்டார். வேம்பு குவால்காம் நிறுவனத்தில் இருந்தார். 1997ல் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் தாமஸ், ஸ்ரீதர் வேம்புவிடம் விற்பனை பிரதிநிதி நியமத்தில் உதவி கோரினார். அவர் தானே விற்பனையை பார்த்துக்கொள்வதாக கூறி, மார்க்கெட்டிங் துறை துணைத்தலைவர் என விசிட்டிங் கார்டும் அச்சிட்டுக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அட்வெண்ட்நெட் பல ஒப்பந்தங்களை பெற்றது. அதன் பிறகு, ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் நிறுவன விற்பனை தலைவராக செயல்பட்டார். இந்திய கிளை ஆய்வு மற்றும் சேவை உருவாக்கத்தில் கவனம் செலுத்தியது. நிறுவனர்கள் பணத்தை நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்தனர். ஓராண்டுக்கு பிறகே அவர்கள் சிறிய சம்பளம் எடுத்துக்கொண்டனர்.

“விற்பனையில் $350K கடந்த பிறகு, அனைத்தையும் ஆய்வில் முதலீடு செய்து, எங்களுக்கு சம்பளம் எடுத்துக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் மற்றும் இந்தியாவில் செயல்பட்ட சுயேட்சை நிறுவனமாக இருந்தோம். இந்திய நிறுவனம் ஆய்விலும் அமெரிக்காவில் விற்பனையிலும், கவனம் செலுத்தியது,” என்று 2021ல் எழுதிய வலைப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் ஐடி தேவைகளை துணை நிறுவனம்  WebNMS  பார்த்துக்கொண்டது.

“1998ல், எங்கள் விற்பனை 1 மில்லியன் டாலரை கடந்தது. 1998 இடையில் தான் எங்களுக்கு கொஞ்சம் சம்பளம் எடுத்துக்கொண்டோம். 1999 ல்விற்பனை இருமடங்காக அதிகரித்தது. வெப் என்.எம்.எஸ் உதவிக்யது,” என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
Sridhar Vembu

அவர் தொடர்ந்து விற்பனை துணைத்தலைவராக செயல்பட்டு வந்தார். சி.இ.ஓ ஆக வேண்டும் எனும் தாமஸ் வலியுறுத்தலை ஏற்கவில்லை. அவர் தான் நிறுவனத்தின் ஒரே விற்பனை பிரதிநிதி என்பதே காரணம். 2001ல் நிறுவனம் விற்பனை பிரதிநிதியை நியமித்த பிறகே அவர் சி.இ.ஓ பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

“விற்பனை பிரதிநிதிகள் 2000ல் மூன்று மடங்கு விற்பனையை கொண்டு வந்து உண்மையான விற்பனையை எனக்கு கற்றுக்கொடுத்தனர். 10 மில்லியன் டாலர் வருவாயை நோக்கி முன்னேறினோம். அப்போது தான் தாமஸ், சி.இ.ஓ ஆக பொறுப்பேற்க சரியான நேரம் என்றார்,” என்றும் வேம்பு தெரிவித்துள்ளார்.

2001 டாட்காம் குமிழுக்கு பின், சாஸ் (SaaS) சேவை நிறுவனமாக பாதை மாறி அட்வெண்ட்நெட் புதிய சேவைகளை அறிமுகம் செய்தது. ஐடி நிர்வாக சேவை மேனேஜ் இஞ்சின் மற்றும் கிளவுட் பிரிவாக ஜோஹோ உருவானது. 2009ல் நிறுவனம் ஜோஹோ என பெயர் மாற்றம் செய்து கொண்டது.  

ஸ்ரீதர் வேம்பு, முதலீட்டாளர்கள் இல்லாமலே மிகப்பெரிய சாஸ் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அதோடு, மேலும் பல தொழில்நுட்ப ஆர்வலர்களை தங்கள் கனவுகளை பின்பற்ற வைத்து சென்னையை சாஸ் மையமாக உருவாக வழி செய்துள்ளார். ஜோஹோ தற்போது, 15,000 ஊழியர்களுக்கு மேல் கொண்டுள்ளது. 55க்கும் மேற்பட்ட சேவைகளுடன், 100 மில்லியனுக்கு மேல் பயனாளிகளை பெற்றுள்ளது.

சீனா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 150 நாடுகளில் வாடிக்கையாளர்களக்கு சேவை அளிக்கிறது. 2023ல் நிறுவனம் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது. விற்பனையில் 1 பில்லியன் டாலரை கடந்து, ரூ.8,703 கோடி வருவாய் ஈட்டியது. அதற்கு முந்தைய ஆண்டு இது ரூ.6,710 கோடியாக இருந்தது.

சிறிய நகரங்களில் கவனம்

இப்போது ஜோஹோ ஆய்வில் கவனம் செலுத்துவது எனும் மற்றொரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த வேம்பு, ஆய்வு பணிகளில் முழு கவனம் செலுத்த இருப்பதாகவும், தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி நோக்கத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆய்வு என்பது அவருக்கு புதிதல்ல. எப்போதுமே அவர் தொடர்புடைய துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவக்குவதில் ஈடுபாடு கொண்டுள்ளார். 2023ல் யுவர்ஸ்டோரிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ஜோஹோவின் ஆய்வுக்குழு பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக கூறினார். தெரியாத பகுதியில் பாதை அமைப்பது போன்றது என்றும் கூறியிருந்தார்.

“இதற்கென சூத்திரமோ, குறிப்புகளோ இல்லை. எந்த ஆய்வு திட்டத்திலும், பொருள் நிர்வாகத்தில் பலரும், ரயில் சரியான நேரத்திற்கு வரும் உதாரணத்தை கூறுவர். ஆனால் இது சரியல்ல. தெரியாத காட்டிற்குள் பாதை அமைத்துச்செல்லும் உதாரணம் தான் சரியானது,” என்றும் அவர் கூறியிருந்தார்.
zoho

முதலீடுகள், கூட்டு முயற்சி, சொந்த திட்டங்கள் என ஜோஹோ பலவற்றில் ஈடுபட்டிருப்பதாகவும் இவை ஆரம்ப நிலையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேம்பட்ட வேளாண் உத்திகள் (தானியங்கி பாசனம், டிரோன் கண்காணிப்பு), தொலைமருத்துவம், கம்ப்யூட்டர் வடிவமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

ஆழ்நுட்ப உற்பத்தி ஆற்றலை மேம்படுத்த நிறுவனம் அண்மையில் மெகட்ரானிக்ஸ் நிறுவனம் கருவி மற்றும் யாளி ஏரோஸ்பேஸ் அகிய ஸ்டார்ட் அப்களை வாங்கியது. சிறிய நகரங்களில் வாய்ப்புகளை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர் இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கும், என்கிறார்.

“தமிழ்நாட்டில் சென்னையை விட கோவை வேகமாக வளர்ந்துள்ளது. திருச்சி மற்றும் தென்காசி நகரங்கள் வேகமாக வளரும். புவி சார்ந்த வளர்ச்சி விரிவாகிறது,” என்றும் அவர் கூறியிருந்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன், ஸ்ரீதர் வேம்பு தென்காசிக்கு குடிபெயர்ந்து, அங்கிருந்து ஜோஹோவை வழிநடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஜோஹோ தீவிரமாக விரிவாக்கம் செய்துள்ளது. 2023ல் நிறுவனம் ஐந்து மைய அலுவலகங்கள் மற்றும் 30 விளிம்பு அலுவலகங்கள் கொண்டிருந்தது. இந்த இடங்களில் 2000 பேர் பணியாற்றுகின்றனர். 50 சதவீதம் உள்ளூர் பணியாள்ர்கள்.

சமூகப் பணி

ஸ்ரீதர் வேம்பு வெற்றிகரமான தொழில்முனைவோராக மட்டும் அறியப்படவில்லை, உள்ளூர் ஊழியர்களை ஊக்குவித்து துடிப்பான தொழில்நுட்பச் சூழலை உருவாக்கும் ஈடுபாட்டிற்காகவும் அறியப்படுகிறார்.

2021ல் அவருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருது பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு, 5.85 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், 39வது பணக்கார இந்தியராக ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றார்.

அண்மையில் அவர், சுகாதார நலன், விவசாயம், நீடித்த நகரங்கள் உள்ளிட்டவற்றில் ஏஐ சிறப்பு மையங்களை அமைப்பது தொடர்பான உயர்மட்டக்குழுவில் இணை தலைவராக நியமிக்கப்பட்டார். சாஸ் நிறுவன அனுபவசாலி என்ற முறையில் அவர் தொழில்துறை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan