3D அச்சில் கட்டப்பட்ட 'இந்தியாவின் முதல் வில்லா' - சென்னை ஸ்டார்ட்அப் த்வஸ்தா மீண்டும் சாதனை!
இந்தியாவிலேயே முதல்முறையாக முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம் மூலம் தனி வில்ல கட்டி கட்டுமானத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஸ்டார்ட் அப் த்வஸ்தா.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் இணைந்து தொடங்கிய ஸ்டார்ட் அப் த்வஸ்தா (Tvasta). தொழில்நுட்பத்தின் ஆழத்தை அறிந்து கட்டுமானத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் த்வஸ்தா தொடங்கப்பட்டது. ரோபோடிக்ஸ், மென்பொருள் என அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டுமானத் துறையை இயந்திரமயமாக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது இந்நிறுவனம்.
கல், மண், சிமெண்ட் என பழைய முறையில் கட்டிடங்களை கட்டாமல், இத்துறையில் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உறுதியான கட்டிடத்தை உருவாக்குவதே இவர்களின் நோக்கம்.
பேப்பரில் அச்சடிப்பதை கேள்விபட்டிருப்போம் இவர்களின் புதிய தொழில்நுட்பம் வீட்டை பிரிண்டிங் முறையில் கட்டுவதாகும். சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் கலவை தயாரிக்கப்பட்டு கட்டிடத்தை வடிவமைத்து அவற்றை பிளாக்குகள் போல தனித்தனியாக மெஷின்களின் உதவியுடன் 3டி பிரிண்ட் செய்து அவை பின்னர் சுவர்கள் எழுப்பி கட்டிடமாக கட்டப்படுகின்றன.

Tvasta கட்டிய 3டி வீடு
பல ஆண்டுகளாக இந்தத் துறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் த்வஸ்தா, முப்பரிமாண முறையில் பல்வேறு கட்டிடங்களை கட்டியுள்ளது. குறிப்பாக 2021ல் 'இந்தியாவின் முதல் முப்பரிமான வீட்டை' கட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ‘தன்னம்பிக்கை’ என்கிற கொள்கைகளின் அடிப்படையில் த்வஸ்தா கட்டுமானத் துறைக்கான பிரிண்டர்களை உருவாக்கியது. அச்சடிக்கும் இயந்திரம், மென்பொருள், அச்சடிக்கும் முறை என அனைத்தையும் வடிவமைத்து முழுக்க முழுக்க தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் கட்டிடங்களை உருவாக்கித் தரும் இந்தியாவின் முதல் நிறுவனம் 'த்வஸ்தா2' என்கிற பெருமையைக் கொண்டது.
த்வஸ்தா வீடுகளின் சிறப்பு என்ன?
வீடு கட்ட மாதக்கணக்கில் நாட்கள் தேவை, அதற்குள் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் திட்டமிட்ட பட்ஜெட்டுக்கு அதிகமாகவே கட்டுமான செலவு என்கிற பிரச்னைகளுக்கெல்லாம் வேலையே இல்லாமல் குறைவான நாட்களிலேயே முப்பரிமாண முறையில் வீடுகளை த்வஸ்தா கட்டித் தருகிறது. கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து உயர் தொழில்நுட்பத்துடன் வீடுகளை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ள த்வஸ்தா தொடர் வளர்ச்சியை கண்டு வருகிறது.
குறைவான கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் கட்டப்பட்ட கட்டிடத்தின் ஆயுள்கால நிலைத்தன்மையில் குறைவிருக்காது என்று அறிவியல் ரீதியான ஆதாரத்தை தருகிறது இந்நிறுவனம். முப்பரிமாண சுவர்கள் மின்கசிவு போன்றவற்றில் இருந்து சிறந்த பாதுகாப்பு தரும் என்றும் உத்திரவாதம் தருகிறது.
பல ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் அனுபவம் பெற்ற த்வஸ்தா, கோத்ரேஜ் (Godrej properties limited) நிறுவனத்திற்காக இந்தியாவிலேயே முதல்முறையாக முப்பரிமாண வில்லாவை கட்டியுள்ளது. இந்த திட்டத்தின் தனித்துவம் பற்றி கூறிய த்வஷ்தாவின் (Tvasta Manufacturing Solutions) இணை நிறுவனர் பரிவர்தன் ரெட்டி,
“முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் கட்டிடங்கள் கட்டப்படுவது கட்டுமானத் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது. கடினமான கட்டுமான வடிவங்கள், விதவிதமான சுவர்கள் என புதுமைகளை புதுத்தி த்வஸ்தா பண்டைய கட்டுமான வடிவமைப்பிற்கு என வகுக்கப்பட்டு இருந்த எல்லைகளை உடைத்து வெற்றி கண்டிருக்கிறது,” என்று தெரிவித்தார்.
கட்டுமானத் துறையில் இயந்திரமயத்தை புகுத்தி வரும் த்வஸ்தா, மேம்பட்ட தொழில்நுட்பத்தை புகுத்தி அதன் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளது. கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து அதிக கட்டிடங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
“இந்தியாவிலேயே முதல் முறையாக முப்பரிமாண அச்சு முறையில் வில்லா கட்டுவது த்வஸ்தாவால் சாத்தியப்படும் என்று நம்பி எங்களுடன் இணைந்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்திற்கு நன்றி,” என்றும் அவர் கூறியுள்ளார்.
முப்பரிமாண முறையில் கட்டப்பட்டுள்ள தனிவீடு
ரியல் எஸ்டேட் துறையில் Godrej Properties Limited தொலைநோக்கு திட்டத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கட்டுமானத்துறையில் நிலைத்தன்மையுடன் கூடிய புதுமைகளை புகுத்த வேண்டும் என்கிற அவர்களின் இலக்கில், முப்பரிமாண அச்சு முறையில் கட்டிடங்களை உருவாக்குவது கலையையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் செயல் என்று கருதுகின்றனர்.
த்வஸ்தாவுடன் இணைந்து செயல்படுவது கட்டிடங்கள் பற்றிய மக்களின் புரிதலுக்கு ஒரு மாற்று சிந்தனையை உருவாக்கும் என்றும் கோத்ரேஜ் நம்புவதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளிலும் த்வஸ்தா தன்னுடைய சந்தையை விரிவாக்கம் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முப்பரிமான கட்டுமானத்தை இந்நிறுவனம் செய்து தந்துள்ளது. வடக்கு கலிபோரினியாவில் உள்ள TNT Development நிறுவன ஊழியர்களுக்கான வீடுகள் முதல் வெர்ஜினியா டெக்கில் சாத்திய விலை வீடுகள் உள்ளிட்டவற்றை செய்து தந்துள்ளன. வீடுகள், வில்லாக்கள் தவிர த்வஸ்தா நகராட்சிகளுக்கு பேருந்து நிழற்குடை, சேப்பாக்கம் மற்றும் கடல்சார் நிறுவனங்களுக்கு தடுப்பு வேலிகள் அமைத்துத் தருதல் போன்றவற்றையும் செய்து தந்துள்ளன.
கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து சிறந்த செயல்பாட்டுக்கான பாராட்டு சான்றிதழை த்வஸ்தா பெற்றுள்ளது. கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை கையாளும் நிறுவனங்களுக்கு இந்த அங்கீகாரம் கட்டாயம் தேவை. பாராட்டு சான்றிதழை பெற்றுள்ள த்வஸ்தா இந்தியா முழுவதும் முப்பரிமாண அச்சு முறையில் வில்லாக்களை கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
முப்பரிமாண முறையில் கட்டும் கட்டித்தின் சிறப்புகள்...
பழைய கட்டுமான முறையில் வில்லாக்களை வடிவமைக்கும் போது அதிக செலவு ஏற்படுகிறது. மாறாக சாய்வு சுவர்கள், patterned மேற்பரப்பு போன்றவை வடிவமைப்பில் புதுமையையும் கடினமான கட்டுமான அமைப்புகளை எந்த கூடுதல் செலவும் இல்லாமல் 3டி முறையில் எளிதில் வடிவமைத்து தர முடிகிறது.
வீடு கட்டுவதற்கான எதிர்கால வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பதை இந்த வில்லா எடுத்துரைக்கும். அதே போல வீட்டு உரிமையாளர் எதிர்பார்க்கும் கட்டிடத்தின் உறுதித் தன்மை, மற்ற வசதிகள் போன்றவற்றிற்கும் குறைவிருக்காது.
கட்டுமானத் துறையில் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் வேறு என்ன மாற்றத்தை கொண்டு வரலாம் என்று த்வஸ்தா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து செயல்படும் த்வஸ்தா, கட்டுமானத்துறையில் முன்னணி நிறுவனமாகும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்கள், வில்லாக்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர விருந்தினர் தங்குமிடங்களை த்வஸ்தா இதுவரை கட்டுமானம் செய்துள்ளது.

3டி வில்லா
முப்பரிமாண அச்சில் கட்டப்படும் வீடுகளில் உள்ள நன்மைகள்:
தனித்துவமான வடிவங்கள்: வீடு வாங்குபவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப வீட்டை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது : த்வஸ்தா 3டி வீடுகள் தண்ணீர் மற்றும் கட்டுமான மூலப்பொருட்கள் செலவை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது.
தலைமுறை கடந்து நிற்கும் : முப்பரிமாண அச்சு முறையில் அமைக்கப்படும் கான்கிரீட் தலைமுறைகள் கடந்து உறுதியாக இருக்கும்.

5 நாட்களில் வீடு கட்டலாம்: நாட்டின் முதல் '3டி வீடு' உருவாக்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ்!