பிளாஸ்டிக் இல்லா வீட்டு உபயோகப் பொருட்கள் - ரூ.100 கோடி வருவாய் இலக்கில் The Honest Home Co!
2019ல் நிறுவப்பட்ட தில்லியைச் சேர்ந்த `தி ஹானஸ்ட் ஹோம்டெக் கம்பெனி` மறுசுழற்சி கொண்ட, சுற்றுச்சூழல் நட்பான வீட்டு உபயோகப் பொருட்கள் மூலம் பிளாஸ்டிக் இல்லா வீடுகள் அமைக்க உதவுகிறது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நுகர்வோர் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கும் காலத்தில், நீடித்த வளர்ச்சி தன்மை கொண்ட பொருட்களுக்கான தேவை பெரிதும் உணரப்படுகிறது. சுற்றுச்சூழல் நட்பான தீர்வுகள் நம் புவியை காப்பதற்கான தேவையான நடவடிக்கையாக அமைகிறது.
இந்த தேவை, ஆயுர்வேத விற்பனை நிறுவனம் கபிவாவில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, மயங்க் பிரதாப் சிசோடியாவுக்கு தெளிவாக தெரிந்தது.
கபிவாவில் (Kapiva) நிறுவனத்தின் ஆப்லைன் வர்த்தகத்தை 17 நகரங்களில் வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார்.
“இந்த பொருட்கள் எல்லாம் இயற்கையானது எனில் பிளாஸ்டிக் பாட்டில் ஏன் பயன்படுத்துப்படுகிறது,” எனும் கேள்வியை அவர் அடிக்கடி எதிர்கொண்டார்.
"கபிவாவில் இருந்தபோது, இயற்கை பொருட்களின் பலன் மற்றும் சுற்றுச்சூழல் நட்பான செயல்முறைக்கு நுகர்வோர் ஆதரவை உணர்ந்தேன். செயல்திறன் வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புமிக்க பொருட்களை உருவாக்க வேண்டும் எனும் நம்பிக்கையை இது வலுவாக்கியது,” என சிசோடியா யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.
வர்த்தக உலகில் பத்தாண்டுகள் பணியாற்றிய பிறகு, அவர் நீடித்த வளர்ச்சி கொண்ட பொருட்கள் மீது கவனம் செலுத்துவதற்காக 2019ல் 'தி ஹானஸ்ட் ஹோம் கம்பெனி' (The Honest Home Company) நிறுவனத்தை துவக்கினார். தில்லியைச் சேர்ந்த இந்நிறுவனம் தினசரி தேவைகளுக்கான சுற்றுச்சூழல் நட்பான பொருட்களை அளித்து நீடித்த வளர்ச்சிக்கு உதவுகிறது.
“எந்த தீங்கான கழிவுகளும் மிச்சமில்லாத வகையில் இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட உயிரி மற்றும் தாவிரம் சார்ந்த மறுசுழற்சி தன்மை கொண்ட பொருட்களையே பயன்படுத்துகிறோம். ஒரு சில பொருட்கள் மறுசுழற்சி அட்டையால் பேக் செய்யப்பட்டிருப்பதால் பயன்பாட்டிற்கு பின் எளிதான மறுசுழற்சி செய்யலாம்,” என்கிறார் சிசோடியா.
சந்தை விரிவாக்கம்
ஹானஸ்ட் ஹோம் கம்பெனி 37 சுற்றுச்சூழல் நட்பான வீட்டு உபயோகப் பொருட்களை பிளாஸ்டிக் இல்லாத பேக்கிங்கில் அளிக்கிறது. சமையலறை சுத்திகரிப்பு சாதனங்கள், உணவு கவர்கள், தனிநபர் சுகாதார சாதனங்கள் ஆகியவை இதில் அடங்கும். ரூ.99 முதல் ரூ.400 வரையான விலையில் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. தில்லி என்சிஆர் பகுதியில் 400 கடைகளுடன் துவங்கிய நிறுவனம் ஆறு மாதங்களில் 1100 கடைகளாக விரிவாக்கம் செய்துள்ளது.
“ரீடைல் கூட்டு மற்றும் விநியோகச் சங்கிலியை கொண்டு எங்கள் இருப்பை விரிவாக்கினோம். இதன் மூலம் வேகமாக சந்தையில் நுழைந்து எங்கள் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடிந்தது,” என்று சிசோடியா கூறுகிறார்.
தில்லி, டேராடூன், மொகாலி உள்ளிட்ட நகரங்களில் 3500 கடைகள் உள்ளிட்ட 5400 கடைகளோடு வட இந்தியாவில் இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு வருகிறது.
குவிக் காமர்ஸ் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் வாயிலாக மாதந்தோறும் 2 லட்சம் இல்லங்களுக்கு சேவை அளிக்கிறது. ஆப்லைன் கடைகள் 30 சதவீத விற்பனை அளிக்கின்றன. 70 சதவீத விற்பனை, இண்ஸ்டாமார்ட், ஜெப்டோ, பிளின்கிட், பிக்பாஸ்கெட் உள்ளிட்ட ஆன்லைன் சேன்ல்கள் வாயிலாக வருகிறது.
பிராண்ட் விழிப்புணர்வை அதிகமாக்க விளம்பர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு, புதிய கடைகள் திறப்புடன் சமூக ஊடகம் மற்றும் உள்ளூர் ஊடகத்தில் விளம்பரம் செய்யப்படுகின்றது, என்கிறார்.
மாத அடிப்படையில் தொடர்ந்து வாங்குவது 44 சதவீதமாக உள்ளது. 2023 நிதியாண்டில் ரூ.14 கோடி வருவாய் கிடைத்த நிலையில், 2025 நிதியாண்டில் ரூ.100 கோடி இலக்கு கொண்டுள்ளது.
“இந்த இலக்கை அடைய ஏற்கனவே உள்ள பிரிவுகளில் பொருட்களை விரிவாக்கி, நுகர்வோர் தேவைக்கு ஏற்ப புதிய பொருட்களையும் அறிமுகம் செய்ய உள்ளோம். ஏற்கனவே முக்கிய மேடைகளில் இருந்தாலும், குவிக் காமர்ஸ் மேடைகளின் இருப்பை விரிவாக்க உள்ளோம்,” என்கிறார்.
மேலும், இரண்டு பெரிய நகரங்களில் கடைகளை துவக்கி ஆப்லைன் சேனலை வலுவாக்க இருக்கிறோம், என்றும் சொல்கிறார்.
நீடித்த தொழில்நுட்பம்
நிறுவனம் சப்ளை செயின் நிர்வாகத்தில் ஐஓடி சாதனங்களை பயன்படுத்துவது, இருப்பு, மூலப்பொருட்கள் கண்காணிப்பில் உதவி, லாஜிஸ்டிக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், உற்பத்தி, இருப்பு ஆகிய நிலைகளில் இந்த சாதனங்கள் சுற்றுச்சூழல் நிலையையும் கண்காணித்து பொருட்களின் தரத்தை உறுதி செய்கின்றன.
“இயந்திரங்களை மேம்படுத்துவது, உற்பத்தி விரிவாக்கம், மூலப்பொருட்கள் பரவலாக்கம், தானியங்கி முறைகள், ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் சப்ளை செயின் சீராக்கத்தை உறுதி செய்ய ஐஓடி சாதன வசதி கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவற்றை உற்பத்தி திறன் மேம்பாட்டிற்காக மேற்கொண்டுள்ளோம்,” என்கிறார் சிசோடியா.
நிறுவனம் தனது சுற்றுச்சூழல் தாக்கத்தை மேலும் குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் குறைப்பை கண்காணித்து, நீடித்த தன்மை அறிக்கையை தயார் செய்கிறது. சோனிபட்டில் உள்ள உற்பத்தி ஆலை, தினமும் 10,000 பொருட்கள் திறன் கொண்டது, ரூ.5 கோடி மதிப்பு பொருட்களை உற்பத்தி செய்கிறது.
“பொருட்களின் தரம் மற்றும் நீடித்த தன்மையை தக்க வைக்கும் அதே நேரத்தில் செலவை குறைக்க, சமநிலையான அணுகுமுறை தேவை. சப்ளையர்கள் உறவு, செயல்திறன் மிக்க கொள்முதல், செலவை குறைக்க மொத்த கொள்முதல் ஆகியவை மூலம் சப்ளை செயினை சீராக்குவது இதில் அடங்கும்,” என்று விளக்கம் தருகிறார் சிசோடியா.
போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, நிறுவன பொருட்கள் நுகர்வோருக்கு செலவு குறைந்தவை என நிறுவனம் தெரிவிக்கிறது. உதாரணமாக, தரை சுத்திகரிப்பு திரவம் லிட்டர் ரூ.150 எனில் நிறுவன தயாரிப்பு ரூ.80 ஆக இருக்கிறது.
பொருளின் தன்மை மாறாமல் சுற்றுச்சூழல் நட்பான பேக்கேஜை கடைப்பிடிப்பது சவாலானது என்கிறார்.
"பொருட்களின் தன்மையை பாதுகாப்பதோடு, வழக்கமான பேக்காகவும், சுற்றுச்சூழல் நட்பான தன்மை கொண்டதாகவும் இருப்பது கடினம்," என்கிறார்.
கிராண்ட்வியூ ரிசர்ச் அறிக்கை படி, பசுமை பேக்கிங் ஆண்டு அடிப்படையில் 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டு 749 பில்லியன் டாலரில் இருந்து 2027ல் 1.12 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
"செலவு குறைந்த தன்மையோடு நீடித்த தன்மையை சமநிலை செய்வது கடினமானது. செலவுகளை அதிகரிக்காமல் சுற்றுச்சூழல் நட்பான பேகேஜிங்கை நாட விரும்பினோம். நீடித்த தன்மை ஆர்வமும், திறனும் உள்ள அணியை உருவாக்குவதும் கடினமாக இருந்தது," என்கிறார்.
சப்ளையர்களுடன் சரியான கூட்டு ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் நிறுவனம் இந்த சவால்களை சமாளிக்கிறது.
எதிர்கால திட்டம்
2023ல் 13.98 பில்லியன் டாலராக இருக்கும் இந்திய சுற்றுச்சூழல் நட்பான வீட்டு உபயோக பொருட்கள் சந்தை 2029 வாக்கில் 33.01 சதவீத ஆண்டு வளர்ச்சியை காணும் என டிக்சி ரிசர்ச் தெரிவிக்கிறது.
`தி ஹானஸ்ட் ஹோம் கம்பெனி` அண்மையில், தனது வளர்ச்சி திட்டங்களுக்காக ஒரு மில்லியன் டாலர் நிதி பெற்றது, இந்த சுற்றில், அனுபம் மிட்டல், ரோகித் ஆனந்த், புரு குப்தா, டயர் 1 விசி பண்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வென்சர் முதலீட்டை நாடுவதோடு புதிய சந்தைகளில் நுழையும் வாய்ப்புகளை கண்டறிந்து வருகிறது.
பெங்களூரு போன்ற இடங்களில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ள நிறுவனம் நீடித்த தன்மை பொருள் வளர்ச்சி வாய்ப்புள்ள சர்வதேச சந்தைகளையும் இலக்காகக் கொண்டுள்ளது. இல்ல மின்னணு, நீடித்த தன்மை கொண்ட தனிநபர் பொருட்கள் ஆகிய பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்கிறது.
இந்த விரிவாக்கத்திற்கு ஆதரவாக மேம்பட்ட அனல்டிக்ஸ் மூலம் வாடிக்கையாளர் புரிதல் மற்றும் கையிருப்பு செயல்பாடுகளையும் மேம்படுத்தி வருகிறது. நிறுவனம், பெகோ, பிரெஸ்டோ, சாப்ட்டச், வின்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களோடு போட்டியில் உள்ளது.
“ஒருங்கிணைந்த நீடித்த தன்மை உறுதி, பிளாஸ்டிக் இல்லாத பேக், வெளிப்படைத்தன்மை, விழிப்புணர்வு ஆகியவை மூலம் தனித்து நிற்கிறோம். எங்கள் போட்டியாளர்கள் போல் அல்லாமல், எல்லா செயல்முறையிலும் சுற்றுச்சூழல் நட்பான பொருட்களை பயன்படுத்துகிறோம். மக்கக் கூடிய, மறுசுழற்சி பேக்கில் கவன செலுத்துகிறோம்,” என்கிறார் சிசோடியா.
ஆங்கிலத்தில்: பூஜா மாலிக், தமிழில்: சைபர் சிம்மன்
அப்பாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கனவை ரூ.414 கோடி வருவாய் நிறுவனமாக்கிய மகன்!
Edited by Induja Raghunathan