மதுரை தம்பதியின் ‘மஞ்சப்பை’ முயற்சி - ரூ.3 கோடி டர்ன் ஓவர் வளர்ச்சிக் கதை!
கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு, சுற்றுச்சூழலை மட்டுமே கருத்தில் கொண்டு துணிப்பை தயாரிப்பை ஆரம்பித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணனும், அவரது மனைவி கௌரியும். 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட The Yellow bag நிறுவனம் தற்போது ஆண்டிற்கு ரூ. 3 கோடி டர்ன் ஓவர் செய்து வருகிறது.
நெகிழிப் பைகள் எனப்படும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு முன்பைவிட தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது என்றே கூறலாம். சுற்றுப்புறச் சூழலுக்கு மட்டுமல்ல. மனிதன் உட்பட மற்ற உயிரினங்களுக்கும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகம்.
அதனால்தான், பிளாஸ்டிக் பைகளை ஒழித்து, நமது பாரம்பரிய முறைப்படி மீண்டும் துணிப்பைகளைப் பயன்படுத்த அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களோடு சில சமூகநலன் சார்ந்த தொழில்முனைவோர்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கிருஷ்ணன்.
மதுரையை அடுத்த மதிச்சியம் கிராமத்தில், தனது மனைவி கௌரியுடன் இணைந்து, ’தி யெல்லோ பேக்’ (
) என்ற துணிப்பை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர்.
இப்போது ’மஞ்சப்பை’ என்ற பெயரில் அரசு துணிப்பைகளை மக்கள் பயன்படுத்த, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக கடந்த 2014ம் ஆண்டே தனது ’தி யெல்லோ பேக்’ நிறுவனத்தை துவக்கி விட்டார்கள் கிருஷ்ணனும், அவரது மனைவி கௌரியும்.
‘மஞ்சப்பை’ தொடங்கியது எப்படி?
“எங்கள் இருவரது குடும்பத்திலுமே முதன்முறையாக நல்ல வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதித்தவர்கள் நாங்கள் தான். நன்றாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, புதிதாக தொழில் தொடங்கப் போகிறோம் என்பதே எங்கள் குடும்பத்தினருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
”அதிலும், லாப நோக்கில்லாமல் சமூக நலன் சார்ந்த தொழில் முயற்சி என்பது ரொம்பவே அவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. இதை மிகப்பெரிய சவாலாகத்தான் அவர்களைப் போலவே நாங்கள் உணர்ந்தோம். எங்களை அவர்களிடம் நிரூபிக்க இரண்டு, மூன்று வருடங்கள் ஆனது,” என தனது ஆரம்பக்கால தொழில் முயற்சியை நினைவு கூர்கிறார் கிருஷ்ணன்.
’தி யெல்லோ பேக்’ நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன் கிருஷ்ணனும், கௌரியும், கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் சேர்ந்து மாதாமாதம் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெற்று வந்துள்ளனர்.
ஆனால், கை நிறைய சம்பளம் வாங்கிய போதும், தங்களின் தேவை என்ன என்பதில் இருவரும் தெளிவாக இருந்துள்ளனர். வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என நினைக்காமல், எவ்வளவு வருமானம் வந்தாலும், அதற்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்ற தெளிவான புரிதல் அவர்களிடம் இருந்துள்ளது.
எனவே, என்ன வேலை பார்த்தாலும், அதில் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என அவர்கள் நம்பினர். அதனால்தான், கார்ப்பரேட் வாழ்க்கையை விட்டு, புதிதாக தொழில் தொடங்கிய போது, அவர்கள் அதிகம் வருமானத்தை நினைத்து சிரமப்படவில்லை.

“கார்ப்பரேட் வேலையை விட நினைத்த போதும் சரி, இப்போதும் சரி, அதனை திரும்ப பரிசீலிக்கலாமா என நானும், கௌரியும் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஏனென்றால் ஆடம்பர வாழ்க்கை இல்லாமல், எளிமையாக வாழ்வது என்பதில் இருவரும் தெளிவாக இருந்தோம். எனவே, எந்தத் தொழிலும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு வருமானம் கிடைத்தால் போதும் என நினைத்தோம்.”
ஆரம்பத்தில் இதை ஒரு தொழிலாகத் தொடங்க வேண்டும் என நினைக்கவில்லை. இருவருக்குமே இயற்கை மீது ஆர்வம் அதிகம். எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தோம்.
அப்போதெல்லாம், வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாக மட்டுமே துணிப்பைகள் தயாரிப்பு இருந்தது. அதை நாங்கள் மாற்ற நினைத்தோம். அப்படி நினைத்ததன் பலனாக உருவானதுதான் ’தி யெல்லோ பேக்’, என்கிறார் கிருஷ்ணன்.
The Yellow Bag என்னென்ன தயாரிக்கிறது?
இவர்களது நிறுவனம் காட்டன் துணி பைகள் மற்றும் பேக்கிங் பைகளை தயாரிக்கிறது. இந்தப் பைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி, பையின் அளவு, அச்சுகள் போன்றவை வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்படுகிறது.
2014ல் முழுநேரமாக துணிப்பை தயாரிப்பதில் இறங்குவது என முடிவு செய்ததும், சுற்றுச்சூழலை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பெண்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் களமாகவும் எங்கள் நிறுவனம் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
அதன்படி, மதுரை மதிச்சியத்தில் இயங்கி வரும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் எல்லோருமே, இதுவரை சம்பாதித்தே பார்த்திராத பெண்கள். நடந்து வரும் தூரத்தில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். அதோடு, வருடம் முழுவதும் வருமானம் ஈட்டும்படியாகவும் அவர்களுக்கு பணி தந்து கொண்டிருக்கிறோம்.
முன்பைவிட இப்போது துணிப்பைகளுக்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. புதுமையாக, நல்ல விசயங்களை செய்ய நினைக்கும் நிறுவனங்கள் முன்னெடுப்பாக துணிப்பைகள் உள்ளன. இப்போது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல தரமான துணிப்பையைத் தர விரும்புகிறார்கள், என்கிறார் கிருஷ்ணன்.
ஆரம்பத்தில் துணிப்பை தைப்பதற்கு அனுபவமிக்க தையல்காரர்கள் கிடைக்காததால், இவர்களே பயிற்சியும் கொடுத்து, பின் வேலையும் கொடுத்துள்ளனர். அப்போதிலிருந்து இப்போது வரை, பெண்களுக்கு தையல் பயிற்சி அளிப்பதையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
தற்போது இவர்களிடம் சுமார் 40 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதுவரை பயிற்சி முகாம்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்துள்ளனர்.

மஞ்சப்பை தொழிலை தாண்டி விழிப்புணர்வு முயற்சிகள், பயிற்சிகள்
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பிளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழல் சந்திக்கும் பிரச்சனைகளை விவரிக்கும் ’நெகிழிபூதம்’ என்கிற சிறிய புத்தகத்தை எழுதியுள்ளனர். இதேபோல், 2016ம் ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் நகர்ப்புற துணி பைகள் தையல் குழுக்களை அமைத்து, அதன்மூலம் பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு துணி பையில் அச்சிடும் பணியை வழங்கி வருகின்றனர். அதோடு, மனநலம் குன்றிய பெண்களுக்கும் துணி பைகள் தைக்க பயிற்சியளித்துள்ளனர்.
இதுதவிர, அப்பகுதியில் உள்ள வளர்பருவத்தினருக்கென தனியாக 40 வார பயிற்சி ஒன்றையும் தன் நண்பர்கள் குழுவோடு இணைந்து செய்து வருகிறார் கிருஷ்ணன். அதில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கென வாரத்தில் ஒருநாள் வகுப்பு நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே நேரில் சென்று இந்த வகுப்புகளை அவர்கள் எடுக்கின்றனர்.

“பெரும்பாலும் 8ம் வகுப்புக்குப் பின்னரே பல மாணவ, மாணவியர் போதைப் பழக்கம் உள்ளிட்ட பல தீயப்பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். எனவே, அந்த வயதில்தான் சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இங்குள்ள பல மாணவர்கள், இந்தக் கிராமத்தையே தாண்டாதவர்கள். எனவே, அவர்களுக்கு மற்றவர்களோடு பழகுவதற்கான பயிற்சிகளையும் நாங்கள் தருகிறோம்,” என்கிறார் கிருஷ்ணன்.
கொரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பு வரை ஆண்டிற்கு ஒரு கோடி டர்ன் ஓவர் செய்து வந்துள்ளது ’தி யெல்லோ பேக்’ நிறுவனம். கொரோனா தொற்று காலத்தில் இது அரை கோடியாக குறைந்துள்ளது. தற்போது மீண்டும் இயல்புநிலை திரும்பி வரும் சூழலில், இந்தாண்டு ரூ.3 கோடி வரை டர்ன் ஓவர் இருக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் கிருஷ்ணன்.
“இது எங்கள் தனிப்பட்ட வளர்ச்சியல்ல... சுற்றுச்சூழல் சார்ந்த தொழில்முனைவராக எங்கள் குழுவின் ஒட்டுமொத்த வளர்ச்சியாகவே இதைப் பார்க்கிறோம்,” என தங்களது வெற்றியையும் சமூகத்தோடு பகிர்ந்து கொள்கிறார் கிருஷ்ணன்.

‘முர்மு’ பழங்குடிகளுக்கு உதவும் ஜோடி: தரமான தேன் விற்பனையில் மாதம் ரூ.5 லட்சம் டர்ன்ஓவர்!